தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தா ...... தனதான
சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
சமர்த்தா யெதிர்த்தே ...... வருசூரைச்
சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய்
தகர்த்தா யுடற்றா ...... னிருகூறாச்
சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
செகுத்தாய் பலத்தார் ...... விருதாகச்
சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்
திருத்தா மரைத்தா ...... ளருள்வாயே
புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
பொரத்தா னெதிர்த்தே ...... வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
பொரித்தார் நுதற்பார் ...... வையிலேபின்
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
கருத்தார் மருத்தூர் ...... மதனாரைக்
கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
கதிர்க்காம முற்றார் ...... முருகோனே.
- சரத்தே யுதித்தாய்
நாணல் காட்டிலே பிறந்தவனே (சரவணபவனே), - உரத்தே குதித்தே சமர்த்தாய்
வலிமையோடு குதித்து சாமர்த்தியமாய் - எதிர்த்தே வருசூரை
எதிர்த்துவந்த சூரனை - சரிப்போன மட்டே விடுத்தாய்
ஒழுங்காக நடந்துகொண்ட வரைக்கும் விட்டுவைத்தாய், - அடுத்தாய்
சரியில்லாத போது அடுத்து வந்து அவனை நெருக்கினாய், - தகர்த்தாய் உடற்றான் இருகூறா
உடலை இரு கூறுகள் ஆகுமாறு பிளந்தாய், - சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய்
தலையையும் மார்பையும் அறுத்துக் குவித்தாய், - செகுத்தாய்
கொன்றெறிந்தாய், - பலத்தார் விருதாகச் சிறைச்சேவல் பெற்றாய்
பல மாலைகளை விருதுகளாகவும், சிறகுடைய சேவல் ஒன்றையும் பரிசாகப் பெற்றாய், - வலக்காரம் உற்றாய்
வெற்றியை அடைந்தாய், - திருத்தாமரைத்தாள் அருள்வாயே
உனது அழகிய தாமரைப் பாதங்களைத் தந்தருள்க. - புரத்தார் வரத்தார்
திரிபுரத்தில் இருந்த வரம்பெற்ற மூன்று அசுரர்களும் - சரச்சேகரத்தார்
அம்புக் கூட்டங்கள் கொண்டவர்களாக - பொரத்தான் எதிர்த்தே வருபோது
சண்டை செய்யவே எதிர்த்து வரும்போது - பொறுத்தார் பரித்தார்
முதலில் பொறுமையோடு இருந்தார், பிறகு போர்க்கோலம் தரித்தார், - சிரித்தார் எரித்தார்
பின்பு சிரித்தார், திரிபுரத்தை எரித்தார், - பொரித்தார் நுதற்பார்வையிலே
பொரிபடச் செய்தார் தனது நெற்றிக்கண் பார்வையாலேயே. - பினகரித்தோ லுரித்தார்
பின்பு (கஜமுகாசுரனான) யானையின் தோலை உரித்தார், - விரித்தார் தரித்தார்
அதனை விரித்து ஆடையாக அணிந்து கொண்டார். - கருத்தார்
(தேவர்கள் கேட்டுக்கொண்டபடி தம்மீது அம்பு எய்யும்) கருத்தோடு - மருத்தூர் மதனாரை
தென்றலைத் தேராகக்கொண்டு ஊர்ந்துவந்த மன்மதனை - கரிக்கோல மிட்டார்
சாம்பல் அலங்காரமாக ஆக்கிய பரமசிவனாரின் - கணுக்கான முத்தே
கண்மணியான முத்தையனே, - கதிர்க்காம முற்றார் முருகோனே.
கதிர்காமம் என்ற தலத்தில் சென்று விளங்கிய முருகனே.