திருப்புகழ் 596 வருத்தம் காண (திருச்செங்கோடு)

தனத்தந் தான தானன தனத்தந் தான தானன
தனத்தந் தான தானன ...... தனதான
வருத்தங்  காண  நாடிய  குணத்தன்  பான  மாதரு 
மயக்கம்  பூண  மோதிய  ......  துரமீதே 
மலக்கங்  கூடி  யேயின  வுயிர்க்குஞ்  சேத  மாகிய 
மரிக்கும்  பேர்க  ளோடுற  ......  வணியாதே 
பெருத்தும்  பாவ  நீடிய  மலத்தின்  தீமை  கூடிய 
பிறப்புந்  தீர  வேயுன  ......  திருதாளே 
பெறத்தந்  தாள  வேயுயர்  சுவர்க்கஞ்  சேர  வேயருள் 
பெலத்தின்  கூர்மை  யானது  ......  மொழிவாயே 
இரத்தம்  பாய  மேனிக  ளுரத்துஞ்  சாடி  வேல்கொடு 
எதிர்த்துஞ்  சூரர்  மாளவெ  ......  பொரும்வேலா 
இசைக்குந்  தாள  மேளமெ  தனத்தந்  தான  தானன 
எனத்திண்  கூளி  கோடிகள்  ......  புடைசூழத் 
திருத்தன்  பாக  வேயொரு  மயிற்கொண்  டாடி  யேபுகழ் 
செழித்தன்  பாக  வீறிய  ......  பெருவாழ்வே 
திரட்சங்  கோடை  வாவிகள்  மிகுத்துங்  காவி  சூழ்தரு 
திருச்செங்  கோடு  மேவிய  ......  பெருமாளே. 
  • வருத்தம் காண நாடிய குணத்து அன்பான மாதரும்
    வருத்தம் உண்டாகும் வழியையே தேடும் குணத்தில் ஈடுபட்ட மாதர்களும்
  • மயக்கம் பூண மோதிய துரம் ஈதே
    மயக்கம் கொள்ளும்படி அவர்களோடு உறவாடும் சுமையே இவ்வுடலாகும்.
  • மலக்கம் கூடியேயின உயிர்க்கும் சேதமாகிய மரிக்கும் பேர்களோடு உறவு அணியாதே
    துன்பங்களோடு கூடிப் பொருந்திய, உயிர்கள் (நற்கதி காணாது) கேடு அடையச் செய்யும், சாகப்போகும் மக்களுடைய உறவை நான் மேற்கொள்ளாமல்,
  • பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்பும் தீரவே
    பெருத்து வளரும் பாவம் மிக்க (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களின் கொடுமை கூடிய பிறப்பு ஒழியவே,
  • உனது இரு தாளே பெறத் தந்து ஆளவே
    உனது திருவடிகளைப் பெறுமாறு எனக்குத் தந்து, என்னை ஆண்டருள்வாயாக.
  • உயர்ச் சுவர்க்கம் சேரவே அருள் பெலத்தின் கூர்மையானது மொழிவாயே
    மேலான சுவர்க்கத்தை நான் சேர்வதற்காக நீ அருள் புரியும் சக்தியின் நுண் பொருளை எனக்கு மொழிந்தருளுக.
  • இரத்தம் பாய மேனிகள் உரத்தும் சாடி வேல் கொடு எதிர்த்தும் சூரர் மாளவே பொரும் வேலா
    இரத்தம் பெருகிப் பாய உடலிலும் மார்பிலும் தாக்கி, வேலைக் கொண்டு எதிர்த்தும் அசுரர்கள் இறந்து பட போர் புரிந்த வேலனே,
  • இசைக்கும் தாள மேளமே தனத்தந் தான தானன எனத் திண் கூளி கோடிகள் புடை சூழ
    ஒலிக்கின்ற தாளமும் மேளமும் தனத்தந் தான தானன என்ற ஒலியை எழுப்ப, வலிய கோடிக் கணக்கான பூத கணங்கள் பக்கங்களில் சூழ,
  • திருத்த அன்பாகவே ஒரு மயில் கொண்டாடியே புகழ் செழித்து அன்பாக வீறிய பெரு வாழ்வே
    மிகவும் அன்புடன் ஒப்பற்ற மயிலை விரும்பி, புகழ் ஓங்கி வளர்ந்து அன்பே உருவாக விளங்கும் பெருஞ் செல்வமே,
  • திரள் சங்கு ஓடை வாவிகள் மிகுத்தும் காவி சூழ் தரு
    திரண்ட சங்குகளும், நீர் நிலைகளும், குளங்களும் மிகுத்து, கருங் குவளை மலர்கள் சூழ்ந்து மலரும்
  • திருச்செங்கோடு மேவிய பெருமாளே.
    திருச் செங்கோடு* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com