தனத்தத் தனதான தானன
தனத்தத் தனதான தானன
தனத்தத் தனதான தானன ...... தனதான
உடுக்கத் துகில்வேணு நீள்பசி
யவிக்கக் கனபானம் வேணுநல்
ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ...... யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணுமிவ் ...... வகையாவுங்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
மயக்கக் கடலாடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயி ...... ரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமு
மழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சிலதூதர் நாடுக
குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
அரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே.
- உடுக்கத் துகில் வேணும்
உடுப்பதற்கு உடைகள் வேண்டும். - நீள்பசியவிக்கக் கனபானம் வேணும்
பெரும் பசியைத் தணிக்க உயர்ந்த சுவைநீர் வேண்டும். - நல்ஒளிக்குப் புனலாடை வேணும்
தேகம் நல்ல ஒளிவீசும் பொருட்டு நீரும் பட்டாடையும் வேண்டும். - மெய்யுறு நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும்
உடல் நோயை அகற்ற மருந்துகள் வேண்டும். - உள்இருக்கச் சிறுநாரி வேணும்
வீட்டுக்குள் இருக்க இளமையான மனைவி வேண்டும். - படுக்க யொர் தனிவீடு வேணும்
படுத்துக்கொள்ள ஒரு தனி வீடும் வேண்டும். - இவ் வகையாவுங் கிடைத்து
இத்தனை நலன்கள் யாவும் எனக்குக் கிடைக்கப் பெற்று - க்ருஹவாசியாகி அம்மயக்க கடல் ஆடி
குடும்பத்தனாகி, அந்த வாழ்வு என்ற மயக்கக் கடலில் மூழ்கி, - நீடிய கிளைக்குப் பரிபாலனாய்
பெரிய சுற்றத்தார் கூட்டத்தைக் காப்பாற்றுபவனாகி - உயிர் அவமேபோம்
முடிவில் என்னுயிர் வீணாகக் கழிந்து விடும். - க்ருபைச்சித்தமு ஞான போதமும்
கருணை உள்ளத்தையும் சிவஞான போதத்தையும் - அழைத்துத் தரவேணும்
நீ என்னைக் கூப்பிட்டு வைத்துத் தந்தருள வேண்டும். - ஊழ்பவ கிரிக்குட் சுழல்வேனை
ஊழ்வினையால் வரும் பிறவி என்ற மலைச் சூழலில் சுழலும் என்னை - ஆளுவது ஒருநாளே
ஆட்கொள்ளும் நாள் ஒன்றும் உண்டோ? - குடக்குச் சிலதூதர் தேடுக
மேற்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும், - வடக்குச் சிலதூதர் நாடுக
வடக்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும், - குணக்குச் சிலதூதர் தேடுகவென மேவி
கிழக்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும் அனுப்பி - குறிப்பிற் குறிகாணு மாருதி
குறிப்பினால் குறிப்பை உணரும் அனுமனை - இனித் தெற்கொரு தூது போவது
இனி தெற்கு திசையில் தூதனாக அனுப்ப வேண்டியது. - குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ
சொல்லி வைத்த குறிப்பின்படி தேடும் பொருள் (சீதை) கிடைக்காமல் போனாலும் தோல்வியுடன் வரலாமோ? (வருதல் நன்றன்று என சுக்ரீவன் சொல்லி அனுப்ப), - அடிக் குத்திரகாரராகிய
அடியோடு வஞ்சகர்களாகிய - அரக்கர்க்கு இளையாத தீரனும்
அரக்கர்களிடம் தோற்று இளைக்காத தீரனாகிய அனுமனும் - அலைக்கு அப்புறமேவி
அலை கடலைத் தாண்டி அப்புறம் உள்ள இலங்கைக்குச் சென்று, - மாதுறு வனமேசென்று
சீதாபிராட்டி இருந்த அசோகவனத்தை அடைந்து, - அருட்பொற் றிருவாழி மோதிரமளித்து
ராமபிரானது அழகிய பொன் மோதிரத்தை அன்னைக்கு அளித்து - உற்றவர்மேல் மனோகரம் அளித்து
மீண்டு வந்த அந்த அனுமனுக்கு அனுக்கிரகத்தைத் தந்தருளி*, - கதிர்காம மேவிய பெருமாளே.
கதிர்காமத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.