திருப்புகழ் 594 மந்தக் கடைக்கண் (திருச்செங்கோடு)

தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன
தந்தத் தனத்தந் தாத்தன ...... தனதான
மந்தக்  கடைக்கண்  காட்டுவர்  கந்தக்  குழற்பின்  காட்டுவர் 
மஞ்சட்  பிணிப்பொன்  காட்டுவ  ......  ரநுராக 
வஞ்சத்  திரக்கங்  காட்டுவர்  நெஞ்சிற்  பொருத்தங்  காட்டுவர் 
வண்பற்  றிருப்புங்  காட்டுவர்  ......  தனபாரச் 
சந்தப்  பொருப்புங்  காட்டுவர்  உந்திச்  சுழிப்புங்  காட்டுவர் 
சங்கக்  கழுத்துங்  காட்டுவர்  ......  விரகாலே 
சண்டைப்  பிணக்குங்  காட்டுவர்  பண்டிட்  டொடுக்கங்  காட்டுவர் 
தங்கட்  கிரக்கங்  காட்டுவ  ......  தொழிவேனோ 
பந்தித்  தெருக்கந்  தோட்டினை  யிந்துச்  சடைக்கண்  சூட்டுமை 
பங்கிற்  றகப்பன்  தாட்டொழு  ......  குருநாதா 
பைம்பொற்  பதக்கம்  பூட்டிய  அன்பற்  கெதிர்க்குங்  கூட்டலர் 
பங்கப்  படச்சென்  றோட்டிய  ......  வயலூரா 
கொந்திற்  புனத்தின்  பாட்டிய  லந்தக்  குறப்பெண்  டாட்டொடு 
கும்பிட்  டிடக்கொண்  டாட்டமொ  ......  டணைவோனே 
குன்றிற்  கடப்பந்  தோட்டலர்  மன்றற்  ப்ரசித்தங்  கோட்டிய 
கொங்கிற்  றிருச்செங்  கோட்டுறை  ......  பெருமாளே. 
  • மந்தக் கடைக் கண் காட்டுவர் கந்தக் குழல் பின் காட்டுவர் மஞ்சள் பிணிப் பொன் காட்டுவர்
    மெதுவாக கடைக் கண்ணைக் காட்டுவர். நறு மணம் வீசும் கூந்தலை பின்னர் காட்டுவர். மஞ்சள் நிறத்திலுள்ள பொன் அணிகலன்களைக் காட்டுவர்.
  • அநுராக வஞ்சத்து இரக்கம் காட்டுவர் நெஞ்சில் பொருத்தம் காட்டுவர் வண் பல் திருப்பும் காட்டுவர் தன பாரச் சந்தப் பொருப்பும் காட்டுவர் உந்திச் சுழிப்பும் காட்டுவர் சங்கக் கழுத்தும் காட்டுவர்
    காமப் பற்று உள்ளவர்கள் போல் வஞ்சனை செய்து தங்கள் இரக்கத்தைக் காட்டுவர். மனதில் அன்பு உள்ளவர்கள் போல் காட்டுவர். வளப்பம் மிக்க வெண்பற்களின் பாகங்களைக் காட்டுவர். மார்பாகிய பாரமுள்ள அழகிய மலையையும் காட்டுவர். கொப்பூழின் சுழியைக் காட்டுவர். சங்கு போன்ற கழுத்தைக் காட்டுவர்.
  • விரகாலே சண்டைப் பிணக்கும் காட்டுவர் பண்டு இட்ட(ம்) ஒடுக்கம் காட்டுவர் தங்கட்கு இரக்கம் காட்டுவது ஒழிவேனோ
    தந்திரமாக சண்டையிட்டு ஊடுதலையும் காட்டுவர். முதலில் காட்டிய நேசம் ஒடுங்குதலைக் காட்டுவர் ஆகிய பொது மகளிர்பால் அன்பு காட்டுவதை விட மாட்டேனோ?
  • பந்தித்து எருக்கம் தோட்டினை இந்துச் சடைக் கண் சூட்டு உமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா
    கட்டப்பட்ட எருக்கம் பூவை நிலவு அணிந்த சடையின் கண் சூடுபவரும், உமா தேவியைப் பாகத்தில் உடையவருமான தந்தையாகிய சிவ பெருமான் உனது திருவடியைத் தொழும் குரு நாதனே,
  • பைம்பொன் பதக்கம் பூட்டிய அன்பற்கு எதிர்க்கும் கூட்டலர் பங்கப்படச் சென்று ஓட்டிய வயலூரா
    பசும் பொன்னால் ஆய பதக்கத்தை அணிந்த அன்பர்களாகிய தேவர்களை எதிர்த்து வந்த பகைவர்களாகிய அசுரர்கள் தோல்வியுறுமாறு, சென்று அவர்களைப் புறங் காட்டி ஓடச் செய்த வயலூரனே,
  • கொந்தில் புனத்தின் பாட்டு இயல் அந்தக் குறப் பெண்டு ஆட்டொடு கும்பிட்டிடக் கொண்டாட்டமொடு அணைவோனே
    பூங்கொத்துக்கள் உள்ள தினைப் புனத்தில் பொருந்திய அந்தக் குற மகள் வள்ளியுடன் விளையாடல் செய்து, அவளைக் கும்பிடுதற்கு பெருங் களிப்புடன் தழுவியவனே,
  • குன்றில் கடப்பம் தோட்டு அலர் மன்றல் ப்ரசித்தம் கோட்டிய கொங்கில் திருச்செங்கோட்டு உறை பெருமாளே.
    மலையில் கடப்ப மலர் மலரும் வாசனை பிரசித்தத்தை வளைத்துக் கொண்ட கொங்கு நாட்டுத் திருச் செங்கோடு* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com