திருப்புகழ் 674 பொன்றா மன்று (திருவாலங்காடு)

தந்தானந் தாத்தம் தனதன
தந்தானந் தாத்தம் தனதன
தந்தானந் தாத்தம் தனதன ...... தனதான
பொன்றாமன்  றாக்கும்  புதல்வரும் 
நன்றாமன்  றார்க்கின்  றுறுதுணை 
பொன்றானென்  றாட்டம்  பெருகிய  ......  புவியூடே 
பொங்காவெங்  கூற்றம்  பொதிதரு 
சிங்காரஞ்  சேர்த்திங்  குயரிய 
புன்கூடொன்  றாய்க்கொண்  டுறைதரு  ......  முயிர்கோல 
நின்றானின்  றேத்தும்  படிநினை 
வுந்தானும்  போச்சென்  றுயர்வற 
நிந்தாகும்  பேச்சென்  பதுபட  ......  நிகழாமுன் 
நெஞ்சாலஞ்  சாற்பொங்  கியவினை 
விஞ்சாதென்  பாற்சென்  றகலிட 
நின்தாள்தந்  தாட்கொண்  டருள்தர  ......  நினைவாயே 
குன்றால்விண்  டாழ்க்குங்  குடைகொடு 
கன்றாமுன்  காத்துங்  குவலய 
முண்டார்கொண்  டாட்டம்  பெருகிய  ......  மருகோனே 
கொந்தார்பைந்  தார்த்திண்  குயகுற 
மின்தாள்சிந்  தாச்சிந்  தையில்மயல் 
கொண்டேசென்  றாட்கொண்  டருளென  ......  மொழிவோனே 
அன்றாலங்  காட்டண்  டருமுய 
நின்றாடுங்  கூத்தன்  திருவருள் 
அங்காகும்  பாட்டின்  பயனினை  ......  யருள்வாழ்வே 
அன்பால்நின்  தாட்கும்  பிடுபவர் 
தம்பாவந்  தீர்த்தம்  புவியிடை 
அஞ்சாநெஞ்  சாக்கந்  தரவல  ......  பெருமாளே. 
  • பொன்றா மன்று ஆக்கும் புதல்வரும் நன்று ஆம் அன்று
    அழிவில்லாத வகையில் சபையிலே புகழைப் பெருக்கும் மக்களும் கூட நல்லபடியாக நிலைத்த செல்வம் ஆகார்.
  • ஆர்க்கு இன்று உறுதுணை பொன் தான் என்று ஆட்டம் பெருகிய புவியூடே
    யாவருக்கும் இன்று உற்ற துணையாக கருதப்படும் பொருட்செல்வமும் கூட அவ்வாறே நிலையற்றது என்னும் இந்தக் கூத்தாட்டம் நிறைந்த புவி வாழ்க்கையில்,
  • பொங்கா வெம் கூற்றம் பொதிதரு
    கோபித்து வரும் கொடிய யமன் உயிரைக் கொண்டுபோக மறைந்து நிற்கும்போது,
  • சிங்காரம் சேர்த்து இங்கு உயரிய புன்கூடு ஒன்றாய்க் கொண்டு உறைதரும் உயிர்கோல நின்றான்
    நன்கு அலங்காரம் செய்துகொண்டதான மேம்பட்டு நிற்கும் புன்மையான கூடாகிய உடலைக் கொண்டு, அதனுள் இருக்கின்ற உயிர் இடம் கொள்ளுமாறு இங்கு இவன் நிற்கின்றான்,
  • இன்று ஏத்தும் படி நினைவும் தானும் போச்சு என்று
    இன்று உன்னைப் புகழ்ந்து துதிக்கும்படியான நினைவுகூட இவனிடம் இல்லாமல் போய்விட்டது என்று,
  • உயர்வு அற நிந்தாகும் பேச்சு என்பது பட நிகழாமுன்
    மேன்மையற்ற நிந்தனையான பேச்சு என்பது ஏற்பட்டுப் பரவுதற்கு முன்பாக,
  • நெஞ்சால் அஞ்சால் பொங்கிய வினை விஞ்சாது என்பால் சென்று அகலிட
    மனத்தாலும், ஐம்பொறிகளாலும் உண்டாகிப் பெருகும் வினையானது அதிகப்படாமல் என்னிடத்திலிருந்து விட்டு நீங்க,
  • நின்தாள் தந்து ஆட்கொண்டு அருள்தர நினைவாயே
    உன் திருவடிகளைத் தந்து அடியேனை ஆட்கொண்டு திருவருளைத் தர நினைந்தருள வேண்டுகிறேன்.
  • குன்றால் விண் தாழ்க்குங் குடைகொடு கன்று ஆமுன் காத்தும்
    (கோவர்த்தன) மலையை மேகங்களைத் தடுக்கும் குடையாகக் கொண்டு, கன்றுகளையும் பசுக்களையும் முன்னாள் காத்தவரும்,
  • குவலயம் உண்டார் கொண் டாட்டம் பெருகிய மருகோனே
    பூமியை உண்டவருமான திருமாலின் பாராட்டுதலை வெகுவாகப் பெற்ற மருகனே,
  • கொந்தார் பைந் தார்த் திண் குய குறமின் தாள் சிந்தாச் சிந்தையில் மயல் கொண்டே
    பூங்கொத்து நிறைந்த பசுமையான மாலையைத் தரித்துள்ள, திண்ணிய மார்பகங்கள் உடைய வள்ளியாம் குறப் பெண்ணிண் நீங்காத மனத்தில் மயக்கம் கொண்டே,
  • சென்று ஆட்கொண்டு அருளென மொழிவோனே
    அவளிடம் போய் என்னை ஆட்கொண்டு அருள்வாயாக என்று கூறியவனே,
  • அன்று ஆலங் காட்டு அண்டரும் உ(ய்)ய நின்றாடுங் கூத்தன்
    அன்று திருவாலங்காட்டில்*, தேவர்களும் பிழைப்பதற்காக, நின்று நடனம் புரிந்த சிவபெருமானது
  • திருவருள் அங்காகும் பாட்டின் பயனினை அருள்வாழ்வே
    திருவருள் அங்கு கூடும்படியான (தேவாரத்) திருப்பதிகங்களின் பயனை (திருஞானசம்பந்தராக வந்து) அருளிச்செய்த செல்வமே,
  • அன்பால் நின் தாள் கும்பிடுபவர் தம் பாவந் தீர்த்து
    அன்பினால் உன்னுடைய திருவடிகளை வணங்குபவரின் பாவத்தைத் தீர்த்து,
  • அம் புவியிடை அஞ்சா நெஞ்சு ஆக்கந் தரவல பெருமாளே.
    இப்பூமியில் அவர்களுக்கு அஞ்சாத நெஞ்சத்தையும், செல்வங்களையும் தரவல்ல பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com