தானதன தானத் ...... தனதான
மாதர்வச மாயுற் ...... றுழல்வாரும்
மாதவமெ ணாமற் ...... றிரிவாரும்
தீதகல வோதிப் ...... பணியாரும்
தீநரக மீதிற் ...... றிகழ்வாரே
நாதவொளி யேநற் ...... குணசீலா
நாரியிரு வோரைப் ...... புணர்வேலா
சோதிசிவ ஞானக் ...... குமரேசா
தோமில் கதிர்காமப் ...... பெருமாளே.
- மாதர்வசமாயுற்று உழல்வாரும்
பெண்களின் வசப்பட்டுத் திரிபவர்களும், - மாதவம் எ(ண்)ணாமல் திரிவாரும்
சிறந்த தவத்தை நினைக்காமல் அலைபவர்களும், - தீதகல ஓதிப் பணியாரும்
தீமைகள் விலகும்படி திருமுறையை ஓதிப் பணியாதவர்களும், - தீநரக மீதில் திகழ்வாரே
கொடிய நரகத்திலே உழன்று கிடப்பார்கள். - நாதவொளியே
ஒலியும் ஒளியுமாக விளங்குபவனே, - நற் குணசீலா
நல்ல அருட்குண சீலனே, - நாரியிருவோரைப் புணர்வேலா
வள்ளி, தேவயானை என்ற இரு தேவியரை மணந்த வேலனே, - சோதிசிவ ஞானக் குமரேசா
ஜோதியான சிவஞானத்தைத் தரும் குமரக் கடவுளே, - தோமில் கதிர்காமப் பெருமாளே.
குற்றமற்ற கதிர்காமத்தில் வாழும் பெருமாளே.