தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
நீலமஞ் சானகுழல் மாலைவண் டோடுகதி
நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை
நீலபொன் சாபநுத லாசையின் தோடசையு
நீள்முகந் தாமரையி னார்மொழிந் தாரமொழி
நேர்சுகம் போலகமு கானகந் தாரர்புய
நேர்சுணங் காவிகிளை யேர்சிறந் தார்மலையி ...... ரண்டுபோல
நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை
நீடலங் காரசர மோடடைந் தார்மருவி
நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையி
னீலவண் டேவியநல் காமனங் காரநிறை
நேசசந் தானஅல்குல் காமபண் டாரமுதை
நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர் ...... சம்பையாரஞ்
சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண
தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை
சாதிசந் தானெகின மார்பரந் தோகையென
தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி
தாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி
தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை ...... யஞ்சியோடத்
தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள்
தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகு
தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள்
தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு
சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு
தானிருந் தோதஇரு வோரகம் பேறுறுக ...... விஞ்சைதாராய்
சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை
தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல
தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை
தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய்
தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை
தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும் ...... விந்தையோனே
சூரசங் காரசுரர் லோகபங் காவறுவர்
தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை
தோளகண் டாபரம தேசிகந் தாவமரர்
தோகைபங் காஎனவே தாகமஞ் சூழ்சுருதி
தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர்
சோரிகொண் டாறுவர வேலெறிந் தேநடன ...... முங்கொள்வேலா
மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு
வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு
மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு
மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர்
மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு
மார்பகன் காணமுடி யோனணங் கானமதி ...... யொன்றுமானை
மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை
வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச
வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண
வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி
மாதுபங் காமறைகு லாவுசெங் கோடைநகர்
வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ் ...... தம்பிரானே.
- நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி நீடு பந்தாடு
விழியார் பளிங்கான நகை நீல பொன் சாப நுதல் ஆசையின்
தோடு அசையு(ம்) நீள் முகம் தாமரையினார்
கரிய மேகம் போன்ற கூந்தலில் உள்ள மாலையில் வண்டுகள் மொய்க்கின்ற நிலையும், நீளமான பந்து ஆடுவதைப் போல (அங்குமிங்கும் புரளும்) கண்களை உடையவர்கள். பளிங்கு போல் வெண்மையான பற்களும், கறுத்த அழகிய வில் போன்ற புருவமும் பொன்னாலாகிய தோடு என்னும் அணி கலன் அசைகின்ற ஒளி கொண்ட முகம் என்ற தாமரையும் விளங்குபவர்கள். - மொழிந்து ஆர மொழி நேர் சுகம் போல கமுகான கந்தாரர்
புய(ம்) நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் மலை
இரண்டு போல நீள் இபம் கோடு இள நீர் தேன் இருந்த
ஆர முலை நீடு அலங்கார சரமோடு அடைந்தார்
பேசுகின்ற நிறைந்த பேச்சுக்கள் கிளியின் மொழியை நிகர்ப்பவர். கமுகை ஒக்கும் கழுத்தை உடையவர்கள். தோள்கள் அவற்றில் படிந்த தேமலோடு வாசனையுடன் மூங்கிலின் அழகைக் கொண்ட சிறப்பினர். இரு மலைகளைப் போல நீண்ட யானைக் கொம்பு, தேனைப் போல் இனிக்கும் இளநீர் போன்றதும், முத்து மாலை அணிந்ததுமான, மார்பகத்தார். நீண்ட அலங்காரமான கழுத்துச் சங்கிலியோடு கூடினவர்கள். - மருவி நீள் மணம் சாறு பொழி அவ் வ(ள்)ளம் போது
இவையில் நீல வண்டு ஏவிய நல் காமன் அங்கார(ம்) நிறை
நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு
சம்போகர்
பொருந்தியதும், மிக்க நறு மணச் சாற்றினைப் பொழிகின்றதுமான (கலவைச் சந்தனம் உள்ள) கிண்ணம் போன்ற மார்பகத்தார். (காம பாண) மலர்களுள் நீலோற்ப மலர்ப் பாணத்தை ஏவிய நல்ல மன்மதனுடைய இறுமாப்பு நிறைந்த அன்புக்கு இடமானதும், சந்ததியைத் தருகின்றதுமான பெண்குறி மூலமாக காம நிதியாகிய அமுதத்துக்கு நிகரான புணர்ச்சி அனுபவத்தைத் தருபவர். - இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு பொன்
தோகை அமை பாளிதம் சூழ் சரண தாள் சிலம்பு ஓலம்
இடவே நடந்து
நுண்ணிய இடுப்பு விளங்கி, திக்குகளில் வாய்விட்டு மின்னும் மின்னல் போன்றவர்கள். அழகு நிறைந்த பொன்னாலாகிய சரிகை இட்ட பட்டுப் புடவை சூழ்ந்துள்ள கால்களின் பாதங்களில் சிலம்பு ஒலிக்க நடந்து, - ஆன நடை சாதி சந்தான எகின(ம்) மார்பர் அம் தோகை என
தான் எழும் கோல விலை மாதர் இன்பு ஆர் கலவி தாவு
கொண்டே
அவர்களுக்கான நடை உயர்ந்த வம்சத்து அன்னம் எனவும், அழகிய மார்பராய், எழில்மிகு மயில் எனவும் எழுந்து தோன்றுபவராகிய அழகிய விலைமாதர்களின் இன்பம் நிறைந்த சேர்க்கையில் பாய்தலைக் கொண்டு, - கலிய நோய்கள் கொண்டே பிறவி தான் அடைந்து ஆழும்
அடியேன் இடம் சாலும் வினை அஞ்சி ஓட
துன்பத்தைத் தருவதான நோய்கள் நிறைந்த பல பிறவிகளை அடைந்து ஆழ்ந்து விழும் அடியேனிடத்தில் நிரம்பி வரும் வினை பயந்து நீங்குவதற்காக, - தார் கடம்பு ஆடு கழல் பாத செந்தாமரைகள் தாழ் பெரும்
பாதை வழியே படிந்தே வருகு தாபம் விண்டே அமுத வாரி
உண்டே பசிகள் தாபமும் தீர
கடப்ப மாலை அசைகின்ற கழல் அணிந்த பாதத் தாமரைகளை விரும்பி, அந்தப் பெரிய திருவடியை விரும்பும் நெறியில் ஆழ்ந்து பொருந்தி, அடுத்து வரும் தாகங்களை (ஆசைகளை) ஒழித்து, அருளமுத வெள்ளத்தைப் பருகி, பசியும் தாகமும் நீங்குவதற்காக, - துகிர் போல் நிறம் காழ் கொள் உரு சாரவும் சோதி முருகா
எனும் காதல் கொடு தான் இருந்து ஓத இரு ஓர் அகம் பேறு
உறுக விஞ்சை தாராய்
பவளம் போல் நிறமும் ஒளி கொண்ட உருவமும் பொருந்த ஜோதி முருகா எனக் கூறும் ஆசை ஒன்றையே கொண்டு நான் மன அமைதியுடன் இருந்து ஓத, பெருமை வாய்ந்த ஒப்பற்ற உள்ளம் பேறு பெறும்படியான ஞானத்தைத் தந்து அருளுக. - சூலி எம் தாய் கவுரி மோக சங்காரி குழை தோடு கொண்டு
ஆடு சிவகாம சுந்தாரி ந(ல்)ல தூள் அணைந்து ஆளி
நிருவாணி அம் காளி
திரி சூலத்தை ஏந்தியவள், எனது தாய் கெளரி, ஆசையை அகற்றுபவள், குண்டலங்களும் தோடும் பூண்டு நடனமாடும் சிவகாம சுந்தரி, நல்ல திருநீற்றைத் தரித்து ஆள்பவள், திகம்பரி, அழகிய காளி, - கலை தோகை செந்தாமரையின் மாது நின்றே துதி செய் தூய
அம்பா கழை கொள் தோளி பங்காள க்ருபை தோய் பரன்
சேய் எனவுமே பெரும் பார் புகழும் விந்தையோனே
கலை மகளும், செந்தாமரையில் வீற்றிருக்கும் லக்ஷ்மியும் நின்று துதிக்கின்ற பரிசுத்தமான தாய், மூங்கில் போன்ற தோளை உடையவள் (ஆகிய பார்வதியை) பாகத்தில் உடையவராய் திருவருள் நிறைந்தவராகிய பரமசிவனுடைய குழந்தை என்று பெரிய உலகத்தோர் புகழும் விசித்திர தேவனே, - சூர சங்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா
குமர வேள் கடம்பு ஆர தொடை தோள கண்டா பரம தேசிக
அந்தா அமரர் தோகை பங்கா எனவே
சூரனை அழித்தவனே, தேவலோகத்துக்கு வேண்டியவனே, ஆறு (கார்த்திகை) மாதர்களின் குழந்தையே, குமார வேளே, கடப்ப மலர் நிறைந்த மாலை அணிந்துள்ள வீரனே, சிவபெருமானுக்கு குருவாகிய அழகனே, தேவ மகள் (தேவயானையின்) கணவனே எனறெல்லாம் - வேத ஆகமம் சூழ் சுருதி தோதகம் பாட மலை ஏழு துண்டாய்
எழுவர் சோரி கொண்டு ஆறு வர வேல் எறிந்தே நடனமும்
கொள் வேலா
வேதங்களையும், ஆகமங்களையும் ஆய்ந்த தேவர்களின் (முறையீட்டு) ஒலி (சூரனிடம் தாங்கள் படும்) வருத்தத்தைப் பாட, எழு கிரிகளும் துண்டாகப் பொடிபட (அந்த மலைகளில்) எழுந்திருந்த அசுரர்களின் ரத்தம் பெருகி ஆறாக வர, வேலாயுதத்தைச் செலுத்தி நடனமும் கொண்ட வேலனே, - மாலியன் பாற ஒரு ஆடகன் சாக மிகு வாலியும் பாழி
மரமோடு கும்பாகனனும் ஆழியும் கோர வலி இராவணன்
பாற விடும் ஆசுகன் கோல முகிலோன்
(ராவணன் பாட்டனும், தலைமை அமைச்சனுமாகிய அரக்கன் - மாலியன்) இறக்கவும், ஒப்பற்ற இரணியன் சாகவும், வலிமை மிக்க வாலியும், பருத்த மராமரத்தோடு அழியவும், கும்பகர்ணனும், கடலும், பயங்கரமான வலிமை கொண்டிருந்த ராவணனும் அழியவும் எய்த அம்பைக் கொண்டவன், அழகிய மேக நிறத்தினன், - உகந்து ஓதி இடையர் மாதுடன் கூடி விளையாடு(ம்)
சம்போக திரு மார்பகன் காண முடியோன் அணங்கான மதி
ஒன்றும் ஆனை
மன மகிழ்ச்சியுடன் இடையர் மாதர்களுடன் கூடி காம லீலைகளை அனுபவித்தவன், லக்ஷ்மியை மார்பில் கொண்டவன், பொன் முடியோனாகிய திருமாலின் மகளான அறிவு நிறைந்த தேவயானையின் - மார்புடன் கோடு தன பாரமும் சேர இடை வார் துவண்டு
ஆட முகமோடு உகந்து ஈர ரச வாய் இதம் கோதி மணி
நூபுரம் பாட மண ஆசை கொண்டாடும் மயிலாளி துங்கா
குறவி மாது பங்கா
மார்பும், மலை போன்ற மார்பகப் பாரமும் பொருந்த, இடையின் நுண்மை நெகிழ்ந்து அசைய, அவளுடைய திருமுகத்தில் மகிழ்ச்சி உற்று, கருணையுடன், வாயினின்று இனிமையாக வரும் இதழ் ஊறலைச் சிறிது சிறிதாகப் பருகி, ரத்தினச் சிலம்பு ஒலிக்க அவளை மணக்கும் காதலைப் பாராட்டும் மயிலோனே, பரிசுத்தமானவனே, குற மாதாகிய வள்ளியின் கணவனே, - மறை குலாவு செம் கோடை நகர் வாழ வந்தாய் கரிய மால்
அயன் தேவர் புகழ் தம்பிரானே.
வேத முழக்கம் கேட்கும் திருச்செங்கோட்டு* நகரில் வாழ வந்தவனே, கரிய திருமாலும், பிரமனும், அமரர்களும் புகழும் தம்பிரானே.