தானந்தா தனதான தானந்தா தனதான
தானந்தா தனதான ...... தனதான
ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல
மாளம்போர் செயுமாய ...... விழியாலே
ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார
ஆடம்பார் குவிநேய ...... முலையாலே
சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய
வேளங்கார் துடிநீப ...... இடையாலே
சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு
காலந்தா னொழிவேது ...... உரையாயோ
பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத
மாதம்பா தருசேய ...... வயலூரா
பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர
பாசந்தா திருமாலின் ...... மருகோனே
வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும்
வீறங்கே யிருபாலு ...... முறவீறு
வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு
வேலங்கா டுறைசீல ...... பெருமாளே.
- ஆலம் போல் எழு நீலம் மேல் அங்கு ஆய் வரி கோல மாளம்
போர் செயு(ம்) மாய விழியாலே
ஆலகால விஷத்தைப் போல் எழுந்து நீலோற்பல மலருக்கும் மேலானதாக அங்கு அமர்ந்து, ரேகைகள் கொண்டு அழகு வாய்ந்து, கண்டோர் இறந்து போகும்படிச் சண்டை செய்ய வல்ல மாயம் நிறைந்த கண்களாலே, - ஆரம் பால் தொடை சால ஆலும் கோபுர ஆர ஆடம்பார்
குவி நேய முலையாலே
முத்து ஆரம் தம்மேல் மாலையாக மிகவும் அசைகின்ற, கோபுரம் போல் எழுந்து ஆடம்பரமாகக் குவிந்துள்ள, அன்புக்கு இடமான மார்பகங்களாலே, - சாலம் தாழ்வுறும் மால ஏல் அங்கு ஓர் பிடியாய வேள் அங்கு
ஆர் துடி நீப இடையாலே
மிகவும் இளைத்திருப்பதும், ஆசை தரக் கூடியதாகப் பொருந்தி அங்கு ஒரு பிடி அளவே இருப்பதும், விருப்பத்துக்கு அங்கு இடமாய் நிறைந்ததும், உடுக்கை போன்றதுமான இடுப்பாலே, - சாரம் சார்விலனாய் அநேகம் காய் யமன் மீறு காலம் தான்
ஒழிவு ஏது உரையாயோ
(என்னை வாழவிடாமல் செய்யும் விலைமாதரை விட்டு) வேறு புகலிடம் இல்லாதவனாய் இருக்கும் எனக்கு, நிறைய பிறப்புகளில் என் உயிரைக் கவர்ந்து சென்ற யமன் என்னை அதிகாரம் செய்து வென்று செல்லும் காலம் தான் நீங்குதல் என்றைக்கு எனச் சொல்ல மாட்டாயோ? - பால் அம்பால் மண(ம்) நாறுகால் அங்கே இ(ஈ)றிலாத மாது
அம்பா தரு சேயே வயலூரா
பூமியின் இடமெல்லாம் கடல் நீரால் சேர்க்கைதோன்றுங்கால் (பிரளய காலத்தில்), அப்போதும் அழிவில்லாத தேவி அம்பிகை பெற்ற குழந்தையே, வயலூரில் குடிகொண்டுள்ள தெய்வமே, - பாடு அம்பு ஆர் திரி சூல நீடு அந்தக அர வீர பாசம் தா
திருமாலின் மருகோனே
பெருமை வாய்ந்த அம்பு போல கூர்மை வாய்ந்த முத்தலைச் சூலத்தால், மேம்பட்டு நின்ற அந்தகாசுரனை* வருத்தின வீரனாகிய சிவன் மீது அன்பைப் பொழியும் திருமாலின் மருகனே, - வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு
அங்கே இரு பாலும் உற வீறு
வேல் போலவும் அம்பு போலவும் (உள்ள கண்களைக் கொண்ட) குறப் பெண்ணாகிய வள்ளியும், தேவர்கள் வளர்த்த தேவயானை அம்மையும் பெருமிதத்துடன் அங்கே இரண்டு புறமும் பொருந்த விளங்க - வேத அந்தா அபிராம நாத அந்தா
வேதத்தின் முடிவில் இருப்பவனே, அழகனே, ஒலியின் முடிவில் இருப்பவனே, - அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே.
திருவருளைப் பரப்பும் திருவேற்காட்டில்** வீற்றிருக்கும் தூயவனே, பெருமாளே.