தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
தத்த தன்ன தய்ய ...... தனதான
கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்
கட்கு மன்னு மில்ல ...... மிதுபேணி
கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு
கக்க எண்ணி முல்லை ...... நகைமாதர்
இட்ட மெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி
யிட்டு பொன்னை யில்லை ...... யெனஏகி
எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி
யெற்று மிங்ங னைவ ...... தியல்போதான்
முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள
முட்ட நன்மை விள்ள ...... வருவோனே
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி
முத்தி விண்ண வல்லி ...... மணவாளா
பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி
பட்ட துன்னு கொல்லி ...... மலைநாடா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.
- கட்ட மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் ஐவர்கட்கு மன்னும்
இல்லம் இது பேணி
கஷ்டங்கள் நிறைந்த சேறு போன்றதும், கொடு கொட்டி என்னும் ஆடல்போலக் கூத்தாட்டி வைத்து ஐம்புலன்களுக்கும் இருப்பான வீடு ஆகியதுமான இந்த உடலை விரும்பி, - கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள் உகக்க எண்ணி
நான் கற்ற வித்தைகளைச் சொல்லி, சுலபமாக நிறைவேறும் என்று மனதில் நினைத்து, மகிழலாம் எனக் கருதி - முல்லை நகை மாதர் இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி
முல்லை மலர் போன்ற பற்களை உடைய விலைமாதர்களின் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி, நல்ல பொருள்களை எல்லாம் கொட்டிக் கொடுத்து, - அங்ஙன் நல்கி இட்டு பொன்னை இல்லை என ஏகி
அவர்களிடம் கொடுத்த பின்னர், மேலும் கொடுப்பதற்குப் பொருள் இல்லை என்று சொல்லி வெளி வந்து, - எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி எற்றும்
இங்ஙன் நைவது இயல்போ தான்
ஏமாற்றும் பொருட்டு பொய் வழிகளை யோசிக்கலுற்றும், பொன் இல்லாமையை நினைத்து இரக்கமுற்றும், இவ்வாறு மனம் வருந்துதல் தக்கதாமோ? - முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட
நன்மை விள்ள வருவோனே
முழு உண்மையைச் சொன்ன ருத்திர சன்மன்* என்னும் செட்டியாக அவதரித்து, சண்டையிட்ட புலவர்கள் உறுதிப் பொருளை அறிந்துகொள்ள, முழுவதும் சமாதானம் விளையும்படியாக வந்தவனே, - முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண
வல்லி மணவாளா
முத்து நிற வல்லிக் கொடி போன்றவளும், அழகிய சித்ர நிற வல்லியும், முக்தி தரவல்ல விண்ணுலக வல்லியுமான தேவயானையின் மணவாளனே, - பட்டம் மன்னு அ(வ்) வல்லி மட்ட மன்ன வல்லிவ பட்ட
துன்னு கொல்லி மலை நாடா
வழியில் அமைக்கப்பட்டிருந்த மோகினிப் பெண், மது மயக்கம் போல மயக்கம் தரும் மோகினிப் பெண்** ஆகிய கொல்லிப் பாவை இருக்கும் நெருங்கிய காடு அடர்ந்த கொல்லி மலை*** நாடனே, - பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை
வல்ல பெருமாளே.
பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி இவைகளைத் தலையில் அணிந்தவனே, பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்த வல்ல பெருமாளே.