தந்த தத்தத் தந்த தத்தத்
தந்த தத்தத் தந்த தத்தத்
தந்த தத்தத் தந்த தத்தத் ...... தனதான
பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத்
தும்ப றுத்திட் டின்று நிற்கப்
புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் ...... கறியாமே
பொங்கி முக்கிச் சங்கை பற்றிச்
சிங்கி யொத்தச் சங்க டத்துப்
புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட் ...... கொடியார்மேல்
துன்று மிச்சைப் பண்ட னுக்குப்
பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத்
தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப் ...... பதிமீதே
தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக்
கண்டு பற்றத் தண்டை வர்க்கத்
துங்க ரத்தப் பங்க யத்தைத் ...... தருவாயே
குன்றெ டுத்துப் பந்த டித்துக்
கண்சி வத்துச் சங்க ரித்துக்
கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச் ...... சுரலோகா
கொம்பு குத்திச் சம்ப ழுத்தித்
திண்ட லத்திற் றண்டு வெற்பைக்
கொண்ட முக்கிச் சண்டை யிட்டுப் ...... பொரும்வேழம்
சென்று ரித்துச் சுந்த ரிக்கச்
சந்த விர்த்துக் கண்சு கித்துச்
சிந்தை யுட்பற் றின்றி நித்தக் ...... களிகூருஞ்
செண்ப கத்துச் சம்பு வுக்குத்
தொம்ப தத்துப் பண்பு ரைத்துச்
செங்கு வட்டிற் றங்கு சொக்கப் ...... பெருமாளே.
- பொன்றலைப் பொய்க்கும் பிறப்பைத் தும்பு அறுத்திட்டு
இறத்தல் கூடியதாய், பொய்யாக முடியும் பிறப்பு என்பதை இணைக்கும் கயிற்றை அறுத்துத் தள்ளி, - இன்று நிற்கப் புந்தியில் சற்றும் குறிக்கைக்கு அறியாமே
இன்று ஓர் ஒழுக்கத்தில் நிற்க புத்தியில் கொஞ்சமேனும் கவனித்து மேற்கொள்ள அறியாமல், - பொங்கி முக்கிச் சங்கை பற்றிச் சிங்கி ஒத்தச் சங்கடத்துப்
புண் படைத்துக் கஞ்ச மைக் கண் கொடியார் மேல்
காய்ந்து கொதித்தும், முயற்சிகள் செய்தும், சந்தேகம் கொண்டும், விஷம் போன்ற துன்பங்களால் மனம் புண்ணாகி, தாமரை போன்ற, மை பூசிய கண்ணைக் கொண்ட, விலைமாதர்கள் மீது, - துன்றும் இச்சைப் பண்டனுக்குப் பண்பு அளித்துச்
சம்ப்ரமித்து
பொருந்தி நெருங்கும் ஆசைப் பாத்திரனாகிய எனக்கு நற்குணத்தைக் கொடுத்து சிறப்பு அடையச் செய்து, - தும்பி பட்சிக்கும் ப்ரசச் செய்ப்பதி மீதே தொண்டு பட்டுத்
தெண்டனிட்டு
வண்டு உண்ணும் தேன் கொண்ட (பூந்தாதுகள் உள்ள) வயலூர் என்னும் தலத்தில் தொண்டு செய்யும் பணியை மேற்கொண்டு, - கண்டு பற்றத் தண்டை வர்க்கத் துங்க ரத்தப் பங்கயத்தைத்
தருவாயே
நான் பார்த்துப் பற்றுவதற்கு தண்டை, சிலம்பு முதலியவற்றை அணிந்தவையும், பரிசுத்தமான செந்நிறமுள்ளவையுமான திருவடித் தாமரையை தந்து அருள்க. - குன்று எடுத்துப் பந்தடித்துக் கண் சிவத்துச் சங்கரித்துக்
கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இச் சுர லோகா
கிரவுஞ்ச கிரியை எடுத்து பந்தைத் தூக்கி எறிவது போல் எடுத்து எறிந்து கண் சிவக்கக் கோபித்து அழித்து, (கைம்மாறு கருதாது உதவும்) மேகம் போல் இந்திரனுக்கு ஈந்த தேவ லோகத்தவனே, - கொம்பு குத்திச் சம்பு அழுத்தித் திண் தலத்தில் தண்டு
வெற்பைக் கொண்டு அமுக்கிச் சண்டை இட்டுப் பொரும்
வேழம்
கொம்பால் குத்தியும், சம்பங்கோரை போன்ற நுனியால் அழுத்தியும், திண்ணிய இப்பூமியில் கதையையும் மலையையும் சேர்த்து அடக்கிப் போர் புரிந்த (கயாசுரன் என்ற) யானையை - சென்று உரித்துச் சுந்தரிக்கு அச்சம் தவிர்த்துக் கண் சுகித்துச்
சிந்தையுள் பற்று இன்றி நித்த(ம்) களி கூரும்
சென்று தாக்கி தோலை உரித்து*, அழகிய பார்வதி தேவிக்கு பயத்தை நீக்கி, கண் களிப்புடன் மனதில் பற்று ஒன்றும் இல்லாமல் தினமும் மகிழ்ச்சி கொள்ளும், - செண்பகத்துச் சம்புவுக்குத் தொம் பதத்துப் பண்பு உரைத்து
செண்பக மலர் அணியும் சம்புவாகிய சிவபெருமானுக்கு தத்வம் அசி என்னும் வேத வாக்கியத்தில் த்வம் என்னும் சொல்லுக்கு (குருவாக நின்று) விளக்க இயல்பை எடுத்து விளக்கி, - செங்குவட்டில் தங்கு சொக்கப் பெருமாளே.
திருச்செங்கோட்டில்** உறையும் அழகிய பெருமாளே.