தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம்
தனனாத் தானன தானம் ...... தனதான
தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந்
தணியாச் சாகர மேழுங் ...... கிரியேழுஞ்
சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்
தரிகூத் தாடிய மாவுந் ...... தினைகாவல்
துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந்
துணையாத் தாழ்வற வாழும் ...... பெரியோனே
துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந்
தொலையாப் பாடலை யானும் ...... புகல்வேனோ
பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படிவேதம்
படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்
பறிகோப் பாளிகள் யாருங் ...... கழுவேறச்
சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி சேர்வெண்
டிருநீற் றாலம ராடுஞ் ...... சிறியோனே
செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்
திருவோத் தூர்தனில் மேவும் ...... பெருமாளே.
- தவர்வாள் தோமர சூலந் தரியாக் காதிய சூரும்
வில், வாள், தண்டாயுதம், சூலம் இவைகளைத் தரித்து, பல கொலைகளைச் செய்த சூரனும், - தணியாச் சாகர மேழுங் கிரியேழும்
வற்றாத கடல்கள் ஏழும், மலைகள் ஏழும், - சருகாக் காய்கதிர் வேலும்
சருகு போலக் காய்ந்து போகும்படி எரித்த ஒளிமிக்க வேலும், - பொருகாற் சேவலு
சண்டை செய்யவல்ல கால்களை உடைய சேவலும், - நீலந் தரிகூத் தாடிய மாவும்
நீல நிறமானதும், நடனம் ஆடவல்லதுமான மயிலாம் குதிரையும், - தினைகாவல் துவர்வாய்க் கானவர் மானும்
தினைப் புனத்தைக் காத்த, பவளம் போன்ற வாயைக்கொண்ட, வேடர் குலத்து மான் போன்ற வள்ளியும், - சுரநாட் டாளொரு தேனும்
தேவலோகத்தாளாகிய ஒப்பற்ற தேன் அனைய தேவயானையும், - துணையாத் தாழ்வற வாழும் பெரியோனே
துணையாகக் கொண்டு குறைவின்றி வாழ்கின்ற கோமானே, - துணையாய்க் காவல்செய்வாயென்று
நீ துணையாகக் காவல் செய்து ரக்ஷிப்பாய் என்று - உணராப் பாவிகள் பாலும்
உணராத பாவிகளிடத்தில் சென்று - தொலையாப் பாடலை யானும் புகல்வேனோ
அழிவில்லாத அருமையான பாடல்களை நானும் சொல்லித் திரியலாமோ? - பவமாய்த்து ஆணது வாகும் பனைகாய்த்தே
பிறப்பை ஒழித்து, ஆணாக இருந்த பனைமரம் காய்த்து - மண நாறும் பழமாய்ப் பார்மிசை வீழும்படி
நறுமணம் வீசும் பழங்களாக பூமியின் மீது விழும்படியாக,* 1 - வேதம் படியாப் பாதகர்
வேதத்தைப் படிக்காத பாதகர்கள் * 2 - பாயன்றி யுடாப் பேதைகள்
பாயைத் தவிர வேறு எந்த ஆடையும் உடுக்காத பேதைகள் * 3 - கேசம் பறி கோப் பாளிகள்
தலைமயிரைப் பிய்த்துப் பறிக்கும் கூத்தாடிச் சமர்த்தர்கள் * 4 ஆகிய சமணர் - யாருங் கழுவேற
எல்லாருமாகக் கழுவில் ஏறும்படியாக, - சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக்கால்
சிவமயமானதும், தேனும் அமுதும் ஊறினது போலத் தித்திக்கும் உனது (திருஞானசம்பந்தரது) திருவாக்கினாலும் தேவாரப் பாடல்களினாலும், - ஒளி சேர்வெண் டிருநீற் றால்
பெருமை வாய்ந்த வெள்ளைத் திருநீற்றாலும், - அமராடுஞ் சிறியோனே
வாதுப் போர் புரிந்த இளையோனே, - செழுநீர்ச் சேய்நதி
செழுமை வாய்ந்த நீரைக் கொண்ட சேயாறு - ஆரங் கொழியாக் கோமளம் வீசும்
முத்துக்களைக் கரையிலே கொட்டும் அழகு நிறைந்த - திருவோத்தூர்தனில் மேவும் பெருமாளே.
திருவோத்தூர்* 5 என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.