தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனன ...... தனதான
இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
ரியாவரு மிராவுபக ...... லடியேனை
இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு
மிலானிவ னுமாபுருஷ ...... னெனஏய
சலாபவ மலாகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுரச ...... கலலோக
சராசர வியாபக பராபர மநோலய
சமாதிய நுபூதிபெற ...... நினைவாயே
நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
நியாயப ரிபாலஅர ...... நதிசூடி
நிசாசர குலாதிப திராவண புயாரிட
நிராமய சரோருகர ...... னருள்பாலா
விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ
வியாதர்கள் விநோதமகள் ...... மணவாளா
விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை
விராலிம லைமீதிலுறை ...... பெருமாளே.
- இலாபமில் பொ(ல்)லாவுரை சொலாமன தபோதனர்
பயனற்ற பொல்லாத மொழிகளைச் சொல்லாத மனத்தை உடைய தவ முனிவர்கள் - இயாவரும் இராவுபகல் அடியேனை
எல்லோரும் இரவும் பகலும் என்னைக் குறித்து - இராகமும் விநோதமும் உலோபமுடன்மோகமும்
இவன் ஆசையும், விளையாடல்களில் இன்ப மகிழ்ச்சியும், ஈயாமைக் குணமும், காம மயக்கமும் - இலான் இவனு மாபுருஷன் எனஏய
இல்லாதவன், இவனும் ஓர் உத்தம புருஷன் எனக் கூறும் சொல் பொருந்தும்படிச் செய்து, - சலாப அமலாகர சசீதர விதாரண
இனிய குணத்தனே, தூய்மைக்கு இருப்பிடமானவனே, சந்திரனைத் தரித்தவனே* 1 , கருணை நிறைந்தவனே, - சதாசிவ மயேசுர சகலலோக சராசர வியாபக
சதாசிவமாக இருப்பவனே, மஹேஸ்வரனே, எல்லா உலகங்களிலும் உள்ள இயங்குவன - நிலைத்திருப்பன அனைத்திலும் கலந்திருப்பவனே, - பராபர மநோலய சமாதி யநுபூதிபெற நினைவாயே
பரம் பொருளே, மனம் ஒடுங்கிய சமாதியில் ஒன்றுபடும் நிலையை நான் பெறவேண்டும் என்று நீ நினைத்தருள்வாயாக. - நிலாவிரி நிலாமதி நிலாத அநில அசன
சந்திரிகை விரிந்து ஒளி செய்யும் பிறைமதியையும், நில்லாது அலைகின்ற காற்றைப் புசிக்கும் சர்ப்பமாகி - நியாயப ரிபாலஅர
தர்மத்தைப் காப்பவனான ஆதிசேஷனையும்* 2 , - நதிசூடி
கங்கைநதியையும் சூடியவரும், - நிசாசர குலாதிபதி ராவண புயாரிட
அரக்கர் குலத்துக்கு அதிபதியாகிய ராவணனுடைய தோள்கள் வருந்துமாறு* 3 செய்தவரும், - நிராமய சரோருக அரன் அருள்பாலா
நோயற்றவரும், தாமரையின் மீது அமர்ந்தவருமான சிவனார் அருளிய பாலனே, - வில் ஆசுகம் வலாரெனும் உலாச இத ஆகவ
வில்லையும் அம்பையும் வைத்துப் போர் புரிவதில் வல்லவர்கள் தாம் என்ற மகிழ்ச்சியில் போர் செய்யும் - வியாதர்கள் விநோதமகள் மணவாளா
வேடர்களின் அற்புதப் புதல்வியாகிய வள்ளியின் மணவாளனே, - விராவு வயலார்புரி சிராமலை பிரான்மலை
மேன்மைமிகு வயலூர், திரிசிராப்பள்ளி, பிரான்மலை என்னும் கொடுங்குன்றம், மற்றும் - விராலிமலைமீதிலுறை பெருமாளே.
விராலிமலையிலும்* 4 வாழ்கின்ற பெருமாளே.



