திருப்புகழ் 666 அதிக ராய்ப்பொரு (வேலூர்)

தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன ...... தந்ததான
அதிக  ராய்ப்பொரு  ளீவார்  நேர்படில் 
ரசனை  காட்டிக  ளீயார்  கூடினும் 
அகல  வோட்டிகள்  மாயா  ரூபிகள்  ......  நண்புபோலே 
அசட  ராக்கிகள்  மார்மே  லேபடு 
முலைகள்  காட்டிகள்  கூசா  தேவிழும் 
அழகு  காட்டிக  ளாரோ  டாகிலு  ......  மன்புபோலே 
சதிர  தாய்த்திரி  வோயா  வேசிகள் 
கருணை  நோக்கமி  லாமா  பாவிகள் 
தருமு  பேட்சைசெய்  தோஷா  தோஷிகள்  ......  நம்பொணாத 
சரச  வார்த்தையி  னாலே  வாதுசெய் 
விரக  மாக்கிவி  டாமூ  தேவிகள் 
தகைமை  நீத்துன  தாளே  சேர்வதும்  ......  எந்தநாளோ 
மதுரை  நாட்டினி  லேவாழ்  வாகிய 
அருகர்  வாக்கினி  லேசார்  வாகிய 
வழுதி  மேற்றிரு  நீறே  பூசிநி  .....  மிர்ந்துகூனும் 
மருவு  மாற்றெதிர்  வீறே  டேறிட 
அழகி  போற்றிய  மாறா  லாகிய 
மகிமை  யாற்சமண்  வேரோ  டேகெட  ......  வென்றகோவே 
புதிய  மாக்கனி  வீழ்தே  னூறல்கள் 
பகலி  ராத்திரி  யோயா  ஆலைகள் 
புரள  மேற்செல  வூரூர்  பாயஅ  ......  ணைந்துபோதும் 
புகழி  னாற்கடல்  சூழ்பார்  மீதினி 
லளகை  போற்பல  வாழ்வால்  வீறிய 
புலவர்  போற்றிய  வேலூர்  மேவிய  ......  தம்பிரானே. 
  • அதிகராய்ப் பொருள் ஈவார் நேர் படில் ரசனை காட்டிகள் ஈயார் கூடினும் அகல ஓட்டிகள் மாயா ரூபிகள்
    அதிகமாகப் பொருள் கொடுப்பவர் கிடைத்தால் இன்பம் காட்டுவார்கள். பொருள் கொடாதவர் கூட வந்தால் அவர்களைத் தம்மை விட்டு நீங்கும்படி ஓட்டுபவர்கள். மாயையே ஒர் உருவம் ஆனவர்கள்.
  • நண்பு போலே அசடர் ஆக்கிகள் மார் மேலே படு முலைகள் காட்டிகள் கூசாதே விழும் அழகு காட்டிகள்
    நட்பு பாராட்டுவது போல (வந்தவர்களை) மூடர்களாக ஆக்குபவர்கள். மார்பு மேலே உள்ள மார்பகத்தைக் காட்டுபவர்கள். கூச்சம் இல்லமால் மேலே விழுந்து தமது அழகைக் காட்டுபவர்கள்.
  • ஆரோடாகிலும் அன்பு போலே சதிர் அதாய்த் திரி ஓயா வேசிகள் கருணை நோக்கம் இ(ல்)லா மா பாவிகள் தரும் உபேட்சை செய் தோஷா தோஷிகள்
    யாராக இருந்தாலும் அன்பு உள்ளவர்கள் போல் சாமர்த்தியமாக எப்போதும் திரியும் ஓய்வில்லாத விலைமாதர்கள். அருள் நோக்கம் என்பதே இல்லாத பெரிய பாவிகள். வேண்டும் என்றே வந்தவரைப் புறக்கணிப்பவர்கள். பலவித குற்றம் (பாவம்) செய்பவர்கள்.
  • நம்ப ஒணாத சரச வார்த்தையினாலே வாது செய் விரகம் ஆக்கி விடா மூதேவிகள் தகைமை நீத்து உன தாளே சேர்வதும் எந்த நாளோ
    நம்புதற்கு முடியாத பக்குவ வார்த்தைகளைப் பேசி வாது செய்து, காமத்தை மூட்டி, போக ஒட்டாது பிடிக்க வல்ல மூதேவிகள். (இத்தகையோருடன்) கூடுவதை ஒழித்து, உன்னுடைய திருவடியைச் சேரும் நாள் எனக்குக் கிட்டுமோ?
  • மதுரை நாட்டினிலே வாழ்வாகிய அருகர் வாக்கினிலே சார்வாகிய வழுதி மேல் திரு நீறே பூசி நிமிர்ந்து கூனும்
    மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டில் வாழ்ந்திருந்த சமணர்களின் கொள்கைகளில் ஈடுபட்டிருந்த பாண்டிய மன்னன் மீது திரு நீற்றைத் தடவி, அவனுடைய கூன் நிமிரச் செய்தும்,
  • மருவும் ஆற்று எதிர் வீறு ஏடு ஏறிட அழகி போற்றிய மாறால் ஆகிய மகிமையால் சமண் வேரோடே கெட வென்ற கோவே
    அருகில் பாயும் வைகை ஆற்று வெள்ள நீரை எதிர்த்து இட்ட ஏடுகள் மேற் செல்லச் செய்தும், அழகு நிறைந்த பாண்டி மா தேவியாகிய மங்கையர்க்கரசி உன்னைத் துதித்துப் போற்றிய பக்தியின் சிறப்பாலும், இந்த நிகழ்ச்சியின் சிறப்பாலும், அந்தச் சமணர்கள் வேருடன் அழியும்படி வெற்றி கொண்ட (திருஞானசம்பந்தத்) தலைவனே,
  • புதிய மாக் கனி வீழ் தேன் ஊறல்கள் பகல் இராத்திரி ஓயா ஆலைகள் புரள மேல் செல ஊரூர் பாய அணைந்து போதும் புகழினால்
    புதிய மாம்பழங்களினின்று விழுகின்ற தேன் ஊறல்கள், பகலிலும், இரவிலும் ஓயாது வேலை செய்யும் கரும்பாலைகள் மேலே புரண்டு மேற் சென்று அயலில் உள்ள ஊர்களிலும் பாயும்படி சேர்ந்து போகின்ற புகழ் பெற்ற காரணத்தால்,
  • கடல் சூழ் பார் மீதினில் அளகை போல் பல வாழ்வால் வீறிய புலவர் போற்றிய வேலூர் மேவிய தம்பிரானே.
    கடல் சூழ்ந்த இப் பூமியில் பல வகையான வாழ்வால் மேம்பட்ட பண்டிதர்களால் அளகாபுரி* போலப் போற்றப்பட்ட வேலூரில் வீற்றிருக்கும் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com