திருப்புகழ் 628 தவள மதியம் (குன்றக்குடி)

தனன தனன தனத்தந் ...... தனதான
தவள  மதிய  மெறிக்குந்  ......  தணலாலே 
சரச  மதனன்  விடுக்குங்  ......  கணையாலே 
கவன  மிகவு  முரைக்குங்  ......  குயிலாலே 
கருதி  மிகவு  மயக்கம்  ......  படவோநான் 
பவள  நிகரு  மிதழ்ப்பைங்  ......  குறமானின் 
பரிய  வரையை  நிகர்க்குந்  ......  தனமேவுந் 
திவளு  மணிகள்  கிடக்குந்  ......  திருமார்பா 
திகழு  மயிலின்  மலைக்கண்  ......  பெருமாளே. 
  • தவள(ம்) மதியம் எறிக்கும் தணலாலே
    வெண்ணிறமுள்ள சந்திரன் வீசும் நெருப்பாலும்,
  • சரச மதனன் விடுக்கும் கணையாலே
    காமலீலைக்கு இடம் தரும் மன்மதன் செலுத்தும் பாணத்தாலும்,
  • கவன(ம்) மிகவும் உரைக்கும் குயிலாலே
    சோகத்தை மிகவும் தெரியப்படுத்தும் குயிலாலும்,
  • கருதி மிகவு(ம்) மயக்கம் படவோ நான்
    எனது மனதில் மிகவும் நினைத்து நான் மயக்கத்தை அடையலாமோ?
  • பவள(ம்) நிகரும் இதழ்ப் பைங் குறமானின்
    பவளத்தை ஒத்த வாயிதழை உடைய பச்சை நிறமுள்ள குறத்தியான வள்ளியின்
  • பரிய வரையை நிகர்க்கும் தனம் மேவும்
    பருத்த மலை போன்ற மார்பகங்களின் மீது புரளும்
  • திவளு(ம்) மணிகள் கிடக்கும் திருமார்பா
    ஒளி வீசும் மணி மாலைகள் பொருந்தும் அழகிய மார்பனே,
  • திகழு(ம்) மயிலின் மலை கண் பெருமாளே.
    விளங்குகின்ற மயூரகிரி என்கின்ற குன்றக்குடியில்* வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com