தனன தனதன தனன தனதன
தனன தனதன ...... தனதான
கருடன் மிசைவரு கரிய புயலென
கமல மணியென ...... வுலகோரைக்
கதறி யவர்பெயர் செருகி மனமது
கருதி முதுமொழி ...... களைநாடித்
திருடி யொருபடி நெருடி யறிவிலர்
செவியில் நுழைவன ...... கவிபாடித்
திரியு மவர்சில புலவர் மொழிவது
சிறிது முணர்வகை ...... யறியேனே
வருடை யினமது முருடு படுமகில்
மரமு மருதமு ...... மடிசாய
மதுர மெனுநதி பெருகி யிருகரை
வழிய வகைவகை ...... குதிபாயுங்
குருடி மலையுறை முருக குலவட
குவடு தவிடெழ ...... மயிலேறுங்
குமர குருபர திமிர தினகர
குறைவி லிமையவர் ...... பெருமாளே.
- கருடன் மிசை வரு கரிய புயல் என
கருடன்மேல் வருகின்ற கரு மேகம் போன்ற திருமால் நீ என்றும், - கமல மணி என உலகோரை
தாமரை (பதும நிதி), சிந்தாமணி நீ என்றும் உலகத்தில் உள்ளவர்களை - கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி
கூச்சலிட்டு, பாடலில் பாடப்படுபவருடைய பெயரை வைத்து அழைத்து, மனத்தில் மிக்க கருத்துடன் - முது மொழிகளை நாடி
பழைய செஞ் சொற்களைத் தேடியும், - திருடி ஒரு படி நெருடி
திருடியும், ஒரு படி அளவுக்குத் திரித்து அப்பாடலில் அமைத்தும், - அறிவிலர் செவியில் நுழைவன கவி பாடி
அறிவில்லாத மனிதர்களுடைய காதுகளில் நுழையும் படி பாடல்களைப் பாடியும், - திரியும் அவர் சில புலவர் மொழிவது
திரிகின்றவர்களாகிய சில புலவர்கள் கூறுவது, - சிறிதும் உணர் வகை அறியேனே
சற்றேனும் உணரும்படியான வழியை நான் அறிந்திலேன். - வருடை இனம் அது முருடு படும்
மலை ஆடுகளின் கூட்டமும், கரடு முரடு உள்ள - அகில் மரமும் மருதமும் அடி சாய
அகில், மருதம் ஆகிய மரங்களும் அடி பெயர்ந்து சாயும்படி, - மதுரம் எனு(ம்) நதி பெருகி இரு கரை வழிய
மதுரம் என்ற ஆறு பெருகி இரண்டு கரைகளும் வழிந்து ஓடி, - வகை வகை குதி பாயும்
பல வகையாகக் குதித்துப் பாய்கின்ற - குருடி மலை உறை முருக
குருடி மலையில்* வீற்றிருக்கும் முருகனே, - குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும்
சிறந்த வட மலை ஆகிய கிரெளஞ்சம் தவிடு பொடியாய்த் தூள் எழ மயிலில் ஏறும், - குமர குருபர திமிர தினகர
குமரனே, குருபரனே, அஞ்ஞான இருளுக்கு ஓர் சூரியனே, - குறைவில் இமையவர் பெருமாளே.
குறைவில்லாத தேவர்களின் பெருமாளே.