தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய ...... தனதான
தொய்யில் செய்யில் நொய்யர் கையர்
தொய்யு மைய ...... இடையாலுந்
துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல்
சொல்லு கள்ள ...... விழியாலும்
மைய செவ்வி மவ்வல் முல்லை
மல்கு நல்ல ...... குழலாலும்
மையல் கொள்ள எள்ளல் செய்யும்
வல்லி சொல்லை ...... மகிழ்வேனோ
செய்ய துய்ய புள்ளி நவ்வி
செல்வி கல்வ ...... ரையிலேனல்
தெய்வ வள்ளி மையல் கொள்ளு
செல்வ பிள்ளை ...... முருகோனே
மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய
வெள்ளை வெள்ளி ...... நகர்வாழ்வே
வெய்ய சைய வில்லி சொல்லை
வெல்ல வல்ல ...... பெருமாளே.
- தொய்யில் செய்யில் நொய்யர் கையர் தொய்யும் ஐய
இடையாலும்
மார்பின் மீது சந்தனத்தால் எழுதினாலே நெகிழ்ந்து தளர்பவர்கள் போல பாசாங்கு செய்யும் கீழ் மக்களான விலைமாதரின் இளைத்துள்ள, வியக்கத் தக்க (நுண்ணிய) இடையாலும், - துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு(ம்) கள்ள
விழியாலும்
எழுந்து பாய்ந்து வள்ளைக் கொடிபோன்று காது வரை நீளும், மனத்தில் நினைந்துள்ள வஞ்சக எண்ணத்தை வெளிப்படுத்தும், திருட்டுக் கண்களாலும், - மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கு(ம்) நல்ல குழலாலும்
மை போன்று கரு நிறம் கொண்டதும், செம்மை வாய்ந்த காட்டு மல்லிகை, முல்லை நிறைந்துள்ள நல்ல கூந்தலாலும், - மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை
மகிழ்வேனோ
காம இச்சை கொள்ளும்படியாக (என்னை) இகழ்கின்ற பெண்களின் பேச்சுக்கு மகிழ்ச்சி கொள்வேனோ? - செய்ய துய்ய புள்ளி நவ்வி செல்வி கல் வரையில் ஏனல்
செந்நிறத்தவனே, தூயவனே, பெண் மான் போன்ற லக்ஷ்மியின் குமாரியும், கல் நிறைந்த வள்ளி மலையில் தினைப் புனத்தைக் காவல் செய்தவளுமான - தெய்வ வள்ளி மையல் கொள்ளு(ம்) செல்வ பிள்ளை
முருகோனே
தெய்வ வள்ளி மேல் மோகம் கொண்ட செல்வப் பிள்ளையான முருகனே, - மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய வெள்ளை வெள்ளி நகர்
வாழ்வே
மெய்யர்க்கு மெய்யனே, பொய்யர்க்குப் பொய்யனே, கள்ளம் இல்லாத நகராகிய வெள்ளிகரம் என்னும் தலத்தில் வாழும் செல்வனே, - வெய்ய சையவல்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே.
விரும்பத் தக்க கயிலை மலை வாசியாகிய சிவபெருமானுக்கு பிரணவத்தின் பொருளை இன்னதென்று விளக்கி வெற்றியைக் கொண்ட பெருமாளே.