தானதன தான தானதன தான
தானதன தான ...... தனதான
சூதுகொலை கார ராசைபண மாதர்
தூவையர்கள் சோகை ...... முகநீலர்
சூலைவலி வாத மோடளைவர் பாவர்
தூமையர்கள் கோளர் ...... தெருவூடே
சாதனைகள் பேசி வாருமென நாழி
தாழிவிலை கூறி ...... தெனவோதி
சாயவெகு மாய தூளியுற வாக
தாடியிடு வோர்க ...... ளுறவாமோ
வேதமுநி வோர்கள் பாலகர்கள் மாதர்
வேதியர்கள் பூச ...... லெனஏகி
வீறசுரர் பாறி வீழஅலை யேழு
வேலையள றாக ...... விடும்வேலா
நாதரிட மேவு மாதுசிவ காமி
நாரியபி ராமி ...... யருள்பாலா
நாரணசு வாமி யீனுமக ளோடு
ஞானமலை மேவு ...... பெருமாளே.
- சூது கொலைகாரர் ஆசை பண மாதர்
சூதும் கொலையும் செய்பவர்கள், பணத்தில் ஆசை கொண்ட விலைமாதர்கள், - தூவையர்கள் சோகை முகம் நீலர்
இறைச்சி உண்போர், (இரத்தக் குறைவால்) வெளுத்த முகம் உடைய விஷமிகள், - சூலை வலி வாதமோடு அளைவர் பாவர் தூமையர்கள்
கோளர்
சூலை நோய், வலிப்பு, வாத நோய் இவைகளோடு சம்பந்தப் படுபவர்கள், பாவிகள், தூய்மை இல்லாதவர்கள், கோள் சொல்லுபவர்கள், - தெரு ஊடே சாதனைகள் பேசி வாரும் என நாழி தாழி விலை
கூறு இது என ஓதி
தெருவில் காரியம் சாதிப்பதற்கு வேண்டிய அழுத்தமான பேச்சுக்களைப் பேசி, வாரும் என அழைத்து, ஒரு நாழிகை நேரத்திற்கு (24 நிமிடங்களுக்கு ) பாண்டமாகிய உடலின் விலை நிர்ணயம் இதுதான் என்று பேரம் பேசி, - சாய வெகு மாய தூளி உற ஆக தாடி இடுவோர்கள்
உறவாமோ
(வந்தவர்கள் தம் பக்கம்) சாயும்படி மிக்க மாயப் பொடியைப் படும்படி அவர்கள் மீது தூவி சரீரத்தைத் தட்டிக் கொடுப்பவர்கள் உறவு எனக்கு என்றேனும் ஆகுமோ? - வேத முநிவோர்கள் பாலகர்கள் மாதர் வேதியர்கள் பூசல் என
ஏகி
வேதம் வல்ல முனிவர்கள், குழந்தைகள், பெண்கள், மறையோர் இவர்களை போர் நடக்கப் போகிறது என்று முன்னதாகவே அப்புறப்படுத்தி விட்டு, - வீறு அசுரர் பாறி வீழ அலை ஏழு வேலை அளறு ஆக விடும்
வேலா
மேலெழுந்து வந்த அசுரர்கள் அழிந்து கீழே விழ, அலை கடல் ஏழும் வற்றிச் சேறாக வேலைச் செலுத்தியவனே, - நாதரிடம் மேவு மாது சிவகாமி நாரி அபிராமி அருள்
பாலா
தலைவரான சிவபெருமானுடைய இடப் பாகத்தில் உறையும் மாது சிவகாமி, பார்வதியாகிய அழகி அருளிய குழந்தையே, - நாரண சுவாமி ஈனும் மகளோடு ஞான மலை மேவும்
பெருமாளே.
நாராயண மூர்த்தி ஈன்ற மகளான வள்ளியோடு, ஞான மலையில்* வீற்றிருக்கும் பெருமாளே.