திருப்புகழ் 629 நாமேவு குயிலாலும் (குன்றக்குடி)

தானான தனதான தானான தனதான
தானான தனதான ...... தனதான
நாமேவு  குயிலாலு  மாமார  னயிலாலு 
நாடோறு  மதிகாயும்  ......  வெயிலாலும் 
நார்மாதர்  வசையாலும்  வேயூது  மிசையாலு 
நாடாசை  தருமோக  ......  வலையூடே 
ஏமாறி  முழுநாளு  மாலாகி  விருதாவி 
லேவாரும்  விழிமாதர்  ......  துயரூடே 
ஏகாம  லழியாத  மேலான  பதமீதி 
லேகீயு  னுடன்மேவ  ......  அருள்தாராய் 
தாமோக  முடனூறு  பால்தேடி  யுரலூடு 
தானேறி  விளையாடு  ......  மொருபோதில் 
தாயாக  வருசோதை  காணாது  களவாடு 
தாமோத  ரன்முராரி  ......  மருகோனே 
மாமாது  வனமாது  கார்மேவு  சிலைமாது 
மாலாகி  விளையாடு  ......  புயவீரா 
வானாடு  புகழ்நாடு  தேனாறு  புடைசூழ 
மாயூர  கிரிமேவு  ......  பெருமாளே. 
  • நா மேவு குயிலாலும் மா மாரன் அயிலாலு(ம்)
    நாவால் கூவி இசைக்கும் குயிலின் பாட்டாலும், சிறந்த மன்மதனுடைய கூரிய பாணங்களாலும்,
  • நாள் தோறும் மதி காயும் வெயிலாலும்
    நாள் தோறும் வெய்யில் போல் காய்கின்ற நிலவின் ஒளியாலும்,
  • நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும்
    அன்பும் அக்கரையும் உள்ள மாதர்கள் பேசும் வசை மொழியாலும், புல்லாங்குழல் ஊதும் இசையாலும்,
  • நாடு ஆசை தரு மோக வலை ஊடே
    விரும்புகிற ஆசையால் வரும் மோகம் என்கின்ற வலைக்குள்,
  • ஏமாறி முழு நாளும் மாலாகி விருதாவிலே
    ஏமாற்றம் அடைந்து நாள் முழுதும் காம இச்சையால் வீணாகவே
  • வாரும் விழி மாதர் துயர் ஊடே ஏகாமல்
    நீண்ட கண்களை உடைய மாதர்களால் ஏற்படும் ஏச்சுத் துயரத்துக்குள் வீழாமல்,
  • அழியாத மேலான பதம் மீதில் ஏகீ உ(ன்)னுடன் மேவ அருள்தாராய்
    அழிவில்லாததும், மேலானதுமான நிலையை அடைந்து உன்னுடன் நான் பொருந்தி இருக்க அருள் புரிவாயாக.
  • தாம் மோகமுடன் ஊறு பால் தேடி உரலோடு தான் ஏறி விளையாடும் ஒரு போதில்
    தாம் ஆசையுடன் கறந்த பாலைத் தேடி உரலுடன் ஏறி விளையாடும் ஒரு பொழுதில்,
  • தாயாக வரு (ய)சோதை காணாது களவாடு தாமோதரன் முராரி மருகோனே
    தாயாக (அங்கு) வந்த யசோதை (அந்தப்) பாலைக் காண முடியாதபடி திருடிய தாமோதரன்* (ஆகிய) திருமாலின் மருகனே,
  • மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது
    சிறந்த லக்ஷ்மி போன்ற மாது, காட்டில் வளர்ந்த மாது, மேகம் தவழும் (வள்ளி) மலையில் வாழ்ந்த மாது ஆகிய வள்ளி
  • மாலாகி விளையாடும் புய வீரா
    ஆசை பூண்டு விளையாடுகின்ற புயங்களை உடைய வீரனே,
  • வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும்
    விண்ணோர்களும் புகழும் நாட்டில் தேனாறு பக்கத்தில் சூழ்ந்து வரும்
  • மாயூர கிரி மேவும் பெருமாளே.
    மாயூர கிரி எனப்படும் குன்றக் குடியில்** வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com