திருப்புகழ் 678 கார்க்கு ஒத்த மேனி (பாக்கம்)

தாத்தத்த தானதன தாத்தத்த தானதன
தாத்தத்த தானதன ...... தனதான
கார்க்கொத்த  மேனிகடல்  போற்சுற்ற  மானவழி 
காய்த்தொட்டொ  ணாதவுரு  ......  ஒருகோடி 
காக்கைக்கு  நாய்கழுகு  பேய்க்கக்க  மானவுடல் 
காட்டத்தி  னீளெரியி  ......  லுறவானிற் 
கூர்ப்பித்த  சூலனத  னாற்குத்தி  யாவிகொடு 
போத்துக்க  மானகுறை  ......  யுடையேனைக் 
கூப்பிட்டு  சாவருளி  வாக்கிட்டு  நாமமொழி 
கோக்கைக்கு  நூலறிவு  ......  தருவாயே 
போர்க்கெய்த்தி  டாமறலி  போற்குத்தி  மேவசுரர் 
போய்த்திக்கெ  லாமடிய  ......  வடிவேலாற் 
பூச்சித்தர்  தேவர்மழை  போற்றுர்க்க  வேபொருது 
போற்றிச்செய்  வார்சிறையை  ......  விடுவோனே 
பார்க்கொற்ற  நீறுபுனை  வார்க்கொக்க  ஞானபர 
னாய்ப்பத்தி  கூர்மொழிகள்  ......  பகர்வாழ்வே 
பாக்கொத்தி  னாலியலர்  நோக்கைக்கு  வேல்கொடுயர் 
பாக்கத்தில்  மேவவல  ......  பெருமாளே. 
  • கார்க்கு ஒத்த மேனி கடல் போல் சுற்றமான வழி காய்த்து ஒட்டொணாத உரு
    கருமேகத்துக்கு நிகரான உடல் நிறத்தை உடைய கடல் போலப் பரந்த சுற்றத்தார்கள் பொருந்திய இடத்திலே பிறந்து தோன்றி, நிலைத்து நிற்காத வடிவம் இந்த உடல் ஆகும்.
  • ஒரு கோடி காக்கைக்கு நாய் கழுகு பேய்க்கு அக்கமான உடல்
    ஒரு கோடிக் கணக்கான காக்கைகளுக்கும் நாய்களுக்கும், கழுகுகளுக்கும், பேய்களுக்கும் உணவுத் தானியமாக ஆகப்போவது இந்த உடல்.
  • காட்டத்தில் நீள் எரியில் உற வானில் கூர்ப்பித்த சூல(ன்) அதனால் குத்தி ஆவி கொடு போத் துக்கமான குறை உடையேனை
    சுடுகாட்டில் பெரு நெருப்பில் சேரும்படி, ஆகாயத்தில் இருந்து கூர்மை கொண்ட சூலாயுதத்தை உடைய யமன் சூலத்தால் என்னைக் குத்தி என் ஆவியைக் கொண்டு போகின்ற துக்கமான ஒரு குறைபாட்டை உடைய என்னை,
  • கூப்பிட்டு உசா அருளி வாக்கிட்டு நாமம் மொழி கோக்கைக்கு நூல் அறிவு தருவாயே
    அருகே அழைத்து, விசாரித்துத் திருவருள் பாலித்து, (உன்னைப் பாடும்படியான) வாக்கை எனக்கு அருளி, உன் திரு நாமங்களைச் சொற்களில் பாடலாக அமைப்பதற்கு வேண்டிய நூல் அறிவைத் தந்து அருளுக.
  • போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர் போயத் திக்கெலாம் மடிய
    சண்டைக்குச் சளைக்காத யமனைப் போல எதிர்த்து வந்த அசுரர்கள் கூடிப் போய் திசை தோறும் இறக்கும்படியாக,
  • வடி வேலால் பூச் சித்தர் தேவர் மழை போல் துர்க்கவே பொருது
    கூரிய வேலினால் குத்தி, சித்தர்களும் தேவர்களும் மழை போல பூக்களை (போர்க்களத்தில்) மிகப் பொழிய உக்கிரமாகச் சண்டை செய்து,
  • போற்றிச் செய்வார் சிறையை விடுவோனே
    போற்றி வணங்கும் தேவர்களுடைய சிறையை நீக்கியவனே,
  • பாரக் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க ஞான பரனாய்ப் பத்தி கூர் மொழிகள் பகர் வாழ்வே
    பூமியில் வெற்றி தருகின்ற திருநீற்றை அணிகின்ற சிவபெருமானுக்கு, மிக்க ஞானத்தில் சிறந்தவனாக, பக்தியை நன்கு வளர்க்க வல்ல உபதேச மொழிகளைக் கூறிய குரு மூர்த்தியாகிய செல்வமே,
  • பாக் கொத்தினால் இயலர் நோக்கைக்கு
    பாமாலைகளால் இயற்றமிழ் வல்ல புலவர்கள் விரும்பிப் பார்ப்பதற்காக,
  • வேல் கொடு உயர் பாக்கத்தில் மேவ வல பெருமாளே.
    வேல் ஏந்தி, சிறந்த பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்க வல்ல பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com