தத்த தனதனன தத்த தனதனன
தத்த தனதனன ...... தனதான
அத்து கிரினலத ரத்து அலனவள
கத்து வளர்செய்புள ...... கிதபூத
ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி
யத்தி யிடனுறையு ...... நெடுமாம
ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத
லத்து ரகசிகரி ...... பகராதே
யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொள்நிரை
யத்தி னிடையடிமை ...... விழலாமோ
தத்து கவனவரி ணத்து வுபநிடவி
தத்து முநியுதவு ...... மொழியாறுத்
தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்
தத்தை தழுவியப ...... னிருதோளா
தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர்
தத்து மலையவுணர் ...... குலநாகந்
தத்த மிசைமரக தத்த மனியமயில்
தத்த விடுமமரர் ...... பெருமாளே.
- அத் துகிரின் நல் அதரத்து அல் அன அளகத்து
(விலைமாதரின்) அந்தப் பவளம் போன்ற சிவந்த உதட்டிலும், இருள் போன்ற கூந்தலிலும், - வளர் செய் புளகித பூதரத்து இரு கமல கரத்து இதயம்
உருகி
மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய மார்பகங்களிலும், இரண்டு தாமரை போன்ற கைகளிலும் மனம் உருகி, - அத்தி இடன் உறையும் நெடு மாமரத்து மலர் கனி
அலைத்து
கடலிடை இருந்த பெரிய மாமரத்தினுடைய (சூரனுடைய) மலரையும் பழத்தையும் கலக்கி (அதாவது சூரனைக் கொன்று) - வரும் இடைத் தலத்து உரக சிகரி பகராதே
பிறகு வந்து அமர்ந்தருளிய தலமாகிய பாம்பு மலையை (திருச்செங்கோட்டை)* ஓதித் துதியாமல், - அத்தி மல உடல் நடத்தி எரி கொள் நிரையத்தின் இடை
அடிமை விழலாமோ
எலும்பும் மலமும் கூடிய உடலைச் சுமந்து, எரிகின்ற நரகத்தில் அடிமையாகிய நான் விழலாமோ? - தத்து கவன அரிணத்து உபநிட விதத்து முநி உதவு
மொழியால்
வேகமான நடையை உடைய பெண்மானிடத்தில் வேத ஒழுக்கம் உடைய சிவ முநிவர் தந்த வார்த்தையால் (பிறந்தவளும்), - துத்தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர் தத்தை
பாலையும், தேனையும், அமுதத்தையும் ஒத்த இனிய மொழியை உடையவளும், குறவர் பெண்ணாகிய கிளி போன்றவளுமான வள்ளியை - தழுவிய ப(ன்)னிரு தோளா
அணைந்த பன்னிரண்டு தோள்களை உடையவனே, - தத்து உததி துரகதத்து மிகு திதிசர்
அலை வீசும் கடல் போல, குதிரைப் படையை மிக வேகமாகச் செலுத்தும் அசுரர்களும், - தத்து மலை அவுணர் குல நாகம் தத்த
யுத்தகளத்தில் பாய்ந்து போரிடும் அவுணர்களும், குலவரைகள் எட்டும் நடுங்க, - மிசை மரகதத் தமனிய மயில் தத்த விடும் அமரர்
பெருமாளே.
அவர்கள் மீது பசும் பொன் மயமான மயிலைப் பாய விட்டவனே, தேவர்களின் பெருமாளே.