தய்யதன தான தய்யதன தான
தய்யதன தான ...... தனதான
பையரவு போலு நொய்யஇடை மாதர்
பையவரு கோலந் ...... தனைநாடிப்
பையலென வோடி மையல்மிகு மோக
பவ்வமிசை வீழுந் ...... தனிநாயேன்
உய்யவொரு கால மையவுப தேச
முள்ளுருக நாடும் ...... படிபேசி
உள்ளதுமி லாது மல்லதவி ரோத
உல்லசவி நோதந் ...... தருவாயே
வையமுழு தாளு மையகும ரேச
வள்ளிபடர் கானம் ...... புடைசூழும்
வள்ளிமலை வாழும் வள்ளிமண வாள
மையுததி யேழுங் ...... கனல்மூள
வெய்யநிரு தேசர் சையமுடன் வீழ
வெல்லயில்வி நோதம் ...... புரிவோனே
வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே.
- பை அரவு போலும் நொய்ய இடை மாதர் பைய வரு கோலம்
தனை நாடிப் பையல் என ஓடி மையல் மிகு மோக பவ்வம்
மிசை வீழும் தனி நாயேன்
படம் கொண்ட பாம்பைப் போன்ற நுண்ணிய இடையை உடைய விலைமாதர்கள் சாவகாசமாகச் செய்து கொள்ளும் அலங்காரங்களை விரும்பி அற்பமான பையன் என்னும்படி ஓடி மோகம் மிக்க காமக் கடலில் விழுகின்ற, தனித்து நிற்கும் நாய் போன்றவனாகிய நான் - உய்ய ஒரு காலம் ஐய உபதேசம் உள் உருக நாடும்படி பேசி
உள்ளதும் இ(ல்)லாதும் அல்ல(லா)த அவிரோத உல்ல(லா)ச
விநோதம் தருவாயே
பிழைப்பதற்கு ஒரு காலத்தில், ஐயனே, உமது உபதேசத்தை என் மனம் உருகி விரும்பும்படி ஓதி, உள்ளது என்றும் இல்லாதது என்றும், (இவை இரண்டும்) அல்லாததும் மாறுபாடு இல்லாததும், உள்ளக் களிப்பை தருவதும் ஆகிய வியப்பைத் தந்து அருளுக. - வையம் முழுது ஆளும் ஐய குமரேச வள்ளி படர் கானம் புடை
சூழும் வள்ளி மலை வாழும் வள்ளி மணவாளா
உலகம் முழுவதும் ஆள்கின்ற ஐயனே, குமரேசனே, வள்ளிக் கொடி படர்ந்துள்ள காடுகள் பக்கத்தில் சூழ்ந்துள்ள வள்ளி மலையில் வாழ்கின்ற வள்ளி நாயகியின் கணவனே, - மை உததி ஏழும் கனல் மூள வெய்ய நிருதேசர் சையமுடன்
வீழ வெல்ல அயில் விநோதம் புரிவோனே
கரிய கடல்கள் ஏழிலும் நெருப்பு எழ, கொடிய அசுரத் தலைவர்கள் (அவர்கள் இருந்த கிரவுஞ்சம், ஏழு கிரி ஆகிய) மலைகளுடன் மாண்டு விழ, வெற்றி கொண்ட வேலாயுதத்துடன் திருவிளையாடல் புரிந்தவனே, - வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளி நகர் மேவும்
பெருமாளே.
வெண்ணிறத்து அழகிய மாடங்கள் நிறைந்த, லக்ஷ்மிகரம் பொருந்திய வெள்ளி நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே.