திருப்புகழ் 647 முதிரு மாரவாரம் (கதிர்காமம்)

தனன தான தான தத்த தனன தான தான தத்த
தனன தான தான தத்த ...... தனதான
முதிரு  மார  வார  நட்பொ  டிலகு  மார  வார  மெற்றி 
முனியு  மார  வார  முற்ற  ......  கடலாலே 
முடிவி  லாத  தோர்வ  டக்கி  லெரியு  மால  மார்பி  டத்து 
முழுகி  யேறி  மேலெ  றிக்கு  ......  நிலவாலே 
வெதிரி  லாயர்  வாயில்  வைத்து  மதுர  ராக  நீடி  சைக்கும் 
வினைவி  டாத  தாய  ருக்கு  ......  மழியாதே 
விளையு  மோக  போக  முற்றி  அளவி  லாத  காதல்  பெற்ற 
விகட  மாதை  நீய  ணைக்க  ......  வரவேணும் 
கதிர  காம  மாந  கர்க்கு  ளெதிரி  லாத  வேல்த  ரித்த 
கடவு  ளேக  லாப  சித்ர  ......  மயில்வீரா 
கயலு  லாம்வி  லோச  னத்தி  களப  மார்ப  யோத  ரத்தி 
ககன  மேவு  வாளொ  ருத்தி  ......  மணவாளா 
அதிர  வீசி  யாடும்  வெற்றி  விடையி  லேறு  மீசர்  கற்க 
அரிய  ஞான  வாச  கத்தை  ......  யருள்வோனே 
அகில  லோக  மீது  சுற்றி  யசுரர்  லோக  நீறெ  ழுப்பி 
அமரர்  லோகம்  வாழ  வைத்த  ......  பெருமாளே. 
  • முதிரு(ம்) மாரவாரம் நட்பொடு இலகும் ஆர் அவ் ஆரம் எற்றி முனியும் ஆரவாரம் உற்ற கடலாலே
    மன்மதனுக்கு உரிய அன்பு முதிர்ந்த நட்புடன் விளங்கும் கடலாலும் (ஏனெனில் மன்மதனும், கடலும் இவளிடம் பிணங்கி உள்ளனர்), நிறைந்த அந்த முத்துக்களை வீசிக் கோபிக்கும் (அலைகளின்) பேரொலி பொருந்திய கடல் ஓசையாலும்,
  • முடிவு இ(ல்)லாதது ஓர் வடக்கில் எரியும் ஆலம் ஆர்பு இடத்து முழுகி ஏறி மேல் எறிக்கு(ம்) நிலவாலே
    அழிவு இல்லாததாய், ஒப்பற்ற (கடலின்) வடக்குப் பக்கத்தில் (ஊழித் தீயாகிய) வடவா முகாக்கினி போல் எரிவதாய், விஷம் நிறைந்து தோன்றிய இடமாகிய கடலில் முழுகி, விண்ணில் ஏறி கிரணங்களை மேலே வீசும் நிலவினாலும்,
  • வெதிரில் ஆயர் வாயில் வைத்து மதுர ராகம் நீடு இசைக்கும்
    மூங்கிலில் இடையர்கள் வாயை வைத்து இனிமையான ராகங்களை நெடு நேரம் வாசித்து எழுப்பும் இசையின் ஒலியினாலும்,
  • வினை விடாத தாயருக்கும் அழியாதே
    தமது (வசை கூறும்) தொழிலை விடாது செய்யும் தாய்மார்களினாலும் அழிவில்லாமல்,
  • விளையு(ம்) மோக போக(ம்) முற்றி அளவிலாத காதல் பெற்ற விகட மாதை நீ அணைக்க வர வேணும்
    உண்டாகும் காம போகமே நிரம்பி அளவு கடந்த ஆசை கொண்டுள்ள இந்த அழகிய பெண்ணை நீ தழுவ வந்தருள வேண்டும்.
  • கதிரகாம மா நகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த கடவுளே கலாப சித்ர மயில் வீரா
    கதிர்காமம் என்னும் பெரிய ஊருக்குள் ஒப்பில்லாத வேலாயுதத்தைத் தரித்த கடவுளே, தோகை அழகு வாய்ந்த மயில் வீரனே,
  • கயல் உலாம் விலோசனத்தி களபம் ஆர் பயோதரத்தி ககனம் மேவுவாள் ஒருத்தி மணவாளா
    கயல் மீன் போன்ற கண்களை உடையவள், கலவைச் சாந்து அணிந்த மார்பை உடையவள், விண்ணுலகத்தில் வீற்றிருந்தவள் ஆகிய ஒப்பற்றவளாகிய தேவயானையின் கணவனே,
  • அதிர வீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க அரிய ஞான வாசகத்தை அருள்வோனே
    அதிரும்படியாக காலை வீசி நடனம் ஆடுகின்றவரும், வெற்றி வாய்ந்த (நந்தி) ரிஷபத்தின் மேல் ஏறுபவரும் ஆகிய சிவபெருமான் அறியும்படி, அருமையான ஞான உபதேசத்தை அவருக்கு அருளியவனே,
  • அகில லோகம் மீது சுற்றி அசுரர் லோகம் நீறு எழுப்பி அமரர் லோகம் வாழ வைத்த பெருமாளே.
    எல்லா உலகங்களின் மீதும் உலவி வலம் வந்து, அசுரர் உலகத்தைப் பொடியாக்கி, தேவலோகத்தை வாழ வைத்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com