திருப்புகழ் 569 பாதாள மாதி லோக (விராலிமலை)

தானான தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன ...... தனதான
பாதாள  மாதி  லோக  நிகிலமு 
மாதார  மான  மேரு  வெனவளர் 
பாடீர  பார  மான  முலையினை  ......  விலைகூறிப் 
பாலோடு  பாகு  தேனெ  னினியசொ 
லாலேய  நேக  மோக  மிடுபவர் 
பாதாதி  கேச  மாக  வகைவகை  ......  கவிபாடும் 
வேதாள  ஞான  கீனன்  விதரண 
நாதானி  லாத  பாவி  யநிஜவன் 
வீணாள்ப  டாத  போத  தவமிலி  ......  பசுபாச 
வ்யாபார  மூடன்  யானு  முனதிரு 
சீர்பாத  தூளி  யாகி  நரகிடை 
வீழாம  லேசு  வாமி  திருவருள்  ......  புரிவாயே 
தூதாள  ரோடு  காலன்  வெருவிட 
வேதாமு  ராரி  யோட  அடுபடை 
சோராவ  லாரி  சேனை  பொடிபட  ......  மறைவேள்விச் 
சோமாசி  மார்சி  வாய  நமவென 
மாமாய  வீர  கோர  முடனிகல் 
சூர்மாள  வேலை  யேவும்  வயலியி  ......  லிளையோனே 
கூதாள  நீப  நாக  மலர்மிசை 
சாதாரி  தேசி  நாம  க்ரியைமுதல் 
கோலால  நாத  கீத  மதுகர  ......  மடர்சோலை 
கூராரல்  தேரு  நாரை  மருவிய 
கானாறு  பாயு  மேரி  வயல்பயில் 
கோனாடு  சூழ்வி  ராலி  மலையுறை  ......  பெருமாளே. 
  • பாதாளம் ஆதி லோக நிகிலமும் ஆதாரமான மேரு என வளர் பாடீர பாரமான முலையினை விலை கூறி
    பாதாளம் முதலிய உலகம் எல்லாவற்றுக்கும் ஆதாரமான மேரு மலை போல் வளர்ந்துள்ள, சந்தனம் அணிந்த பருத்த மார்பகத்தை விலை பேசி,
  • பாலோடு பாகு தேன் என இனிய சொ(ல்)லாலே அநேக மோகம் இடுபவர்
    பால், சர்க்கரை, தேன் இவை போன்ற இனிப்பான சொற்களால் நிரம்ப காம மோகத்தைத் தருபவர்களாகிய விலைமாதர்களுடைய
  • பாத(ம்) ஆதி கேசமாக வகை வகை கவி பாடும் வேதாளன் ஞான கீனன் விதரண நா தான் இலாத பாவி அநிஜவன்
    கால் முதல் கூந்தல் வரை உள்ள உறுப்புக்களை பல விதமான கவிதைகளைப் பாடும் நான் பேயன், ஞானம் குறைந்தவன், விவேகமுள்ள நாக்கே இல்லாத பாவி, உண்மை இல்லாதவன்,
  • வீண் நாள் படாத போத தவம் இலி பசுபாச வ்யாபார மூடன் யானும் உனது இரு சீர் பாத தூளியாகி நரகு இடை வீழாமலே சுவாமி திருவருள் புரிவாயே
    வாழ்நாள் வீணாள் ஆகாமல் காக்கும் அறிவும் தவமும் இல்லாதவன், உயிரைப் பற்றியும், உலகைப் பற்றியும் பேசிப் பொழுது போக்கும் பதி ஞானம் இல்லாத மூடன், இத்தகைய குணங்களை உடைய நானும் உன்னுடைய இரண்டு சிறப்பு வாய்ந்த பாதங்களின் தூளியாகும் பேறு பெற்று, அதனால் நரகில் விழாமல், சுவாமியே, திருவருள் புரிவாயாக.
  • தூதாளர் ஓடு காலன் வெருவிடவேதா முராரி ஓட அடு படைசோரா வலாரி சேனை பொடி பட
    தன்னுடைய தூதர்களோடு யமன் அஞ்சி ஓடவும், பிரமனும் திருமாலும் அஞ்சி ஓடவும், கொல்ல வல்ல படைகள் சோர்ந்து போய் இந்திரனுடைய சேனை பொடிபட்டு அழியவும்,
  • மறை வேள்வி சோமாசிமார் சிவாய நம என மா மாய வீர கோரமுடன் இகல் சூர் மாள வேலை ஏவும் வயலியில் இளையோனே
    வேத வேள்விகள், சோம யாகம் செய்யும் பெரியோர்கள் பஞ்சாக்ஷரத்தை ஓதித் துதித்து நிற்கவும், பெரிய மாயங்களும் வீரமும் கோரமும் பொருந்தி போர் செய்த சூரன் இறக்கும்படி வேலாயுதத்தைச் செலுத்திய, வயலூரில் வீற்றிருக்கும் இளையோனே,
  • கூதாள நீப நாக மலர் மிசை சாதாரி தேசி நாமக்ரியை முதல் கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை
    கூதாளப் பூ, கடப்ப மலர், சுரபுன்னை மலர் இவைகளின் மீது சாதாரி (பந்துவராளி), தேசி (தேஷ்), நாமக்ரியை (நாதநாமக்கிரியை) முதலான ஆடம்பரமான ராக இசைகளைப் பாடும் வண்டுகள் நிறைந்த சோலைகளும்,
  • கூர் ஆரல் தேரு(ம்) நாரை மருவிய கான் ஆறு பாயும் ஏரி வயல் பயில் கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே.
    நிரம்ப ஆரல் மீன்களைக் கொத்தும் நாரைகள் பொருந்திய காட்டாறுகள் பாய்கின்றனவும், ஏரிகளும் வயல்களும் நெருங்கியுள்ள கோனாடு* என்னும் நாட்டில் உள்ள விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com