தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
தனதன தானந் தாத்த ...... தனதான
புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி
புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே
பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி
புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம்
பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி
பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப்
படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி
பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே
சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க
திருநட மாடுங் கூத்தர் ...... முருகோனே
திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற
ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக்
குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி
குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா
குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில்
குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.
- புவிபுனல் காலுங் காட்டி
மண், நீர், காற்று இவைகளைக் கலந்தும், - சிகியொடு வானுஞ் சேர்த்தி
நெருப்பு, வான் என்ற இரண்டையும் கூடச் சேர்த்தும், - புதுமன மானும் பூட்டி
புதுமை வாய்ந்த மனம் என்ற குதிரையை அதில் பூட்டியும், - இடையூடே பொறிபுலன் ஈரைந்தாக்கி
இவைகளுக்கு இடையே ஐம்பொறிகள், ஐம்புலன்கள் என்ற பத்து இந்திரியங்களையும் இணைத்தும், - கருவிகள் நாலுங் காட்டி
மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு கருவிகளைப் பிணைத்தும், - புகல்வழி நாலைந் தாக்கி
சொல்லப்படுகின்ற துவாரங்களாக (வழிகளாக) ஒன்பது வாயில்களை* உண்டுபண்ணியும், - வருகாயம்
இந்த உடல் ஏற்படுத்தப்படுகிறது. - பவவினை நூறுங் காட்டி
(இத்தகைய உடலுக்குக் காரணமான) பாவ வினைகள் பொடிபட்டு அழிதலைக்காட்டி, - சுவமதி தானுஞ் சூட்டி
நல்ல அறிவை எனக்குப் பொருந்தவைத்து, - பசுபதி பாசங் காட்டி
பசு, பதி, பாசம் (உயிர், இறைவன், தளை) என்ற முப்பொருள்களின் இலக்கணங்களை எனக்கு விளக்கி, - புலமாயப் படிமிசை போவென்று ஓட்டி
ஐம்புலன்களும் மாய்ந்து ஒடுங்க இந்தப் பூமிக்குப் போ என்று என்னை விரைவில் அனுப்பிய நீதான், - அடிமையை நீவந்து ஏத்தி
உன் அடிமையாகிய என்னை இப்போது வந்து வாழ்த்தி, - பரகதி தானுங் காட்டி யருள்வாயே
முக்தியையும் அடைவதற்கான வழியைக் காட்டி அருள்வாயாக. - சிவமய ஞானங் கேட்க
சிவமயமான ஞானோபதேசத்தை உலகோர் கேட்டு மகிழவும், - தவமுநிவோரும் பார்க்க
தவம் நிறைந்த முநிவர்கள்** பார்த்து மகிழவும், - திருநட மாடுங் கூத்தர் முருகோனே
திருநடனம் ஆடும் கூத்தபிரான் சிவனின் குழந்தை முருகனே, - திருவளர் மார்பன் போற்ற
லக்ஷ்மியை மார்பில் வைத்த திருமால் போற்றவும், - திசைமுகன் நாளும் போற்ற
நான்கு திசைகளையும் நோக்கும் முகனான பிரமன் நாள்தோறும் போற்றவும், - ஜெகமொடு வானங் காக்க மயிலேறி
மண்ணுலகையும் விண்ணுலகையும் காக்கும் பொருட்டு மயில் மீதேறி, - குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி
கிரெளஞ்சகிரியுடன் சூரன் தோல்வியுற, ஏழு கடல்களையும், மாமரத்தையும் (சூரனையும்) தாக்கி, - குதர்வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா
எடுத்த கூரிய வேலினை அங்கு போர்க்களத்தில் செலுத்தின குமரேசனே, - குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங் காட்டில்
உலகெலாம் போற்ற பழையனூரிலும்***, திருவாலங்காட்டிலும் வீற்றிருந்து, - குறமகள் பாதம் போற்று பெருமாளே.
குறமகளாகிய வள்ளியின் பாதம் போற்றுகின்ற பெருமாளே.