தனதன தானந் தனதன தானந்
தனதன தானந் ...... தனதான
நசையொடு தோலுந் தசைதுறு நீரும்
நடுநடு வேயென் ...... புறுகீலும்
நலமுறு வேயொன் றிடஇரு கால்நன்
றுறநடை யாருங் ...... குடிலூடே
விசையுறு காலம் புலனெறி யேவெங்
கனலுயிர் வேழந் ...... திரியாதே
விழுமடி யார்முன் பழுதற வேள்கந்
தனுமென வோதும் ...... விறல்தாராய்
இசையுற வேயன் றசைவற வூதும்
எழிலரி வேழம் ...... எனையாளென்
றிடர்கொடு மூலந் தொடர்வுட னோதும்
இடமிமை யாமுன் ...... வருமாயன்
திசைமுக னாருந் திசைபுவி வானுந்
திரிதர வாழுஞ் ...... சிவன்மூதூர்
தெரிவையர் தாம்வந் தருநட மாடுந்
திருவல மேவும் ...... பெருமாளே.
- நசையொடு தோலும் தசை துறு நீரும் நடு நடுவே என்பு
உறு கீலும் நலம் உறு வேய் ஒன்றிட
ஈரத்துடன் தோலும் மாமிசமும் அடைந்துள்ள நீரும் இடையிடையே எலும்புகளைப் பூட்டியுள்ள இணைப்புக்களும் நலம் உறும் வண்ணம் பொருந்தி ஒன்று சேர, - இரு கால் நன்றுற நடை ஆரும் குடிலூடே
இரண்டு கால்களும் நன்கு இணைக்கப் பெற்று நடை நிரம்பிய குடிசையாகிய இந்த உடலுக்குள், - விசை உறு காலம் புலன் நெறியே வெம் கனல் உயிர் வேழம்
திரியாதே
வேகமான வாழ்க்கை செல்லும் காலத்தில், ஐம்புலன்களின் வழியாக கொடிய தீப் போன்றதும், மதம் நிறைந்த யானை போன்றதுமான அந்த ஐம்பொறிகளும் அலையாமல், - விழும் அடியார் முன் பழுது அற வேள் கந்தனும் என ஓதும்
விறல் தாராய்
உனது திருவடியில் விழும் அடியார்களின் முன், குற்றம் இல்லாத வகையில், வேளே கந்தனே என்று ஓதும் சக்தியைத் தந்தருளுக. - இசை உறவே அன்று அசைவு அற ஊதும் எழில் அரி
முன்பு, இனிய இசை பொருந்தி அசையாமல் நிற்கும்படி, புல்லாங்குழலை ஊத வல்ல அழகிய கண்ணனும், - வேழம் எனை ஆள் என்று இடர் கொடு மூலம் தொடர்வு
உடன் ஓதும் இடம்
கஜேந்திரனாகிய யானை என்னை ஆட்கொள்வாய் ஆதிமூலமே என்று துன்பத்துடனும் பேரன்புடனும் கூச்சலிட்டு அழைத்த இடத்துக்கு, - இமையா முன் வரும் மாயன்
கண்ணை இமைக்கும் நேரத்தில் வந்து உதவிய மாயனுமாகிய திருமாலும், - திசை முகனாரும் திசை புவி வானும்
நான் முகனும், பல திசைகளில் உள்ளவர்களும், உலகில் உள்ளவர்களும், வானுலகத்தில் உள்ளவர்களும் - திரிதர வாழும் சிவன் மூதூர்
வலம் வந்து சூழ வாழ்கின்ற சிவபெருமானுடைய பழைய ஊரும், - தெரிவையர் தாம் வந்து அரு நடமாடும் திருவலம் மேவும்
பெருமாளே.
மாதர்கள் வந்து அருமையான நடனம் புரியும் ஊருமாகிய திருவ(ல்)லத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.