தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
தாமா தாமா லாபா லோகா
தாரா தாரத் ...... தரணீசா
தானா சாரோ பாவா பாவோ
நாசா பாசத் ...... தபராத
யாமா யாமா தேசா ரூடா
யாரா யாபத் ...... தெனதாவி
யாமா காவாய் தீயே னீர்வா
யாதே யீமத் ...... துகலாமோ
காமா காமா தீனா நீணா
காவாய் காளக் ...... கிரியாய்கங்
காளா லீலா பாலா நீபா
காமா மோதக் ...... கனமானின்
தேமார் தேமா காமீ பாகீ
தேசா தேசத் ...... தவரோதுஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
- தாமா தாம ஆலாபா லோக ஆதாரா
மாலையை உடையவனே, இனிமையாக உரையாடுபவனே, உலகுக்கு ஆதாரமாக உள்ளவனே, - தார(ம்) தரணி ஈசா
நீர், மண் முதலிய ஐந்து பூதங்களுக்கும் ஈசனே, - தான ஆசாரோ பாவா பாவோ நாசா
கொடை அளிக்கும் ஒழுக்கம் உள்ளவர்களால் தியானிக்கப் படுபவனே, பாவ நாசனே, - பாசத்து அபராத யாமா யாமா தேசார் ஊடு
பாசங்களில் பற்று வைத்ததின் அபராதமாக தெற்கில் உள்ள யமபுரியைச் சேர்ந்தவர்களிடையே, - ஆராயா ஆபத்து எனது ஆவி ஆமா காவாய்
ஆராய்ச்சி இல்லாமல் ஆபத்தான நிலையை என்னுடைய உயிர் அடைதல் ஆகுமோ? என்னைக் காத்து அருள்வாய். - தீயேன் நீர் வாயாதே ஈமத்து உகலாமோ
கெட்டவனாகிய நான் நற் குணம் வாய்க்காமல் சுடுகாட்டைத் தீயைத் தாவிச் சேர்தல் நன்றோ? - காமா காம ஆதீனா நீள் நாகா வாய் காள கிரியாய்
அன்பனே, அடியார்கள் விரும்புவதை அளிப்பவனே, நீண்ட நாக கிரி என்னும் திருச்செங்கோட்டில்* வீற்றிருப்பவனே, - கங்காளா லீலா பாலா நீபா
எலும்பு மாலையை விளையாட்டாக அணியும் சிவனின் குழந்தையே, கடப்ப மாலை அணிந்தவனே, - காம ஆமோதக் கன மானின்
மிகுந்த விருப்பமுள்ள, பெருமை பொருந்திய மான் போன்ற வள்ளியின் - தேம் ஆர் தே மா காமீ பாகீ
தேன் கலந்த இனிய தினை மாவில் விருப்பம் உள்ளவனே, தகுதி வாய்ந்தவனே, - தேசா தேசத்தவர் ஓதும் சேயே
ஒளி உள்ளவனே, உலகத்தோர் போற்றும் குழந்தையே, - வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே.
தலைவனே, பொலிவு உடையவனே, அரசனே, தேவனே, தேவர்களுடைய பெருமாளே.