தானான தந்த தந்த தானான தந்த தந்த
தானான தந்த தந்த ...... தனதான
சேலால மொன்று செங்கண் வேலாலும் வென்று மைந்தர்
சீர்வாழ்வு சிந்தை பொன்ற ...... முதல்நாடித்
தேன்மேவு செஞ்சொ லின்சொல் தானோதி வந்த ணைந்து
தீராத துன்ப இன்ப ...... முறுமாதர்
கோலாக லங்கள் கண்டு மாலாகி நின்ற னன்பு
கூராமல் மங்கி யங்க ...... மழியாதே
கோள்கோடி பொன்ற வென்று நாடோறு நின்றி யங்கு
கூர்வாய்மை கொண்டி றைஞ்ச ...... அருள்தாராய்
மாலாலு ழன்ற ணங்கை யார்மாம தன்க ரும்பின்
வாகோட ழிந்தொ டுங்க ...... முதல்நாடி
வாழ்வான கந்த முந்த மாறாகி வந்த டர்ந்த
மாசூரர் குன்ற வென்றி ...... மயிலேறீ
மேலாகு மொன்ற மைந்த மேனாடர் நின்றி ரங்க
வேலாலெ றிந்து குன்றை ...... மலைவோனே
வேய்போல வுந்தி ரண்ட தோள்மாதர் வந்தி றைஞ்சு
வேலூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
- சேல் ஆலம் ஒன்றும் செம் கண் வேலாலும் வென்று மைந்தர்
சேல் மீன் போலவும், ஆலகால விஷம் போலவும் உள்ள தம் செவ்விய கண்ணாகிய வேலாலும் ஆண்களை வென்று, - சீர் வாழ்வு சிந்தை பொன்ற முதல் நாடி
அவர்களுடைய சீரும் நல் வாழ்வும் மனமும் குலைந்து அழியும்படி முதலிலேயே திட்டமிட்டு, - தேன் மேவும் செம் சொல் இன் சொல் தான் ஓதி வந்து
அணைந்து
தேன் போன்றதும், செம்மை வாய்ந்ததும், இனியதுமாகிய சொற்களையே பேசிக்கொண்டு வந்து அணைந்து, - தீராத துன்ப(ம்) இன்பம் உறு மாதர் கோலாகலங்கள் கண்டு
மாலாகி
முடிவு இல்லாத துன்பத்தையும் இன்பத்தையும் ஏற்படுத்துகின்ற விலைமாதர்களின் ஆடம்பரங்களைப் பார்த்து காம மயக்கம் கொண்டவனாய், - நின்றன் அன்பு கூராமல் மங்கி அங்கம் அழியாதே
உன் மீது அன்பு பெருகாமல், பொலிவு குன்றி, உடல் அழிந்து போகாமல், - கோள் கோடி பொன்ற வென்று
இடையூறுகள் கோடிக் கணக்கானவைகள் வரினும் அவை அழிந்து போகும்படி வென்று, - நாள் தோறும் நின்று இயங்கும் கூர் வாய்மை கொண்டு
இறைஞ்ச அருள் தாராய்
தினமும் ஒழுக்க வழியில் செல்வதான சிறந்த உண்மைப் பக்தியை மேற்கொண்டு வணங்கும்படியாக உனது திருவருளைத் தந்தருளுக. - மாலால் உழன்று அணங்கை ஆர் மா மதன்
(இன்னது செய்வது என்று தெரியாத) மயக்கத்தால் மனம் அலைப்புண்டு வருத்தத்தை நிரம்பக் கொண்ட சிறந்த மன்மதன் - கரும்பின் வாகோடு அழிந்து ஒடுங்க முதல் நாடி வாழ்வான
கந்த
கையில் கொண்ட கரும்பு வில்லின் அழகுடன் அழிந்து ஒடுங்க, முன்பு நாடி அவனை எரித்த சிவ பெருமானின் செல்வப் புதல்வனான கந்தனே, - முந்த மாறாகி வந்து அடர்ந்த மா சூரர் குன்ற வென்றி மயில்
ஏறீ
முற்பட்டு, பகைமை பூண்டு வந்து நெருங்கி எதிர்த்த பெரிய சூராதிகள் அடங்க வெற்றி மயிலின் மேல் ஏறியவனே, - மேலாகும் ஒன்று அமைந்த மேல் நாடர் நின்று இரங்க
வேலால் எறிந்து குன்றை மலைவோனே
மேலான பரம் பொருளின் தியானம் பொருந்திய விண்ணோர்கள் நின்று பரிதாபித்து வேண்ட, வேலாயுதத்தைச் செலுத்தி கிரெளஞ்ச மலையை எதிர்த்து அழித்தவனே, - வேய் போலவும் திரண்ட தோள் மாதர் வந்து இறைஞ்சு
வேலூர் விளங்க வந்த பெருமாளே.
பச்சை மூங்கில் போல திரட்சி உள்ள தோள்களை உடைய மாதர்கள் வந்து வணங்க, வேலூர் விளங்கும்படி வந்து வீற்றிருக்கும் பெருமாளே.