திருப்புகழ் · 676வடிவது நீலம் (திருவாலங்காடு)

vadivadhuneelam

தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
தனதன தானந் தாத்த ...... தனதான
வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி
வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம்
மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு
மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன்
படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற
பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப்
பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த
பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே
முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில்
முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே
முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி
முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய்
இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி
யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி
இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி
யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர விடு தூதன்
    உடலின் நிறத்தை கருநீலமாகக் காட்டி, முடிவு காலத்தில் வரும் யமன்அழைத்து வர அனுப்புகின்ற அவனுடைய தூதன்
  • கோட்டி விடு பாசம்
    வளைத்து எறிகின்ற பாசக் கயிற்றினால் (மரணம் அடைகின்ற பொழுது),
  • மகனொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு மதி கெட
    மகனும், மாமன், பாட்டி முதலான உறவினர்களும் (மரண நிலையைக்) கேட்டு புத்தி கலங்கும்படி,
  • மாயம் தீட்டி உயிர் போ முன்
    உலக மாயை அதிகமாகி உயிர் போவதற்கு முன்பு,
  • படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழ வினை பாவம் தீர்த்து
    இந்தப் பூமியில் உனது திருவடிகளைக் காட்டி, உடலுக்கு ஏற்பட்ட நோய்கள், முன் செய்த கர்மப் பயனால் அடைந்துள்ள பழைய வினைகளாகிய பாவங்களை ஒழித்து,
  • உன் அடியேனை பரிவோடு நாளும் காத்து
    உனது அடியேனாகிய என்னை அன்புடன் நாள்தோறும் காத்தளித்து,
  • விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட் கொண்டு அருள்வாயே
    விரிந்த அழகிய தமிழ் மொழியால் அழகு மிக்க மேலான திருப்புகழைப் பாடுவாயாக என்று ஆட்கொண்டு அருள் புரிவாயாக.
  • முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில்
    தலையில் சந்திரனைத் தரித்து, அழகுள்ள திருவாலங்காடு* என்னும் ஊரில்
  • முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே
    முதன்மையான நடனம்** ஆடுகின்ற கூத்தர் நடராஜனின் மகனே,
  • முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி
    நறுமணம் கமழும் மாலையையும் சூட்டி, ஒப்பற்றுத் தனித்து வர யானையையும் (விநாயகரையும்) வரவழைத்து
  • முதல் மற மானின் சேர்க்கை மயல் கூர்வாய்
    முன்பு, வேடர்குலப் பெண்ணாகிய வள்ளியோடு சேர்தலில் மோகம் மிக்கவனே,
  • இடி என வேகம் காட்டி நெடிதரு சூலம் தீட்டி
    இடியைப் போல வேகத்தைக் காட்டி, புலால் நாற்றம் கொண்ட சூலாயுதத்தைக் கையில் எடுத்து,
  • எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி
    எதிர்த்து வந்த சூரன் சண்டைக்கு வர, அவனை எதிர்த்துச் சென்று
  • இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி
    விளங்குகின்ற வேலாயுதத்தை ஆரவாரத்துடன் செலுத்தி, அவன் உடலை இரண்டு பிளவாக அன்று ஆக்கி,
  • இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே.
    தேவர்களுடைய துன்பத்தை நீக்கிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits