திருப்புகழ் 636 திருமகள் உலாவும் (கதிர்காமம்)

தனதனன தான தனதனன தான
தனதனன தானத் ...... தனதான
திருமகளு  லாவு  மிருபுயமு  ராரி 
திருமருக  நாமப்  ......  பெருமாள்காண் 
செகதலமும்  வானு  மிகுதிபெறு  பாடல் 
தெரிதருகு  மாரப்  ......  பெருமாள்காண் 
மருவுமடி  யார்கள்  மனதில்விளை  யாடு 
மரகதம  யூரப்  ......  பெருமாள்காண் 
மணிதரளம்  வீசி  யணியருவி  சூழ 
மருவுகதிர்  காமப்  ......  பெருமாள்காண் 
அருவரைகள்  நீறு  படஅசுரர்  மாள 
அமர்பொருத  வீரப்  ......  பெருமாள்காண் 
அரவுபிறை  வாரி  விரவுசடை  வேணி 
அமலர்குரு  நாதப்  ......  பெருமாள்காண் 
இருவினையி  லாத  தருவினைவி  டாத 
இமையவர்கு  லேசப்  ......  பெருமாள்காண் 
இலகுசிலை  வேடர்  கொடியினதி  பார 
இருதனவி  நோதப்  ......  பெருமாளே. 
  • திருமகள் உலாவும் இருபுய
    லக்ஷ்மிதேவி விளையாடும் இரண்டு புயங்களும் உடைய
  • முராரி திருமருக நாமப் பெருமாள்காண்
    திருமாலின் அழகிய மருகன் என்ற திருநாமத்தைக் கொண்ட பெருமான் நீதான்.
  • செகதலமும் வானும்
    மண்ணுலகிலும் விண்ணுலகிலும்
  • மிகுதிபெறு பாடல்
    மிகவும் போற்றிப் புகழும் (தேவாரப்) பாடல்களை
  • தெரிதரு குமாரப் பெருமாள்காண்
    அளித்தருளிய (ஞானசம்பந்த) குமாரப்பெருமான் நீதான்.
  • மருவும் அடியார்கள் மனதில்விளையாடு
    வணங்கும் அடியார்களின் மனதிலே விளையாடும்
  • மரகதமயூரப் பெருமாள்காண்
    பச்சை மயில் ஏறும் பெருமான் நீதான்.
  • மணிதரளம் வீசி யணியருவி சூழ
    மணியையும் முத்தையும் வீசி அழகிய அருவி* சூழ்ந்து
  • மருவு கதிர்காமப் பெருமாள்காண்
    விளங்கும் கதிர்காமத் தலத்துப் பெருமான் நீதான்.
  • அருவரைகள் நீறு படஅசுரர் மாள
    பெருமலைகள் பொடிபட, அசுரர்கள் இறக்க
  • அமர்பொருத வீரப் பெருமாள்காண்
    போர் புரிந்த வீரப் பெருமான் நீதான்.
  • அரவுபிறை வாரி விரவுசடை வேணி
    பாம்பு நிலவு, கங்கை நீர் இவை கலந்த சடையுடைய
  • அமலர்குரு நாதப் பெருமாள்காண்
    பரிசுத்தமான சிவனுக்கு குருநாதப்பெருமான் நீதான்.
  • இருவினையிலாத
    நல்வினை தீவினை என்பதே இல்லாதவர்களும்
  • தருவினைவி டாத இமையவர்
    கற்பகத் தருவை விட்டு நீங்காதவர்களுமான தேவர்களின்
  • குலேசப் பெருமாள்காண்
    குலத்துக்கு அரசன் தேவேந்திரனுக்கும் பெருமான் நீதான்.
  • இலகுசிலை வேடர் கொடியின்
    விளங்கும் வில் ஏந்திய வேடர்குலக் கொடி வள்ளியின்
  • அதிபார இருதனவிநோதப் பெருமாளே.
    அதிக பாரமான இரு மார்பிலும் களிக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com