திருப்புகழ் 660 கள்ளம் உள்ள (வெள்ளிகரம்)

தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய ...... தனதான
கள்ள  முள்ள  வல்ல  வல்லி 
கையி  லள்ளி  ......  பொருளீயக் 
கல்லு  நெல்லு  வெள்ளி  தெள்ளு 
கல்வி  செல்வர்  ......  கிளைமாய 
அள்ளல்  துள்ளி  ஐவர்  செல்லு 
மல்லல்  சொல்ல  ......  முடியாதே 
ஐய  ரைய  மெய்யர்  மெய்ய 
ஐய  செய்ய  ......  கழல்தாராய் 
வள்ளல்  புள்ளி  நவ்வி  நல்கு 
வள்ளி  கிள்ளை  ......  மொழியாலே 
மைய  லெய்து  மைய  செய்யில் 
வையில்  வெள்வ  ......  ளைகளேற 
மெள்ள  மள்ளர்  கொய்யு  நெல்லின் 
வெள்ள  வெள்ளி  ......  நகர்வாழ்வே 
வெய்ய  சைய  வில்லி  சொல்லை 
வெல்ல  வல்ல  ......  பெருமாளே. 
  • கள்ளம் உள்ள வல்ல வல்லி கையில் அள்ளி பொருள் ஈய
    கள்ளத் தனம் வாய்ந்த, சாமர்த்தியமான ஒரு விலைமகளின் கையிலே (நான்) அள்ளிப் பொருள்களைக் கொடுப்பதால்,
  • கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு கல்வி செல்வர் கிளை மாய
    (என்னுடைய) நவரத்தினக் கற்களும், நெற் குவியல்களும், வெள்ளிப் பொருள்களும், தெளிந்த கல்விச் செல்வமும், செல்வமுள்ள சுற்றத்தார்களும், எல்லாம் அழிந்து விலக,
  • அள்ளல் துள்ளி ஐவர் செல்லும் அல்லல் சொல்ல முடியாதே
    (மாயைச்) சேற்றிலிருந்து குதித்து ஐம்புலன்கள் செலுத்துகின்ற துன்பம் விவரிக்க முடியாது.
  • ஐயர் ஐய மெய்யர் மெய்ய ஐய செய்ய கழல் தாராய்
    முனிவர்களுக்கு முனிவனே, மெய்யர்க்கு மெய்யனே, அழகிய, சிவந்த உனது திருவடியைத் தாராய்.
  • வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே மையல் எய்தும் ஐய
    வள்ளலே, புள்ளிகளை உடைய பெண் மான் (லக்ஷ்மி) ஈன்ற வள்ளி நாயகியாகிய கிளியின் மொழிகளைக் கேட்டு, மோகம் கொண்ட ஐயனே,
  • செய்யில் வையில் வெள் வளைகள் ஏற
    வயல்களில், புல்லில் வெள்ளைச் சங்குகள் நிறைந்திட,
  • மெள்ள மள்ளர் கொய்யு(ம்) நெல்லின் வெள்ள வெள்ளிநகர் வாழ்வே
    வயலில் உழவர்கள் மெதுவாக அறுவடை செய்த நெல் மிக்க உள்ள வெள்ளிகர* நகரத்தில் வாழ்பவனே,
  • வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே.
    விரும்புதற்குரிய (மேரு) மலையை வில்லாக வளைத்த சிவபெருமானுக்கு, பிரணவ மொழியின் பொருளை (அவருக்குக் குருவாயிருந்து) வெற்றியுடன் மொழிய வல்ல பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com