தய்யதன தான தய்யதன தான
தய்யதன தான ...... தனதான
இல்லையென நாணி யுள்ளதின் மறாம
லெள்ளினள வேனும் ...... பகிராரை
எவ்வமென நாடி யுய்வகையி லேனை
யெவ்வகையு நாமங் ...... கவியாகச்
சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத
தொல்லைமுத லேதென் ...... றுணரேனைத்
தொய்யுமுடல் பேணு பொய்யனைவி டாது
துய்யகழ லாளுந் ...... திறமேதோ
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
மையவரை பாகம் ...... படமோது
மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்
வள்ளிமலை வாழுங் ...... கொடிகோவே
வெல்லுமயி லேறு வல்லகும ரேச
வெள்ளிலுட னீபம் ...... புனைவோனே
வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே.
- இல்லையென நாணி
இல்லை என்று கூற வெட்கப்பட்டு, - உள்ளதின் மறாமல்
உள்ள பொருளின் அளவுக்கு மறுக்காமல், - எள்ளினள வேனும் பகிராரை
ஓர் எள்ளின் அளவாவது பகிர்ந்து கொடுக்காதவர்களை, - எவ்வமென நாடி
வெறுக்கத்தக்கவர்கள் என்று ஆராய்ந்தறிந்து - உய்வகையி லேனை
பிழைக்கும் வழி இல்லாத என்னை, - எவ்வகையு நாமங் கவியாக
எந்த வகையிலாவது உன் திருநாமங்களைக் கவிதையாக - சொல்லவறி யேனை
அமைத்துச் சொல்லும் அறிவில்லாத என்னை, - எல்லைதெரியாத தொல்லைமுதல் ஏதென்றுணரேனை
முடிவெல்லை காண முடியாத பழைய மூலப்பொருள் இன்னது என்று உணரும் அறிவில்லாத என்னை, - தொய்யுமுடல் பேணு பொய்யனை
இளைத்துத் துவளும் உடம்பைப் போற்றும் பொய்யனாகிய என்னை, - விடாது துய்யகழலாளுந் திறமேதோ
புறக்கணித்து விட்டுவிடாமல் பரிசுத்தமான உன் திருவடிகளால் ஆண்டருளும் வழி ஏதேனும் உண்டோ, யான் அறியேன். - வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வலிமை பொருந்திய அசுரர்கள் மாளவும், நல்ல தேவர்கள் வாழவும், - மையவரை பாகம்பட மோது
குற்றமுள்ள கிரெளஞ்சகிரி கூறுபட்டழிய மோதியவனே, - மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்
இருண்ட சோலைகள், செவ்விய குளிர்ந்த மலைகள் உடைய - வள்ளிமலை வாழுங் கொடிகோவே
வள்ளிமலையில் வாழும் குறக்குலக் கொடியாகிய வள்ளியின் மணாளனே, - வெல்லுமயி லேறு வல்லகுமரேச
வெல்லும் திறல் படைத்த மயில் மீது ஏறவல்ல குமரேசா, - வெள்ளிலுட னீபம் புனைவோனே
விளாத் தளிருடன் கடப்பமலரை அணிபவனே, - வெள்ளிமணி மாட மல்கு திரு வீதி
வெண்ணிற அழகிய மாடங்கள் நிறைந்த செல்வச் செழிப்புள்ள வீதிகளை உடைய - வெள்ளிநகர் மேவும் பெருமாளே.
வெள்ளிகரம் என்ற வெள்ளிநகரில் அமர்ந்த பெருமாளே.