தானனந் தானதன தாத்த தனதன
தானனந் தானதன தாத்த தனதன
தானனந் தானதன தாத்த தனதன ...... தந்ததான
மாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடு
போகஇந்த் ராதிசிலை தோற்ற நுதல்கொடு
மானவண் டேறுகணை தோற்ற விழிகொடு ...... கண்டுபோல
மாலர்கொண் டாடுகனி தோற்ற இதழ்கொடு
சோலைசென் றூதுகுயில் தோற்ற இசைகொடு
வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு ...... மன்றுளாடி
சீகரம் பேணுதுடி தோற்ற இடைகொடு
போகபண் டாரபணி தோற்ற அரைகொடு
தேனுகுஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடு ...... வந்துகாசு
தேடுகின் றாரொடுமெய் தூர்த்த னெனவுற
வாடுகின் றேனைமல நீக்கி யொளிதரு
சீவனொன் றானபர மார்த்த தெரிசனை ...... வந்துதாராய்
வேகமுண் டாகியுமை சாற்று மளவினில்
மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை
வீரனென் பானொருப ராக்ர னெனவர ...... அன்றுசோமன்
மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக
ஆனுகுந் தீகையற சேட்ட விதிதலை
வீழநன் பாரதியு மூக்கு நழுவிட ...... வந்தமாயன்
ஏகநின் றாகியமர் தோற்று வதறிட
வேகவுங் காரமொடு ஆர்க்க அலகைகள்
ஏறிவென் றாடுகள நீக்கி முநிவரர் ...... வந்துசேயென்
றீசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை
தாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய
ராசகெம் பீரவள நாட்டு மலைவளர் ...... தம்பிரானே.
- மாகம் சஞ்சாரம் முகில் தோற்ற குழல் கொ(ண்)டு
ஆகாயத்தில் உலவுகின்ற மேகத்தை தோல்வியுறும்படிச் செய்த கூந்தலைக் கொண்டும், - போக இந்திராதி சிலை தோற்ற நுதல் கொ(ண்)டு
போகங்களை அனுபவிக்கின்ற இந்திர (வான)வில்லை தோல்வி அடையும்படிச் செய்த நெற்றியைக் கொண்டும், - மான வண்டு ஏறு கணை தோற்ற விழி கொ(ண்)டு கண்டு
போல மாலர் கொண்டு ஆடு கனி தோற்ற இதழ்
கொ(ண்)டு
பெருமை தங்கிய வண்டுகள் சேர்கின்ற மன்மதனுடைய மலர்ப் பாணங்களை தோல்வியுறச் செய்த கண்களைக் கொண்டும், கற்கண்டு போல இனிக்கின்றதென்று (காம) மயக்கம் கொண்டவர்கள் கொண்டாடுகின்ற, கொவ்வைக் கனியை தோல்வியுறச் செய்த வாயிதழைக் கொண்டும், - சோலை சென்று ஊது குயில் தோற்ற இசை கொ(ண்)டு வார்
பொரும் பாரமலை தோற்ற முலை கொ(ண்)டு
சோலையில் போய் (அங்கே) ஒலி எழுப்பும் குயிலைத் தோல்வி அடையும்படி செய்த இசை இன்பம் கொண்டும், கச்சு அணிந்து பாரமுள்ளதான, மலையைத் தோல்வி அடையும்படிச் செய்த, மார்பகங்களைக் கொண்டும், - மன்றுள் ஆடி சீகரம் பேணு துடி தோற்ற இடை கொ(ண்)டு
போக பண்டார பணி தோற்ற அரை கொ(ண்)டு
அம்பலத்தில் ஆடுகின்ற நடராஜர் திருக்கரத்தில் விரும்பி வைத்துள்ள உடுக்கையை தோல்வி அடையும்படிச் செய்த இடுப்பைக் கொண்டும், காம போகத்தின் கருவூலமாகிய, பாம்பைத் தோல்வி அடையும்படி செய்த பெண்குறியைக் கொண்டும், - தேன் உகும் சீர் கதலி தோற்ற தொடை கொடு வந்து
தேன் சொட்டும் சிறப்புள்ள வாழையைத் தோல்வியுறச் செய்த தொடையைக் கொண்டும் வெளியே வந்து, - காசு தேடுகின்றாரொடு மெய் தூர்த்தன் என உறவாடுகின்ற
எனை மல(ம்) நீக்கி ஒளி தரு சீவன் ஒன்றான பரமார்த்த
தெரிசனை வந்து தாராய்
பொருளைத் தேடி நிற்கும் வேசியரோடு பொழுது போக்கும் உடல் கொண்ட பொல்லாதவனாக உறவாடுகின்ற என்னை மலங்களைப் போக்கி, ஒளி வீசும் சீவனோடு ஒன்று பட்ட பரம் பொருள் விளக்கத்தை வந்து தந்தருளுக. - வேகம் உண்டாகி உமை சாற்றும் அளவினில் மா மகம் கூரும்
அது தீர்க்க வடிவுடை வீரன் என்பான் ஒரு பராக்ரன் என
வர
கோபம் தோன்றி உமை கூறியவுடனே (தக்ஷனுடைய) பெரிய வேள்வி மேற்கொண்டு நடப்பதை அழிக்கும் பொருட்டு, ஒளி நிறைந்த வீரபத்திரன் என்னும் வலிமையாளனாகிய ஒப்பற்றவன் தோன்றி வர, - அன்று சோமன் மேனியும் தேய கதிர் தோற்ற எயிறு உக
ஆன் உகும் தீ கை அற சேட்ட விதி தலை வீழ நல் பாரதியும்
மூக்கு நழுவிட வந்த மாயன் ஏக நின்றாகி அமர் தோற்று
வதறிட
அன்று சந்திரன் உடல் தேய, சூரியனுக்கு உள்ள பற்கள் உதிர, யாகப் பசுவைப் பொடியாக்கும் அக்கினியின் கை அற்று விழ, முதன்மையான தக்ஷன் முடி அற்று விழ, நல்ல சரசுவதியின் மூக்கு அறுபட்டு நழுவி விழ, அங்கு வந்திருந்த திருமால் ஓட்டம் பிடிக்க, அந்த யாக சாலையில் நின்று போர் விளைத்து, (அங்கிருந்தவர்களை) வைது, - வேக உங்காரமோடு ஆர்க்க அலகைகள் ஏறி வென்று ஆடு
களம் நீக்கி
கோப உங்காரத்தோடு சிவபெருமான் ஆரவாரம் செய்ய, பேய்கள் கூடி வென்று ஆடிய (அந்த) யாக சாலையை விட்டு விலக்க, - முநிவர் வந்து சேய் என்று ஈச நண்பான புருஷார்த்த
தெரிசனை தா எனும் கேள்வி நெறி கீர்த்தி மருவிய ராச
கெம்பீர வள நாட்டு மலை வளர் தம்பிரானே.
முனிவர்களும் வந்து சேயே என்றும், ஈசா என்றும் போற்றி அன்பின் பாற்பட்ட நால்வகைப் புருஷார்த்தங்களின் விளக்கக் காட்சியை தந்தருளுக என வேண்டிய கேள்வி நெறியின் புகழைக் கொண்ட ராஜகெம்பீர வள நாட்டு மலையில்* விளங்கும் தம்பிரானே.