திருப்புகழ் 643 சரியையாளர்க்கும் (கதிர்காமம்)

தனதனா தத்தனத் தனதனா தத்தனத்
தனதனா தத்தனத் ...... தனதான
சரியையா  ளர்க்குமக்  கிரியையா  ளர்க்குநற் 
சகலயோ  கர்க்குமெட்  ......  டரிதாய 
சமயபே  தத்தினுக்  கணுகொணா  மெய்ப்பொருட் 
டருபரா  சத்தியிற்  ......  பரமான 
துரியமே  லற்புதப்  பரமஞா  னத்தனிச் 
சுடர்வியா  பித்தநற்  ......  பதிநீடு 
துகளில்சா  யுச்சியக்  கதியையீ  றற்றசொற் 
சுகசொரூ  பத்தையுற்  ......  றடைவேனோ 
புரிசைசூழ்  செய்ப்பதிக்  குரியசா  மர்த்யசற் 
புருஷவீ  ரத்துவிக்  ......  ரமசூரன் 
புரளவேல்  தொட்டகைக்  குமரமேன்  மைத்திருப் 
புகழையோ  தற்கெனக்  ......  கருள்வோனே 
கரியயூ  கத்திரட்  பலவின்மீ  திற்சுளைக் 
கனிகள்பீ  றிப்புசித்  ......  தமராடிக் 
கதலிசூ  தத்தினிற்  பயிலுமீ  ழத்தினிற் 
கதிரகா  மக்கிரிப்  ......  பெருமாளே. 
  • சரியையாளர்க்கும் அக் கிரியையாளர்க்கும் நல் சகல யோகர்க்கும் எட்ட அரிதாய
    சரியை மார்க்கத்தில்* இருப்பவர்களுக்கும், அந்தக் கிரியை மார்க்கத்தில் இருப்பவர்களுக்கும், நல்ல எல்லாவித யோக நிலையில் இருப்பவர்களுக்கும் எட்டுதற்கு முடியாததும்,
  • சமய பேதத்தினுக்கு அணுக ஒணா மெய்ப் பொருள் தரு பரா சத்தியின் பரமான
    வேறுபட்ட சமயங்களினால் நெருங்க முடியாததுமான உண்மை ஞானத்தைத் தர வல்ல பராசக்தியினும் மேலானதானதும்,
  • துரிய மேல் அற்புதப் பரம ஞானத் தனிச் சுடர் வியாபித்த
    யோகியர் தன்மயமாய் நிற்பதுவும், அதற்கும் மேம்பட்டதான துரியாதீத நிலையானதும் ஆகி, பரம ஞானத் தனி ஒளியாகப் பரந்துள்ளதாய்,
  • நல் பதி நீடு துகள் இல் சாயுச்சியக் கதியை
    சிறந்த இடமாய், குற்றமில்லாததாய், இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை,
  • ஈறு அற்ற சொல் சுக சொரூபத்தை உற்று அடைவேனோ
    முடிவில்லாததும், புகழப்படுவதுமான பேரின்ப நிலையை, நான் பொருந்தி அடைவேனோ?
  • புரிசை சூழ் செய்ப்பதிக்கு உரிய சாமர்த்ய சத் புருஷ
    மதில் சூழ்ந்துள்ள வயலூருக்கு உரிய வல்லவனே, உத்தமனே,
  • வீரத்து விக்ரம சூரன் புரள வேல் தொட்ட கைக் குமர
    வீரமும் வலிமையும் கொண்ட சூரன் புரண்டு விழ, வேலைச் செலுத்திய திருக்கரத்தை உடைய குமரனே,
  • மேன்மைத் திருப் புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே
    மேன்மை பொருந்திய திருப்புகழை ஓதுவதற்கு எனக்கு அருள் செய்தவனே,
  • கரிய ஊகத் திரள் பலவின் மீதில் சுளைக் கனிகள் பீறிப் புசித்து அமர் ஆடி
    கருங்குரங்குகளின் கூட்டங்கள் பலா மரத்தின் மீது இருந்து சுளைப் பழங்களைக் கீறிக் கிழித்து உண்டு சண்டை இட்டு,
  • கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில்
    வாழை மரங்களிலும், மாமரங்களிலும் நெருங்கி விளையாடும் ஈழ நாட்டில் உள்ள
  • கதிர காமக் கிரிப் பெருமாளே.
    கதிர்காம மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com