தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி
அடைவில் ஞாளி கோமாளி ...... அறமீயா
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்
அருளி லாத தோடோய ...... மருளாகிப்
பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு
பருவ மேக மேதாரு ...... வெனயாதும்
பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாத
பரிசில் தேடி மாயாத ...... படிபாராய்
இலகு வேலை நீள்வாடை யெரிகொள் வேலை மாசூரி
லெறியும் வேலை மாறாத ...... திறல்வீரா
இமய மாது பாகீர திநதி பால காசார
லிறைவி கான மால்வேடர் ...... சுதைபாகா
கலக வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீத
கதிர காம மூதூரி ...... லிளையோனே
கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
- அலகின்மாறு மாறாத கலதி பூத வேதாளி
(யான் ஒரு) விளக்குமாறு, மாறுதல் இல்லாத மூதேவி, பூதம், காளி, - அடைவு இல் ஞாளி கோமாளி
தகுதி இல்லாத நாய், கோணங்கி, - அறம் ஈயா அழிவு கோளி
தருமம் செய்யாமல் அழிவைத் தேடிக் கொள்ளுபவன், - நாணாது புழுகு பூசி வாழ் மாதர்
எனக்குச் சிறிதும் வெட்கம் இல்லாமல், புனுகு போன்ற வாசனைகளைப் பூசி வாழும் விலைமாதர்களின் - அருள் இலாத தோள் தோய மருள் ஆகி
அன்பு இல்லாத தோள்களைச் சேர வேண்டி, காம மயக்கம் கொண்டு (அவர்களுக்குக் கொடுக்கப் பொருள் தேடி, மற்றவர்களை) - பல கலை ஆகார மேரு மலை கர அசலா
பல கலைகளுக்கும் இருப்பிடமானவனே, மேரு மலை போன்ற புயமலைகளை உடையவனே, - வீசு பருவ மேகமே தாரு என
மழை வீசும் பருவ காலத்து மேகமே, கற்பக மரமே என்று - யாதும் பரிவு உறாத மா பாதர் வரிசை பாடி
(பலவிதமாகக்) கூறினாலும் ஒரு சிறிதும் அன்பு இல்லாத மகா பாதகர்களின் பெருமைகளைப்புகழ்ந்து பாடி, - ஓயாத பரிசில் தேடி மாயாதபடி பாராய்
ஓய்வே இல்லாமல் பரிசுப் பொருளைத் தேடி நான் இறந்து போகா வண்ணம் கண் பார்த்து அருளுக. - இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை
விளங்கும் வேலாயுதத்தை பெரிய வடமுகாக்கினியைக் கொண்ட கடல் மீதும், - மா சூரில் எறியும் வேலை மாறாத திறல் வீரா
மாமரமாகிய சூரன் மீதும் செலுத்திய தொழிலைக் கைவிடாத திறமையான வீரனே, - இமய மாது பாகீரதி நதி பாலகா
இமவான் மகள் பார்வதி, கங்கை நதி இவர்கள் இருவருக்கும் பாலகனே, - சாரல் இறைவி கானம் மால் வேடர் சுதை பாகா
வள்ளி மலைச் சாரலில் இருந்த தலைவியும், காட்டில் இருந்த பெருமை வாய்ந்த வேடர் (நம்பிராஜனின்) புதல்வியுமான வள்ளியைப் பக்கத்தில் கொண்டவனே, - கலக வாரி போல் மோதி
பேரொலி கொண்ட கடல் போல் அலை மோதி வரும் - வட ஐ ஆறு சூழ் சீத
வடக்கு திசையிலிருந்து வரும் மாணிக்க கங்கை என்னும் அழகிய ஆறு சூழ்ந்து குளிர்ச்சி தரும் - கதிரகாமம் மூது ஊரில் இளையோனே
கதிர் காமம் என்னும் பழைய நகரில் வீற்றிருக்கும் இளையோனே, - கனக நாடு வீடு ஆய கடவுள் யானை வாழ்வான
பொன்னுலகு இருப்பிடமான தேவ யானைக்கு வாழ்வாய் அமைந்த - கருணை மேருவே தேவர் பெருமாளே.
கருணை மேருவே, தேவர்கள் பெருமாளே.