தான தனத்தத் தனத்த தந்தன
தான தனத்தத் தனத்த தந்தன
தான தனத்தத் தனத்த தந்தன ...... தனதான
கோதி முடித்துக் கனத்த கொண்டையர்
சூது விதத்துக் கிதத்து மங்கையர்
கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில் ...... நினையாதே
கோழை மனத்தைக் கெடுத்து வன்புல
ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல்
கூறு மிடத்துக் கிதத்து நின்றருள் ...... புரிவாயே
நாத நிலைக்குட் கருத்து கந்தருள்
போதக மற்றெச் சகத்தை யுந்தரு
நான்முக னுக்குக் கிளத்து தந்தையின் ...... மருகோனே
நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது
தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு
நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள் ...... வடிவேலா
தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
தோதிமி தித்தித் தனத்த தந்தவெ ...... னிசையோடே
சூழ நடித்துச் சடத்தில் நின்றுயி
ரான துறத்தற் கிரக்க முஞ்சுப
சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் ...... புரிவோனே
ஓத வெழுத்துக் கடக்க முஞ்சிவ
காரண பத்தர்க் கிரக்க முந்தகு
ஓமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுட ...... ரொளியோனே
ஓதி யிணர்த்திக் குகைக்கி டுங்கன
காபர ணத்திற் பொருட் பயன்றரு
ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள் ...... பெருமாளே.
- கோதி முடித்துக் கனத்த கொண்டையர்
மயிர் சிக்கெடுத்து முடித்த பெருத்த கூந்தல் முடியை உடையவர்கள், - சூது விதத்துக்கு இதத்து மங்கையர் கூடிய அற்பச் சுகத்தை
நெஞ்சினில் நினையாதே
சூதான வழிகளுக்கு சாமர்த்தியமாக உதவி செய்யும் விலைமாதர்களைக் கூடுவதால் வரும் அற்பமான இன்பத்தை மனத்தில் நினைக்காமல், - கோழை மனத்தைக் கெடுத்து வன் புல ஞான குணத்தைக்
கொடுத்து
திடம் இல்லாத மனத்தை ஒழித்து, திடமுள்ள கூரிய மதியையும் ஞானத்தையும் கொண்ட குணத்தை அடையச் செய்து, - நின் செயல் கூறும் இடத்துக்கு இதத்து நின்று அருள்
புரிவாயே
உனது வீரச் செயல்கள் புகழப்பெறும் இடங்களில் இன்பமுடன் நான் நிற்கும்படியாக அருள் புரிவாயாக. - நாத நிலைக்குள் கருத்து உகந்து அருள் போதக
நாத நிலையில் (சிவ தத்துவத்தில்) கருத்து நிலைக்கும்படி மகிழ்ந்து அருள் புரியும் ஞான குருவே, - மற்று எச்சகத்தையும் தரு நான் முகனுக்குக் கிளத்து
தந்தையின் மருகோனே
எல்லா உலகங்களையும் படைக்கும் பிரமனுக்கு தந்தை என்று போற்றப்படும் திருமாலின் மருகனே, - நாடும் அகத்து எற்கு இடுக்கண் வந்தது தீரிடுதற்குப்
பதத்தையும் தரு
உன்னை நாடும் அடியேனுக்கு வந்த துன்பத்தைத் தீரும்படி திருவடியையும் தந்தருளுகின்றவனே, - நாயகர் புத்ரக் குருக்கள் என்று அருள் வடிவேலா
தலைவர் சிவபிரான் அன்புடன் உன்னை மைந்தனே, தகப்பன் சாமியே என்று அழைத்தருளிய கூரிய வேலனே, - தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
தோதிமி தித்தித் தனத்த தந்த என
இசையோடே சூழ நடித்து
தோதிமி தித்தித் திமித்த டிங்குகு டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி தோதிமி தித்தித் தனத்த தந்த என்ற இசையுடன் (சிவலோகத்துப்) பூதகணங்கள் சூழ நடனம் செய்து, - சடத்தில் நின்று உயிரான(து) துறத்தற்கு
யான் உடலினின்றும் உயிரை விடும்போது, - இரக்கமும் சுபசோபனம் உய்க்கக் கருத்தும் வந்து அருள்
புரிவோனே
இரக்கமும், (என்னைச்) சுப மங்கள வாழ்த்து நிலையில் சேர்ப்பதற்குத் திருவுள்ளமும் கூடிவந்து அருள் புரிவோனே, - ஓதி எழுத்துக்கு அடக்கமும் சிவ காரண பத்தர்க்கு
இரக்கமும்
ஓதப்படும் மந்திரங்களுக்கு உட் பொருள் என்றும், சிவ சம்பந்தமான பக்தர்களிடத்தில் இரக்கமுள்ளவன் என்றும், - தகு ஓம் என எழுத்துக்கு உயிர்ப்பும் என் சுடர் ஒளியோனே
உயர்ந்த ஓம் என்ற பிரணவ எழுத்துக்கு உயிர் நாடி என்றும் சொல்ல நின்ற பேரொளியானவனே, - ஓதி இணர்த்திக் குகைக்கு இடும் கனக ஆபரணத்தின்
பொருள் பயன் தரு
ஒதியமரம் பூத்துக் குகையில் மலருக்குப் பதிலாக உதிர்க்கின்ற பொன் ஆபரணம் போல அருமையான மோட்சப் பலனைத் தருகின்றவனும், - ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே.
ஊதி மலையில் உள்ளம் மகிழ்ந்து வீற்றிருப்பவனும் ஆகிய பெருமாளே.