திருப்புகழ் 668 ஒருவரைச் சிறுமனை (விரிஞ்சிபுரம்*)

தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான
ஒருவரைச்  சிறுமனைச்  சயனமெத்  தையினில்வைத் 
தொருவரைத்  தமதலைக்  கடையினிற்  சுழலவிட் 
டொருவரைப்  பரபரப்  பொடுதெருத்  திரியவிட்  ......  டதனாலே 
ஒருவருக்  கொருவர்சக்  களமையிற்  சருவவிட் 
டுருவுபத்  திரமெடுத்  தறையின்மற்  புரியவிட் 
டுயிர்பிழைப்  பதுகருத்  தளவிலுச்  சிதமெனச்  ......  செயுமானார் 
தருமயற்  ப்ரமைதனிற்  றவநெறிக்  கயலெனச் 
சரியையிற்  கிரியையிற்  றவமுமற்  றெனதுகைத் 
தனமவத்  தினிலிறைத்  தெவருமுற்  றிகழ்வுறத்  ......  திரிவேனைச் 
சகலதுக்  கமுமறச்  சகலசற்  குணம்வரத் 
தரணியிற்  புகழ்பெறத்  தகைமைபெற்  றுனதுபொற் 
சரணமெப்  பொழுதுநட்  பொடுநினைத்  திடஅருட்  ......  டருவாயே 
குருமொழித்  தவமுடைப்  புலவரைச்  சிறையில்வைத் 
தறவுமுக்  கிரம்விளைத்  திடுமரக்  கரைமுழுக் 
கொடியதுர்க்  குணஅவத்  தரைமுதற்  றுரிசறுத்  ......  திடும்வேலா 
குயில்மொழிக்  கயல்விழித்  துகிரிதழ்ச்  சிலைநுதற் 
சசிமுகத்  திளநகைக்  கனகுழற்  றனகிரிக் 
கொடியிடைப்  பிடிநடைக்  குறமகட்  டிருவினைப்  ......  புணர்வோனே 
கருதுசட்  சமயிகட்  கமைவுறக்  கிறியுடைப் 
பறிதலைச்  சமணரைக்  குலமுதற்  பொடிபடக் 
கலகமிட்  டுடலுயிர்க்  கழுவினுச்  சியினில்வைத்  ......  திடுவோனே 
கமுகினிற்  குலையறக்  கதலியிற்  கனியுகக் 
கழையின்முத்  தமுதிரக்  கயல்குதித்  துலவுநற் 
கனவயற்  றிகழ்திருக்  கரபுரத்  தறுமுகப்  ......  பெருமாளே. 
  • ஒருவரைச் சிறு மனைச் சயன மெத்தையினில் வைத்து ஒருவரைத் தமது அலைக் கடையினில் சுழல விட்டு ஒருவரைப் பரபரப்பொடு தெருத் திரிய விட்டு
    ஒருவரை சிறு வீட்டின் படுக்கை மெத்தையில் படுக்க வைத்து, ஒருவரைத் தம் வீட்டு வாசலில் மனக் குழப்பத்தோடு சுழலவிட்டு, இன்னொருவரை மிகுந்த பரபரப்போடு வீதியில் அலையும்படியாக விட்டு,
  • அதனாலே ஒருவருக்கு ஒருவர் சக்களமையில் சருவ விட்டு உருவு பத்திரம் எடுத்து அறையில் மல் புரிய விட்டு உயிர் பிழைப்பது கருத்து அளவில் உச்சிதம் என செ(ய்)யும் மானார்
    அத்தகையச் செயலாலே ஒருவருக்கு ஒருவர் போட்டிப் பகைமையில் போராட விட்டு, வாளை உருவி எடுத்து அறையில் மல் யுத்தம் செய்யும்படி வைத்து, உயிர் பிழைப்பதே யோசித்துப் பார்க்கில் தக்கது என்று எண்ணச் செய்கின்ற பொது மகளிர்
  • தரும் மயல் ப்ரமை தனில் தவ நெறிக்கு அயல் என சரியையில் கிரியையில் தவமும் அற்று எனது கை தனம் அவத்தினில் இறைத்து எவரும் உற்று இகழ்வுற திரிவேனை
    தருகின்ற காம இச்சை மயக்கத்தினால் தவ வழிக்கு மாறுபட்டவனாகி, சரியை மார்க்கத்திலும், கிரியை மார்க்கத்திலும்* செய்வதற்குள்ள தவ ஒழுக்கம் இல்லாது போய், எனது கையிலிருந்த பொருளை வீணாகச் செலவழித்து, ஊரில் உள்ள யாவரும் இழித்துப் பேசும்படி திரிகின்ற என்னை,
  • சகல துக்கமும் அற சகல சற் குணம் வர தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன் சரணம் எப்பொழுது நட்பொடு நினைந்திட அருள் தருவாயே
    எல்லா வித துக்கங்களும் நீங்கவும், எல்லா வித நற் குணங்களும் கூடவும், பூமியில் நான் புகழ் அடையவும், மதிப்பைப் பெற்று உன்னுடைய அழகிய திருவடிகளை எப்போதும் அன்புடன் நான் நினைக்கும்படி உனது திருவருளைத் தந்தருள்க.
  • குரு மொழி தவம் உடை புலவரை சிறையில் வைத்து அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை முழு கொடிய துர்க்குண அவத்தரை முதல் துரிசு அறுத்திடும் வேலா
    தங்களுடைய குருவான பிரஹஸ்பதி சொன்ன சொற்படி தவநெறியில் இருந்த தேவர்களை சிறைப்படுத்தி மிகவும் கொடுமை செய்து வந்த அசுரர்களை, முற்றிலும் கொடிய கெட்ட குணமுடைய வீணர்களை, முன்பு அவர்கள் செய்த குற்றங்களுக்காக அறுத்து எறிந்த வேலாயுதனே,
  • குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி கொடி இடை பிடி நடை குற மகள் திருவினை புணர்வோனே
    குயில் போன்ற மொழியையும், கயல் மீன் போன்ற கண்களையும், பவளம் போன்ற வாயிதழையும், வில் போன்ற நெற்றியையும், சந்திரன் போன்ற முகத்தையும், புன்னகையையும், கரு மேகம் போன்ற கூந்தலையும், மலை போன்ற மார்பகங்களையும், கொடி போன்ற இடையையும், பெண் யானை போன்ற நடையையும் கொண்ட குற மகளாகிய வள்ளியை அணைபவனே,
  • கருது சட் சமயிகட்கு அமைவுற கிறி உடை பறி தலை சமணரை குல முதல் பொடிபட கலகமிட்டு உடல் உயிர் கழுவின் உச்சியினில் வைத்திடுவோனே
    ஆராய்ச்சி செய்துள்ள ஆறு சமயத்து அறிஞரையும் வீழ்த்தும் தந்திரம் உடையவர்களும், மயிர் பறிபடும் தலையருமான சமணர்களின் குலம் முன்பு பொடிபட்டு ஒடுங்க, வாதப் போர் செய்து அவர்களின் உயிருள்ள உடலை கழு முனையில் (திருஞானசம்பந்தராக வந்து) வைத்திட்டவனே,
  • கமுகினின் குலை அற கதலியின் கனி உக கழையின் முத்து உதிர கயல் குதித்து உலவு நல் கன வயல் திகழ் திரு கரபுரத்து அறுமுக பெருமாளே.
    கமுக மரத்தின் குலை தன் மீது விழுதலால் வாழை மரத்தினின்றும் பழங்கள் விழ, (அந்தப் பழங்கள் தன் மீது விழும் அதிர்ச்சியால்) கரும்பினின்றும் முத்துக்கள் விழ, கயல் மீன்கள் விளையாடும் நல்ல பெருமை வாய்ந்த வயல்கள் திகழ்கின்ற திருக்கரபுரம்** என்ற பெயருள்ள விரிஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com