தனதன தனத்த தான தனதன தனத்த தான
தனதன தனத்த தான ...... தனதான
மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக
மகளிரு நகைக்க தாதை ...... தமரோடும்
மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்
வசைமொழி பிதற்றி நாளு ...... மடியேனை
அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி
னகமதை யெடுத்த சேம ...... மிதுவோவென்
றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது
மணுகிமு னளித்த பாத ...... மருள்வாயே
தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
தமருக மறைக்கு ழாமு ...... மலைமோதத்
தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு
சமரிடை விடுத்த சோதி ...... முருகோனே
எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத
எழுதரிய பச்சை மேனி ...... யுமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு ...... பெருமாளே.
- மனையவள் நகைக்க வூரின் அனைவரு நகைக்க
மனைவி நகைக்கவும், ஊரவர் யாவரும் நகைக்கவும், - லோக மகளிரு நகைக்க
உலகத்திலுள்ள மாதர்களெல்லாம் நகைக்கவும், - தாதை தமரோடும் மனமது சலிப்ப
தந்தையும் சுற்றத்தாரும் உள்ளம் வெறுப்படையவும், - நாயன் உளமது சலிப்ப
என்னுடைய மனமும் மிகச் சலிப்படையவும், - யாரும் வசைமொழி பிதற்றி
எல்லோரும் பழிமொழிகளை ஆராயாமல் கூறி, - நாளும் அடியேனை அனைவரும் இழிப்ப
தினம்தோறும் என்னை அனைவரும் இகழவும், - நாடு மனவிருள் மிகுத்து
எண்ணமிடும் மனத்தில் இருள் மிகுந்து - நாடின் அகமதை யெடுத்த சேமம்
யோசித்துப் பார்த்தால் நான் பிறந்து பெற்ற பயன் - இதுவோவென்று அடியனு நினைத்து நாளும்
இதுதானோ என்று நானும் நாள்தோறும் நினைத்து - உடலுயிர் விடுத்த போதும்
கடைசியில் உடலினின்றும் உயிரை விடத் துணிந்த சமயத்தில்* - அணுகிமுன் அளித்த பாதம் அருள்வாயே
என்னருகே வந்து முன்பு நீ அளித்த பாத தீக்ஷையை இப்போதும் அருள்வாயாக. - தனதன தனத்த தான என முரசொலிப்ப
தனதன தனத்த தான என்ற தாளத்தில் முரசு ஒலிக்க, - வீணை தமருக மறைக்குழாமும் அலைமோத
வீணை, உடுக்கை, வேத கோஷங்கள் இவையாவும் அலைமோதுவது போலப் பெருக, - தடிநிகர் அயிற்கடாவி
மின்னல் போன்ற ஒளிவிடும் வேலாயுதத்தை வீசி - அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி
முருகோனே
அசுரர்கள் மாயும்படி போர்க்களத்தில் செலுத்திய ஜோதி முருகனே, - எனைமனம் உருக்கி யோக அநுபுதி யளித்த பாத
என் மனத்தை உருக்கி, யோக அநுபூதியை* அளித்த திருவடிகளை உடையவனே, - எழுதரிய பச்சை மேனி உமைபாலா
எழுதுதற்கு அரியதான மரகதப் பச்சை மேனியள் உமாதேவியின் பாலனே, - இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
தேவர்கள் துதிக்க ஞானமலையில்** வீற்றிருக்கும் குறத்தி வள்ளியின் மணவாளனே, - இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே.
விளங்குகின்ற இந்திராணியின் மகள் தேவயானை விரும்பும் பெருமாளே.