தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த
தானாதன தானந் தானன ...... தந்ததான
வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று
வாராய்பதி காதங் காதரை ...... யொன்றுமூரும்
வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து
மாலாய்மட லேறுங் காமுக ...... எம்பிரானே
இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று
லீலாசல மாடுந் தூயவன் ...... மைந்தநாளும்
இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து
நூறாயிர பேதஞ் சாதமொ ...... ழிந்தவாதான்
கதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி வித்தநந்த
கோபாலம கீபன் தேவிம ...... கிழ்ந்துவாழக்
கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப் பயந்து
ஆகாயக பாலம் பீறநி ...... மிர்ந்துநீள
விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
நாராயண மாமன் சேயைமு ...... னிந்தகோவே
விளைவய லூடிடை வளைவிளை யாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த
வேலாயுத மேவுந் தேவர்கள் ...... தம்பிரானே.
- வதன சரோருக நயன சிலீமுக
தாமரை போன்ற முகமும், அம்பு போன்ற கண்களும் உடைய - வள்ளி புனத்தில் நின்று
வள்ளியின் தினைப்புனத்தில் போய் நின்று கொண்டு, - வாராய்பதி காதங் காதரை
நீ என்னுடன் வருவாயாக, என் ஊர் (திருத்தணிகை) இரண்டரை காதம் தூரம்தான் (25 மைல் ) , - ஒன்றுமூரும் வயலும் ஒரே இடை
என் ஊரும், உன்னூராகிய வள்ளிமலையும் நெருங்கி உள்ளன, இடையில் ஒரே ஒரு வயல்தான் உள்ளது, - எனவொரு காவிடை வல்லபம் அற்றழிந்து
என்று கூறி, ஒரு சோலையிலே உன் வலிமை எல்லாம் இழந்து, - மாலாய் மடல் ஏறுங் காமுக எம்பிரானே
வள்ளி மீது மிக்க மயக்கம் கொண்டு மடல்* ஏறிய மோகம் நிறைந்த எம்பெருமானே, - இதவிய காண் இவை ததையென
இதோ இவ்வுணவு இனிப்புடன் கலந்து இருப்பதைப் பார் என்று கூறிய - வேடுவன் எய்திடும் எச்சில் தின்று
வேடுவன் கண்ணப்பன் சேர்ப்பித்த எச்சில் உணவைத் தின்று - லீலாசலம் ஆடுந் தூயவன் மைந்த
(கண்ணில் ரத்தத்துடன்) திருவிளையாடல் ஆடிய சுத்த சிவன் மகனே, - நாளும் இளையவ
எப்போதும் இளமையுடன் இருப்பவனே என்றும், - மூதுரை மலைகிழவோனென
பழைய நூல் திருமுருகாற்றுப்படையில் சொன்னபடி மலை கிழவோனே (மலைகளுக்கு உரியவனே) என்றும் ஓதினால், - வெள்ள மெனக் கலந்து
ஒரு பெரிய எண்ணிக்கையாகக் கூடி - நூறாயிர பேதஞ் சாதம் ஒழிந்தவாதான்
நூறாயிர பேதமாக** வருவதாகிய பிறப்புக்கள் ஒழிந்து போயினவே, இது பெரிய அற்புதந்தான். - கதை கன சாப
(கெளமோதகி என்னும்) கதாயுதமும், பெருமை பொருந்திய சாரங்கம் என்னும் வில்லும், - திகிரி வளை
சுதர்சனம் என்னும் சக்கரமும், பாஞ்ச சன்யம் என்னும் சங்கும், - வாளொடு கை வசிவித்த
நாந்தகம் என்னும் வாளும் (ஆகிய பஞ்ச ஆயுதங்களை) கைகளில் ஏந்தியவனும், - நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்துவாழ
நந்த கோபாலன் என்ற கோகுலத்து மன்னனது தேவி யசோதை மகிழ்ந்து வாழ - கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன்
உரலோடு கட்டப்பெற்ற கயிறோடு அந்த உரலை இழுத்தவண்ணம் உலாவியனும், வெண்ணெய் திருடும் கள்வனும், - அறப் பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்துநீள
மிகவும் பயப்படும்படியாக ஆகாயத்தையும் தனது தலை கிழிக்கும்படி உயரமாக வளர்ந்து - விதரண மாவலி வெருவ
கொடையிற் சிறந்த மகாபலிச் சக்கரவர்த்தி அஞ்சும்படி - மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
மகா விரதசீல வாமனனாய் பகிரங்கமாக எதிரில் நின்றவனும் - நாராயண மாமன் சேயை முனிந்தகோவே
ஆகிய நாராயண மூர்த்தியாம் உன் மாமனின் மகனாகிய பிரமனைக் கோபித்த தலைவனே, - விளைவயலூடிடை வளைவிளையாடிய
விளைச்சல் உள்ள வயல்களின் இடையில் சங்குகள் தவழ்ந்தாடும் - வெள்ளிநகர்க் கமர்ந்த வேலாயுத
வெள்ளிநகர்*** என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வேலாயுதனே, - மேவுந் தேவர்கள் தம்பிரானே.
உன்னைத் துதிக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனே.