திருப்புகழ் 641 சமர முக வேல் (கதிர்காமம்)

தனதனன தானத்த தனதனன தானத்த
தனதனன தானத்த ...... தனதான தானனா
சமரமுக  வேலொத்த  விழிபுரள  வாரிட்ட 
தனமசைய  வீதிக்குள்  ......  மயில்போலு  லாவியே 
சரியைக்ரியை  யோகத்தின்  வழிவருக்ரு  பாசுத்தர் 
தமையுணர  ராகத்தின்  ......  வசமாக  மேவியே 
உமதடியு  னாருக்கு  மனுமரண  மாயைக்கு 
முரியவர்ம  காதத்தை  ......  யெனுமாய  மாதரார் 
ஒளிரமளி  பீடத்தி  லமடுபடு  வேனுக்கு 
முனதருள்க்ரு  பாசித்த  ......  மருள்கூர  வேணுமே 
இமகிரிகு  மாரத்தி  யநுபவைப  ராசத்தி 
யெழுதரிய  காயத்ரி  ......  யுமையாள்கு  மாரனே 
எயினர்மட  மானுக்கு  மடலெழுதி  மோகித்து 
இதணருகு  சேவிக்கு  ......  முருகாவி  சாகனே 
அமரர்சிறை  மீள்விக்க  அமர்செய்துப்ர  தாபிக்கு 
மதிகவித  சாமர்த்ய  ......  கவிராஜ  ராஜனே 
அழுதுலகை  வாழ்வித்த  கவுணியகு  லாதித்த 
அரியகதிர்  காமத்தி  ......  லுரியாபி  ராமனே. 
  • சமர முக வேல் ஒத்த விழி புரள வார் இட்ட தனம் அசைய வீதிக்குள் மயில் போல் உலாவியே
    போர்முகத்துக்கு என்ற கூர்மை நிறைந்த வேல் போன்ற கண்கள் புரள, கச்சு அணிந்த மார்பகங்கள் அசைய, தெருவில் மயில் உலவுவது போல,
  • சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர் தமை உணர ராகத்தின் வசமாக மேவியே
    சரியை, கிரியை, யோகம், (ஞானம்) என்னும் நான்கு வழிகளில்* நிற்கின்ற, அருளும் பரிசுத்தமும் வாய்ந்த பெரியோர்களும் தம்மை மோகிக்கும்படியாக ஆசை காட்டும் வழிகளில் பொருந்தி,
  • உமது அடி உ(ன்)னாருக்கும் அனுமரண மாயைக்கும் உரியவர் மகா தத்தை எனு(ம்) மாய மாதரார்
    உமது திருவடியை நினையாதவருக்கும், மரணத்தோடு கூடிய மாயையின் வசப்பட்டவருக்கும் உரியவராய், சிறந்த கிளிகள் எனப்படும் மாயைகளில் வல்ல விலைமாதர்களுடைய
  • ஒளிர் அமளி பீடத்தில் அமடு படுவேனுக்கும் உனது அருள் க்ருபா சித்தம் அருள் கூர வேணுமே
    ஒளி மிகுந்த படுக்கையிடத்தே சிக்கிக் கொண்ட எனக்கும் உமது திருவருள் பிரசாதத்தை அருள் கூர்ந்து அளிக்க வேண்டும்.
  • இம கிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுத அரிய காயத்ரி உமையாள் குமாரனே
    இமய மலை அரசனுடைய மகள், எப்போதும் இன்ப அனுபவத்தைத் தருபவள், பராசக்தி, எழுதற்கரிய காயத்திரி மந்திரத்தின் உருவினள் (ஆகிய) உமாதேவியின் மகனே,
  • எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே
    வேடர்களின் அழகிய மான் போன்ற வள்ளிக்காக மடல் எழுதி** ஆசைப்பட்டு, அவள் இருந்த பரண் அருகே சேவித்து நின்ற முருகனே, விசாகனே,
  • அமரர் சிறை மீள்விக்க அமர் செய்து ப்ரதாபிக்கும் அதிக வித சாமர்த்ய கவி ராஜராஜனே
    தேவர்களைச் சிறையினின்றும் மீட்கும் பொருட்டுப் போரிட்டு, கீர்த்தியுற்ற, மிக மேலான திறமை வாய்ந்த ராஜகவிகளுக்குள் சக்கரவர்த்தியே,
  • அழுது உலகை வாழ்வித்த கவுணிய குல ஆதித்த
    அழுது (திருஞான சம்பந்தராகத் தோன்றி பார்வதி தேவியின் திருமுலைப்பால் உண்டு) தேவாரப் பாடல்களால் உலகை வாழ்வித்த கவுணிய குலத்தைச் சார்ந்த ஞான சூரியனே,
  • அரிய கதிர் காமத்தில் உரிய அபிராமனே.
    அருமை வாய்ந்த கதிர்காமத்துக்கு உரிய அழகனே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com