தனன தான தத்த ...... தனதான
தனன தான தத்த ...... தனதான
எதிரி லாத பத்தி ...... தனைமேவி
இனிய தாள்நி னைப்பை ...... யிருபோதும்
இதய வாரி திக்கு ...... ளுறவாகி
எனது ளேசி றக்க ...... அருள்வாயே
கதிர காம வெற்பி ...... லுறைவோனே
கனக மேரு வொத்த ...... புயவீரா
மதுர வாணி யுற்ற ...... கழலோனே
வழுதி கூனி மிர்த்த ...... பெருமாளே.
- எதிரிலாத பத்தி தனைமேவி
சமானம் இல்லாத அன்புடையவனாகி - இனிய தாள்நினைப்பை
இனிமையைத் தரும் உன் திருவடிகளின் தியானத்தை - இருபோதும்
இரவும் பகலும் - இதய வாரிதிக்குள் உறவாகி
இதயமாகிற கடலுக்குள்ளே பதியவைத்து - எனதுளே சிறக்க அருள்வாயே
என் உள்ளத்திலே உன் நினைப்பு சிறக்குமாறு அருள்வாயாக. - கதிர காம வெற்பில் உறைவோனே
கதிர்காமம் என்ற திருமலையில் எழுந்தருளி வாழ்பவனே, - கனக மேரு வொத்த புயவீரா
பொன் மேரு மலையை ஒத்த தோள்களை உடைய வீரனே, - மதுர வாணி யுற்ற கழலோனே
இனிய மொழிகள் உள்ள சரஸ்வதி வந்து போற்றும் பாதனே, - வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே.
பாண்டியனது கூனை சம்பந்தராக வந்து நிமிர்த்திய பெருமாளே.