தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன ...... தனதான
ஆல காலப டப்பைம டப்பியர்
ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர்
யாவ ராயினு நத்திய ழைப்பவர் ...... தெருவூடே
ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர்
பேசி யாசைகொ டுத்தும ருட்டிகள்
ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர் ...... பலரூடே
மாலை யோதிவி ரித்துமு டிப்பவர்
சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள்
வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள் ...... உறவாலே
மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள்
காம போகவி னைக்குளு னைப்பணி
வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி ...... லுழல்வேனோ
மேலை வானொரு ரைத்தச ரற்கொரு
பால னாகியு தித்தொர்மு நிக்கொரு
வேள்வி காவல்ந டத்திய கற்குரு ...... அடியாலே
மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்
மாது தோள்தழு விப்பதி புக்கிட
வேறு தாயட விக்குள்வி டுத்தபி ...... னவனோடே
ஞால மாதொடு புக்கவ னத்தினில்
வாழும் வாலிப டக்கணை தொட்டவ
னாடி ராவண னைச்செகு வித்தவன் ...... மருகோனே
ஞான தேசிக சற்குரு உத்தம
வேல வாநெரு வைப்பதி வித்தக
நாக மாமலை சொற்பெற நிற்பதொர் ...... பெருமாளே.
- ஆலகால படப் பை மடப்பியர் ஈர வாள் அற எற்றும்
விழிச்சியர்
ஆலகால விஷத்தை உடைய பாம்பின் படம் போன்ற பெண்குறியை உடைய இளம் மாதர்கள். கொழுப்பு ஈரம் கொண்ட வாள் போல மிகவும் தாக்க வல்ல கண்களை உடையவர். - யாவராயினும் நத்தி அழைப்பவர் தெரு ஊடே ஆடி ஆடி
நடப்பது ஒர் பிச்சியர்
யாராக இருந்தாலும் விரும்பி அழைப்பவர்கள். தெருவின் மத்தியில் ஆடி ஆடி நடக்கும் பித்துப் பிடித்தவர்கள். - பேசி ஆசை கொடுத்து மருட்டிகள் ஆசை வீசி அணைக்கும்
முலைச்சியர் பலர் ஊடே மாலை ஓதி விரித்து முடிப்பவர்
தங்கள் பேச்சு வன்மையால் ஆசை காட்டி மயக்குபவர்கள். ஆசை வலையை வீசி அணைக்கின்ற மார்பினர். பலர் மத்தியிலும் மாலை அணிந்த கூந்தலை அவிழ்த்து முடிப்பவர். - சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள் வாசம் வீசு மணத்தில்
மினுக்கிகள் உறவாலே
புடவை கீழே தாழும்படி தளர்த்தி இடுப்பில் சுற்றுபவர்கள். வாசனை வீசும் நறுமணம் கொண்டு மினுக்குபவர்கள். இத்தகைய விலைமாதர்களின் தொடர்பால், - மாயை ஊடு விழுத்தி அழுத்திகள் காம போக வினைக்குள்
உனைப் பணி வாழ்வு இலாமல் மலச் சனனத்தினில்
உழல்வேனோ
மாயையின் உள்ளே விழும்படிச் செய்து அழுத்துபவர்களின் காம போகச் செயல்களில் ஈடுபட்டதாலே, உன்னைப் பணியும் நல் வாழ்வு இல்லாமல் மும்மலங்களுக்கு ஈடான பிறப்பில் அலைவேனோ? - மேலை வானொர் உரைத் தசரற்கு ஒரு பாலனாகி உதித்து
ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ(க்) கற்கு உரு
அடியாலே மேவியே
மேல் உலகத்தில் உள்ள தேவர்கள் புகழ்ந்த தசரதற்கு ஒரு குழந்தையாகப் பிறந்து, ஒப்பற்ற விசுவாமித்திர முனிவருக்கு ஒரு யாகத்தில் காவல் புரிந்து, அந்த கல்லைத் திருவடியினால் (மிதித்துப்) பழைய வடிவத்தை (அகலிகை) எய்தும்படிச் செய்து, - மிதிலைச் சிலை செற்று மின் மாது தோள் தழுவிப் பதி
புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே
ஞால மாதொடு புக்கு
மிதிலையில் சனகர் முன் (சிவதனுசு என்ற) வில்லை முறித்து ஒளி பொருந்திய சீதையை மணம் புரிந்து அயோத்தி நகருக்குத் திரும்பி வந்து, மாற்றாந் தாயாகிய கைகேயி காட்டுக்குள் போகும்படிச் செய்ய, தம்பியாகிய இலக்குவனுடன் பூதேவி மகளாம் சீதையோடு சென்று, - அ(வ்)வனத்தினில் வாழும் வாலி படக் கணை தொட்டவன்
நாடி ராவணனைச் செகுவித்தவன் மருகோனே
அந்தக் காட்டில் வாழ்ந்த வாலி இறக்கும்படி அம்பைச் செலுத்தியவனும், தேடிச் சென்று இராவணனை அழித்தவனுமாகிய ராமனின் மருகனே, - ஞான தேசிக சற் குரு உத்தம வேலவா நெருவைப்பதி*
வித்தக நாக மா மலை சொற் பெற நிற்பது ஒர் பெருமாளே.
ஞான தேசிகனே, சற் குருவே, உத்தமனனாவனே, வேலவனே, நெருவூரில் வீற்றிருக்கும் ஞான மூர்த்தியே, திருச்செங்கோட்டில்** புகழ் பெற விளங்கி நிற்கும் பெருமாளே.