தான தனத் ...... தனதான
காலனிடத் ...... தணுகாதே
காசினியிற் ...... பிறவாதே
சீலஅகத் ...... தியஞான
தேனமுதைத் ...... தருவாயே
மாலயனுக் ...... கரியானே
மாதவரைப் ...... பிரியானே
நாலுமறைப் ...... பொருளானே
நாககிரிப் ...... பெருமாளே.
- காலனிடத்து அணுகாதே
யமனுடைய ஊரை நெருங்காத வகைக்கும், - காசினியிற் பிறவாதே
இந்தப் பூமியில் மீண்டும் பிறவாத வகைக்கும், - சீலஅகத்திய ஞான
நற்குணம் வாய்ந்த அகத்திய முநிவருக்கு நீ அருளிய ஞானோபதேசம் என்ற - தேனமுதைத் தருவாயே
தேன் போன்று இனிக்கும் நல்லமிர்தத்தை எனக்கும் தந்தருள்க. - மாலயனுக்கு அரியானே
திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே, - மாதவரைப் பிரியானே
சிறந்த தவசிரேஷ்டர்களை விட்டுப் பிரியாதவனே, - நாலுமறைப் பொருளானே
நான்கு வேதங்களின் மறை பொருளாக உள்ளவனே, - நாககிரிப் பெருமாளே.
நாககிரியாகிய திருச்செங்கோட்டில்* எழுந்தருளியுள்ள பெருமாளே.