தனத்த தானன தனத்த தானன
தனத்த தானன தனத்த தானன
தனத்த தானன தனத்த தானன ...... தனதான
தொடுத்த வாளென விழித்து மார்முலை
யசைத்து மேகலை மறைத்து மூடிகள்
துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல் ...... கொளுமாதர்
சுகித்த ஹாவென நகைத்து மேல்விழ
முடித்த வார்குழல் விரித்து மேவிதழ்
துவர்த்த வாய்சுரு ளடக்கி மால்கொடு ...... வழியேபோய்ப்
படுத்த பாயலி லணைத்து மாமுலை
பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ்
கடித்து நாணம தழித்த பாவிகள் ...... வலையாலே
பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை
வெளுத்து வாய்களு மலத்தி னாயென
பசித்து தாகமு மெடுத்தி டாவுயி ...... ருழல்வேனோ
வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை
விடுத்து யாகமும் நடத்தி யேயொரு
மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் ...... மருகோனே
விதித்து ஞாலம தளித்த வேதனை
யதிர்த்து வோர்முடி கரத்து லாயனல்
விழித்து காமனை யெரித்த தாதையர் ...... குருநாதா
அடுத்த ஆயிர விடப்ப ணாமுடி
நடுக்க மாமலை பிளக்க வேகவ
டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு ...... மயில்வீரா
அறத்தில் வாழுமை சிறக்க வேயறு
முகத்தி னோடணி குறத்தி யானையொ
டருக்கொ ணாமலை தருக்கு லாவிய ...... பெருமாளே.
- தொடுத்த வாள் என விழித்து மார் முலை அசைத்து மேகலை
மறைத்து மூடிகள்
செலுத்தப்பட்ட வாளாயுதம் என்று சொல்லும்படி விழித்து, மார்பிலுள்ள தனத்தை அசைத்து, புடவையைக் கொண்டு மறைத்து மூடும் மாதர்கள். - துடித்து நேர் கலை நெகிழ்த்து மா இயல் கொ(ள்)ளு மாதர்
துடித்து எதிரே புடவையைத் தளர்த்தி, (ஆண்களின்) நல்ல ஒழுக்கத்தைப் பறித்துக் கொள்ளுகின்ற விலைமாதர்கள். - சுகித்த ஹா என நகைத்து மேல் விழ முடித்த வார் குழல்
விரித்துமே இதழ் துவர்த்த வாய் சுருள் அடக்கி மால்
கொ(ண்)டு வழியே போய்
மகிழ்ச்சியாக ஹா என்று நகைத்து மேலே விழ, முடித்திருந்த நீண்ட கூந்தலை விரித்து, வாயிதழ் சிவந்த வாய்க்குள் வெற்றிலைச் சுருளை அடக்கிக்கொண்டு, காம ஆசையைக் கொடுக்கின்ற அந்த வழியிலே சென்று, - படுத்த பாயலில் அணைத்து மா முலை பிடித்து மார்பொடும்
அழுத்தி வாய் இதழ் கடித்து நாணம் அது அழித்த பாவிகள்
வலையாலே
படுத்த படுக்கையில் தழுவி, அழகிய தங்கள் மார்பை மார்போடு அழுத்தி, வாயிதழைக் கடித்து நாணத்தை அழித்த பாவிகளின் வலையில் - பலித்து நோய் பிணி கிடத்து பாய் மிசை வெளுத்து
வாய்களும் மல(ம்) தின்(னும்) நாய் என பசித்து தாகமும்
எடுத்திடா உயிர் உழல்வேனோ
உண்டாகிய நோய்ப் பிணியால் படுக்கை உற்று, பாயில் கிடப்பதால் உடல் வெளுத்து, வாய்களும் மலம் தின்னும் நாய் போல் நாற்றம் எடுத்து, பசியும் தாகமும் உற்று எடுத்திட்ட உயிருடன் அலைச்சல் உறுவேனோ? - வெடுத்த தாடகை சினத்தை ஓர் கணை விடுத்து யாகமும்
நடத்தியே ஒரு மிகுத்த வார் சிலை முறித்த மாயவன்
மருகோனே
வெடுவெடுப்புடன் வந்த தாடகையின் கோபத்தை ஓர் அம்பைச் செலுத்தி ஒழித்து, (முனிகளின்) யாகத்தை நடத்தியும், ஒரு சிறப்பான நீண்ட (சிவதனுசு என்ற) வில்லை முறித்தவரும் ஆகிய (ராமனாம்) திருமாலின் மருகனே, - விதித்து ஞாலம் அது அளித்த வேதனை அதிர்த்து ஓர் முடி
கரத்து உலா அனல் விழித்து காமனை எரித்த தாதையர்
குருநாதா
படைத்து உலகத்தைத் தந்த பிரமனைக் கலங்க வைத்து, (அவனுடைய) ஒரு தலையை தமது கையில் கபாலமாகக் கொண்டு திரிந்தவரும், நெற்றிக் கண்ணை விழித்து மன்மதனை எரித்தவரும், தந்தையுமாகிய சிவபெருமானின் குருநாதனே, - அடுத்த ஆயிர விடப் பணா முடி நடுக்க மா மலை பிளக்கவே
கவடு அரக்கர் மா முடி பதைக்கவே பொரு மயில் வீரா
வரிசையாயுள்ள, விஷம் கொண்ட, ஆயிரம் படங்களைக் கொண்ட ஆதிசேஷன் நடுக்கம் கொள்ளவும், கிரெளஞ்ச மலை பிளவுபட்டுத் தூளாகவும், வஞ்சக அரக்கர்களின் பெரிய தலைகள் பதைக்கவும் சண்டை செய்த மயில் வீரனே, - அறத்தில் வாழ் உமை சிறக்கவே அறு முகத்தினோடு அணி
குறத்தி யானையோடு அருக்கொணா மலை தருக்கு உலாவிய
பெருமாளே.
அறங்களை வளர்த்து வாழ்ந்த உமா தேவியார் மகிழ்ச்சியுற, ஆறு திருமுகங்களுடன் விளங்கி அழகிய குறத்தியாகிய வள்ளியுடனும், யானை வளர்த்த தேவயானையோடும் அருக்கொணாமலை* என்னும் தலத்தில் களிப்புடன் உலாவிய பெருமாளே.