திருப்புகழ் 603 புற்புதம் (திருச்செங்கோடு)

தத்ததன தான தத்ததன தான
தத்ததன தான ...... தனதான
புற்புதமெ  னாம  அற்பநிலை  யாத 
பொய்க்குடில்கு  லாவு  ......  மனையாளும் 
புத்திரரும்  வீடு  மித்திரரு  மான 
புத்திசலி  யாத  ......  பெருவாழ்வு 
நிற்பதொரு  கோடி  கற்பமென  மாய 
நிட்டையுடன்  வாழு  ......  மடியேன்யான் 
நித்தநின  தாளில்  வைத்ததொரு  காதல் 
நிற்கும்வகை  யோத  ......  நினைவாயே 
சற்பகிரி  நாத  முத்தமிழ்வி  நோத 
சக்ரகதை  பாணி  ......  மருகோனே 
தர்க்கசமண்  மூகர்  மிக்ககழு  வேற 
வைத்தவொரு  காழி  ......  மறையோனே 
கற்புவழு  வாது  வெற்படியின்  மேவு 
கற்றைமற  வாணர்  ......  கொடிகோவே 
கைத்தஅசு  ரேசர்  மொய்த்தகுல  கால 
கற்பதரு  நாடர்  ......  பெருமாளே. 
  • புற்புதம் என் நாமம்
    நீர்க்குமிழி என்னும் பெயரோடு
  • அற்ப நிலையாத
    சிறிது காலமும் நிலைக்காத
  • பொய்க்குடில்
    பொய்க் குடிசை போல் இருக்கும் இந்த உடலோடு
  • குலாவு மனையாளும்
    குலாவுகின்ற என் மனைவியும்,
  • புத்திரரும் வீடு மித்திரரும ஆன்
    புதல்வர்களும், வீடும், நண்பர்களும், ஆன சூழலில்
  • புத்திசலியாத பெருவாழ்வு
    புத்தி சோர்வடையாமல், இந்த வாழ்வு பெரும் வாழ்வு,
  • நிற்பதொரு கோடி கற்பமென
    இது நிலைத்து நிற்பது ஒரு கோடி கற்ப காலம் என்று கருதும்
  • மாய நிட்டையுடன்
    மயக்க தியான நிலையில்
  • வாழும் அடியேன்யான்
    வாழ்கின்ற அடியேனாகிய யான்
  • நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
    நாள்தோறும் உனது பதத்தில் வைத்த ஒப்பற்ற அன்பானது
  • நிற்கும்வகை ஓத நினைவாயே
    நிலைத்து நிற்கும் வழியை உபதேசிக்க நீ நினைத்தருள வேண்டும்.
  • சற்பகிரி நாத
    நாக மலையாகிய* இந்தத் திருச்செங்கோட்டுத் தலத்தின் நாதனே,
  • முத்தமிழ்விநோத
    மூன்று தமிழிலும்** நன்கு பொழுது போக்குபவனே,
  • சக்ரகதை பாணி மருகோனே
    சக்கரத்தையும் கதையையும் கரங்களில் ஏந்திய திருமால் மருகனே,
  • தர்க்கசமண் மூகர்
    வாது செய்து தோற்று வாயிழந்த ஊமைகளாய் நின்ற சமணர்களை
  • மிக்க கழுவேற வைத்த
    மிகுந்த கழுமரங்களில் ஏறவைத்த
  • ஒரு காழி மறையோனே
    ஒப்பற்ற சீகாழி அந்தணனாம் திருஞானசம்பந்தனே***,
  • கற்பு வழுவாது
    கற்புநிலை பிறழாது இருப்பவளும்,
  • வெற்பு அடியின் மேவு கற்றைமறவாணர் கொடிகோவே
    வள்ளிமலைக்கு அடியில் கூட்டமாக வாழும் வேடர்களின் குலக்கொடியானவளுமான வள்ளியின் கணவனே,
  • கைத்த அசுரேசர் மொய்த்தகுல கால
    உன்னை வெறுத்த அசுரத் தலைவர்களின் நெருங்கிய குலத்துக்கு யமனே,
  • கற்பதரு நாடர் பெருமாளே.
    கற்பக விருக்ஷம் உள்ள தேவநாட்டவருக்குப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com