தய்யதன தானந்த தய்யதன தானந்த
தய்யதன தானந்த ...... தனதான
தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த ...... மெனவாகி
துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
தொய்யுபொரு ளாறங்க ...... மெனமேவும்
பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி ...... யிசையாகிப்
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த
பெளவமுற வேநின்ற ...... தருள்வாயே
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்வருக வேநின்று ...... குழலூதுங்
கையன் மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் ...... கதிர்வேலா
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை ...... யலராலே
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
கொல்லிமலை மேனின்ற ...... பெருமாளே.
- தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
பழமையானதும் முதலானதும் தான் ஒன்றாக விளங்குவதாய், சக்தி - சிவன் என்ற மென்மையான இரண்டு பேதங்களாக விளங்குவதாய், - சொல்லுகுண மூவு அந்தமெனவாகி
சொல்லப்படுகின்ற மூன்று குணங்களின் ( த்வம், ரஜோ, தமஸ்) முடிவாக விளங்கும் மும்மூர்த்திகளாய், - துய்யசதுர் வேதங்கள் வெய்யபுலன் ஓரைந்து
தூய்மையான நான்கு வேதங்கள் ஆகி, கொடிய புலன்களாகிய (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற) ஐந்து ஆகி, - தொய்யுபொருள் ஆறங்கம் எனமேவும்
சோர்வடையச் செய்யவல்ல பொருள் விளக்கங்களைக் கொண்ட ஆறு வேதாங்கங்களாகி* 1 , - பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பலப்பல நாதங்களிடையே தங்குவதாய், உயிர்த்தளைகள் நீங்க பசு, பாசம் ஆகியவற்றில் தங்குவதாய், - பல்குதமிழ் தானொன்றி யிசையாகி
பெருகிவரும் தமிழ் மொழியில் பொருந்தி, இன்னிசையின் வடிவாகி, - பல்லுயிருமாய் அந்தமில்ல சொருபாநந்த பெளவமுறவே
பலவித உயிர்களுமாகி, முடிவில்லாத ஆனந்த உருவ சமுத்திரத்தில் மூழ்கும்படி - நின்ற தருள்வாயே
எது செய்யவல்லதோ, அந்தப் பொருளை நீ அருள்வாயாக. - கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோ
கல்லும் உருகும்படியான இனிமையுடன் புல்லாங்குழல் வாசிக்க, துன்பம் அடைந்திருந்த பசுக்கள் - அம் புகல் வருகவே நின்று குழலூதுங் கையன்
அழகிய புகும் இடத்துக்கு வரும்படியாக, நின்று குழலூதிய கண்ணனாகிய திருமால் - மிசையேறு உம்பன் நொய்யசடையோன் எந்தை
(முன்பொருநாள்) ரிஷபமாகிய போது அதன் மீது வாகனமாக* 2 ஏறிய பெரியவரும், தாழ்ந்த சடையருமாகிய எங்கள் தந்தை சிவபிரான் - கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா
கை குவித்துத் தொழ, உண்மையான ஞானத்தை உபதேசித்த ஒளிமிக்க வேலாயுதனே, - கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமேசென்று
தினைக் கொல்லையில் வாழ்ந்திருந்த வள்ளியின் புனத்தில் சென்று, - கொள்ளைகொளு மாரன்கையலராலே
உயிரைக் கொள்ளை கொள்ளும் மன்மதனின் கை மலர் அம்புகளின் செயலாலே, - கொய்துதழையேகொண்டு செல்லுமழவாகந்த
தழைகளைக் கொய்து சென்ற* 3 கட்டழகுக் கந்தனே, - கொல்லிமலை மேனின்ற பெருமாளே.
கொல்லிமலை* 4 மீது நின்றருளும் பெருமாளே.