திருப்புகழ் 601 அத்த வேட்கை (திருச்செங்கோடு)

தத்த தாத்தத் தத்த தாத்தத்
தத்த தாத்தத் ...... தனதான
அத்த  வேட்கைப்  பற்றி  நோக்கத் 
தத்தை  மார்க்குத்  ......  தமராயன் 
பற்ற  கூட்டத்  திற்ப  ராக்குற் 
றச்சு  தோட்பற்  ......  றியவோடும் 
சித்த  மீட்டுப்  பொய்த்த  வாழ்க்கைச் 
சிக்கை  நீக்கித்  ......  திணிதாய 
சித்ர  வாக்குப்  பெற்று  வாழ்த்திச் 
செச்சை  சாத்தப்  ......  பெறுவேனோ 
கொத்து  நூற்றுப்  பத்து  நாட்டக் 
கொற்ற  வேத்துக்  ......  கரசாய 
குக்கு  டாத்தச்  சர்ப்ப  கோத்ரப் 
பொற்ப  வேற்கைக்  ......  குமரேசா 
தத்வ  நாற்பத்  தெட்டு  நாற்பத் 
தெட்டு  மேற்றுத்  ......  திடமேவும் 
தர்க்க  சாத்ரத்  தக்க  மார்க்கச் 
சத்ய  வாக்யப்  ......  பெருமாளே. 
  • அத்த(ம்) வேட்கை பற்றி நோக்கு அத் தத்தைமார்க்கு தமர் ஆய்
    பொருளின் மேல் மட்டும் ஆசைகொண்டு என் மீது விருப்பம் வைக்கும் அந்தக் கிளிபோன்ற விலை மகளிருக்கு வேண்டியவனாய்,
  • அன்பு அற்ற கூட்டத்தில் பராக்கு உற்று அச்சு தோள் பற்ற இயவோடும் சித்தம்
    அன்பு இல்லாத அவர்களின் கூட்டத்தில் மட்டும் என் கவனத்தை வைத்து, உருவமைந்த அவர்கள் தோளை அணைக்க அலை பாயும் மனத்தை
  • மீட்டுப் பொய்த்த வாழ்க்கை சிக்கை நீக்கி
    அவ்வழியினின்றும் திருப்பி, பொய்யான வாழ்க்கை என்னும் நிலையில் சிக்கிக்கொண்டதை நீக்கி,
  • திணிது ஆய சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச் செச்சை சாத்தப் பெறுவேனோ
    வன்மை வாய்ந்த அழகிய வாக்கை நான் அடைந்து, உன் வெட்சி மாலையை அணியப்பெறும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ?
  • கொத்து நூற்றுப் பத்து நாட்ட கொற்ற வேத்துக்கு அரசாய குக்குட(ம்) அத்த
    நெருக்கமான (100 மடங்கு 10=1000) ஆயிரம் கண்களை உடலில் உடைய வீர வேந்தனாகிய இந்திரனுக்கு* அரசனாகிய, கோழி(க்கொடி) ஏந்திய கையனே,
  • சர்ப்ப கோத்ரப் பொற்ப வேல் கைக் குமரேசா
    பாம்பு மலை எனப்படும் திருச்செங்கோட்டு** அழகனே, வேலாயுதத்தை ஏந்தும் திருக்கரத்தனே, குமரேசனே,
  • தத்வம் நாற்பத்து எட்டு நாற்பத்து எட்டும் ஏற்றுத் திடம் மேவும் தர்க்க சாத்ரத் தக்க மார்க்க
    தொண்ணூற்றாறு (48+48) தத்துவங்களையும்*** பொருந்தி, திடமான தர்க்க சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட தக்க நீதி வழிகளில் உள்ள
  • சத்ய வாக்யப் பெருமாளே.
    சத்தியமான சொற்களைப் பேசும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com