திருப்புகழ் 644 பாரவித முத்த (கதிர்காமம்)

தானதன தத்தத்த தானதன தத்தத்த
தானதன தத்தத்த ...... தனதான
பாரவித  முத்தப்ப  டீரபுள  கப்பொற்ப 
யோதர  நெருக்குற்ற  ......  இடையாலே 
பாகளவு  தித்தித்த  கீதமொழி  யிற்புட்ப 
பாணவிழி  யிற்பொத்தி  ......  விடுமாதர் 
காரணிகு  ழற்கற்றை  மேல்மகர  மொப்பித்த 
காதில்முக  வட்டத்தி  ......  லதிமோக 
காமுகன  கப்பட்ட  வாசையைம  றப்பித்த 
கால்களைம  றக்கைக்கும்  ......  வருமோதான் 
தேரிரவி  யுட்கிப்பு  காமுதுபு  ரத்திற்றெ 
சாசிரனை  மர்த்தித்த  ......  அரிமாயன் 
சீர்மருக  அத்யுக்ர  யானைபடும்  ரத்நத்ரி 
கோணசயி  லத்துக்ர  ......  கதிர்காம 
வீரபுன  வெற்பிற்க  லாபியெயி  னச்சிக்கு 
மேகலையி  டைக்கொத்தி  ......  னிருதாளின் 
வேரிமழை  யிற்பச்சை  வேயிலரு  ணக்கற்றை 
வேல்களில  கப்பட்ட  ......  பெருமாளே. 
  • பாரவித முத்தப் படீர புளகப் பொன் பயோதர நெருக்கு உற்ற இடையாலே
    பாரமானதும், முத்து மாலை அணிந்ததும், சந்தனம் பூசியதும், புளகாங்கிதம் கொண்டதும், அழகியதுமான மார்பகங்களாலும், நெருங்கி மெலிதாக உள்ள இடையாலும்,
  • பாகு அளவு தித்தித்த கீத மொழியில் புட்ப பாண விழியில் பொத்தி விடு(ம்) மாதர்
    சர்க்கரைப் பாகு போல் இனிக்கும் இசை மொழியாலும், (மன்மதனுடைய) மலர்ப் பாணம் போல் தைக்கும் கண்களாலும், காம மயக்கால் மூடி விடுகின்ற விலைமாதர்களின்
  • கார் அணி குழல் கற்றை மேல் மகரம் ஒப்பித்த காதில் முக வட்டத்தில் அதி மோக காமுகன்
    மேகம் போன்ற கூந்தல் கட்டினாலும், மகர மீன் போன்ற (குண்டல அலங்காரம் உள்ள) காதினாலும், முக மண்டலத்தாலும் அதிக மோகம் கொண்ட காமுகனாகிய நான்
  • அகப்பட்ட ஆசையை மறப்பித்த கால்களை மறக்கைக்கும் வருமோ தான்
    சிக்கிக் கிடந்த காம இச்சையை அடியோடு மறக்கச் செய்த உனது திருவடிகளை என்னால் மறக்கவும் கூடுமோ?
  • தேரில் ரவி உட்கிப் புகா முது புரத்தில் தெசாசிரனை மர்த்தித்த அரி மாயன் சீர் மருக
    தேரில் எழுந்தருளும் சூரியன் (ராவணனுக்கு) அஞ்சி உள்ளே புகாத பழைய ஊராகிய இலங்கையில் பத்து தலைகளை உடைய ராவணனை கலக்கிப் பிசைந்த மாயோனாகிய திருமாலின் சீரான மருகனே,
  • அத்யுக்ர யானை படும் ரத்ந த்ரி கோண சயிலத்து உக்ர கதிர்காம வீர
    மிக வலிமையான யானைகள் எதிர்ப்படும், ரத்தினங்கள் கிடைக்கும் திருக்கோண மலையிலும், உக்கிரமான கதிர்காமத்திலும் வீற்றிருக்கும் வீரனே,
  • புன வெற்பில் கலாபி எனச் சிக்கு மேகலை இடைக் கொத்தில் இரு தாளின்
    தினைப் புனம் உள்ள வள்ளி மலையில் மயில் போன்ற வேடப் பெண் வள்ளியின் மேகலை அணிந்த இடையின் கொத்திலும், இரண்டு பாதங்களிலும்,
  • வேரி மழையில் பச்சை வேயில் அருணக் கற்றை வேல்களில் அகப்பட்ட பெருமாளே.
    வாசனை தங்கிய மேகம் போன்ற கூந்தலிலும், பசுமையான மூங்கிலை ஒத்த தோள்களிலும், சிவந்த கிரணங்களைக் கொண்ட வேல் போன்ற கண்களிலும் சிக்கிக் கொண்ட பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com