தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
மடிபிடிய தாக நின்று ...... தொடர்போது
மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று
வசைகளுட னேதொ டர்ந்து ...... அடைவார்கள்
கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து
கரியபுன லேசொ ரிந்து ...... விடவேதான்
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு
கடுகிவர வேணு மெந்தன் ...... முனமேதான்
பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன்
பழநிதனி லேயி ருந்த ...... குமரேசா
பதிகள் பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
பதமடியர் காண வந்த ...... கதிர்காமா
அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
யணிவர் சடை யாளர் தந்த ...... முருகோனே
அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு
மடியர்தமை யாள வந்த ...... பெருமாளே.
- வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதரென்று
யமனுடைய ஓலையை எடுத்துக்கொண்டு வருகின்ற காலதூதர்கள் நாங்கள் யமனுடைய தூதர்கள் எனக் கூறி - மடிபிடிய தாக நின்று தொடர்போது
மடியில் கை போட்டுப் பிடிப்பவர்கள் போல நின்று என்னை விடாமல் தொடர்கின்றபோது - மயலதுபொலாத வம்பன்
(என்னைப் பற்றி) இவன் மயக்கமுடைய பொல்லாத வம்புக்காரன் என்றும், - விரகுடையனாகுமென்று
வஞ்சனைக்காரன் என்றும், - வசைகளுடனேதொடர்ந்து அடைவார்கள்
வசைச் சொற்கள் கூறி என்னை நெருங்குவார்கள். - கருவியதனாலெ றிந்து
ஆயுதங்களினால் என்னைச் சித்திரவதை செய்து, - சதைகள்தனையே யரிந்து
என் சதைகளைத் துண்டுதுண்டாகச் சேதித்து, - கரியபுனலேசொ ரிந்து விடவேதான்
இரும்பை உருக்கிய கரு நீரை என் வாயிலே விட்டு, - கழுமுனையி லேயி ரென்று விடுமெனும்
கழுவின் முனையிலேயே கிட என்று என்னைக் கிடத்தி, - அ(வ்) வேளை கண்டு
என்னைத் துன்புறுத்தும் அந்த வேளையில் என் இடரைக் கண்டு, - கடுகிவர வேணு மெந்தன்முனமேதான்
அடியேன் முன் விரைவில் ஓடோடி நீ வந்தருளவேண்டும். - பரகிரியுலாவு செந்தி மலையினுடனே
திருப்பரங்குன்றத்திலும், திருவுலா இடையறாது நிகழும் திருச்செந்தூரிலுள்ள சந்தன மலையிலும், - இடும்பன் பழநிதனிலேயிருந்த குமரேசா
இடும்பனால்* கொண்டுவரப்பட்ட பழநிமலையிலும் எழுந்தருளிய குமரேசக் கடவுளே, - பதிகள் பல வாயிரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
பல்லாயிரம் திருத்தலங்களிலும், பல கோடி மலைகளிலும் நிலையாக இருந்து, - பதமடியர் காண வந்த கதிர்காமா
திருவடியைக் கண்டு அடியார்கள் நலம்பெற வந்த கதிர்காமனே, - அரவுபிறை பூளை தும்பை
பாம்பையும், பிறைச் சந்திரனையும், பூளை தும்பை மலர்களையும், - விலுவமொடு தூர்வை கொன்றை
வில்வத்தையும், அருகம்புல்லையும், கொன்றைப்பூவையும், - அணிவர் சடையாளர் தந்த முருகோனே
அணிகின்ற சடையர் சிவபிரான் தந்தருளிய முருகனே, - அரகரசிவாய சம்பு குருபரகு மார
பாவங்களை நீக்குபவரும், சிவாய என்ற மூன்றெழுத்துக்களை உடையவரும், சுகத்தைத் தருபவருமான சிவனாரின் குருநாதனே, - நம்புமடியர்தமை யாள வந்த பெருமாளே.
நீயே கதி என்று நம்பியுள்ள அடியார்களை ஆட்கொள்ள வந்தருளிய பெருமாளே.