திருப்புகழ் · 602பத்தர் கணப்ரிய (திருச்செங்கோடு)

baththargaNapriya

தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன ...... தனதான

Yaazh Music

பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய ...... குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக ...... மறவேனே
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
கட்டிய ணைத்தப ...... னிருதோளா
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிட ...... மறைநூலின்
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • பத்தர் கணப்ரிய
    அடியார் திருக்கூட்டத்தின் மீது அன்புள்ளவனே,
  • நிர்த்த நடித்திடு பட்சி
    நடனம் ஆடவல்ல மயிலை
  • நடத்திய குக
    வாகனமாகக் கொண்டு உலவும் குகமூர்த்தியே,
  • பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள
    கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நாலாதிசைகளிலும் உள்ள
  • பத்தர்கள் அற்புதம் எனவோதும்
    அன்பர்கள் இது அற்புதம் என வியந்து கொண்டாடும்
  • சித்ர கவித்துவ சத்தமிகுத்த
    அழகிய கவிபாடும் திறத்தின் ஒலி மிகுந்துள்ள
  • திருப்புகழைச் சிறிதடியேனும்
    திருப்புகழை ஓரளவுக்காவது நானும்
  • செப்பென வைத்து
    சொல்லும்படியாக வைத்தும்,
  • உலகிற்பரவ
    அப்பாடல்கள் உலகெங்கும் பரவும்படியாகச் செய்தும்,
  • தெரிசித்த அநுக்ரகம் மறவேனே
    திருப்புகழில் உன்னைத் தரிசனம் செய்வித்த அருளை அடியேன் ஒரு நாளும் மறக்க மாட்டேன்.
  • கத்திய தத்தை களைத்துவிழ
    கத்துகின்ற கிளிகள் களைத்து விழும்படி
  • திரி கற்கவணிட்டெறி
    சுழற்றும் கவணில் கல்லை வைத்து எறிகின்ற,
  • தினைகாவல் கற்ற குறத்தி
    தினைப்புனத்தைக் காவல் செய்யக் கற்ற குறத்தி வள்ளியின்
  • நிறத்த கழுத்தடி கட்டியணைத்த
    அழகிய நிறமுடைய கழுத்தினைக் கட்டி அணைத்த
  • பனிருதோளா
    பன்னிரண்டு புயங்களை உடையவனே,
  • சத்தியை யொக்க இடத்தினில் வைத்த
    பராசக்தியைப் பொருந்த தன் இடப்பக்கத்தில் வைத்த
  • தகப்பனு மெச்சிட
    தந்தையாகிய சிவ பெருமானும் மெச்சும்படி
  • மறைநூலின் தத்துவ தற்பர முற்றும் உணர்த்திய
    வேத நூலின் மெய்ப்பொருள் பரம்பொருள் அனைத்தையும் உபதேசித்து விளக்கிய
  • சர்ப்பகிரிச்சுரர் பெருமாளே.
    நாகமலையில்* வாழும், தேவர்கள் போற்றும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits