திருப்புகழ் · 457வந்து வந்துவித்தூறி (சிதம்பரம்)
vandhuvandhuviththURi
தந்த தந்தனத் தான தந்ததன
தந்த தந்தனத் தான தந்ததன
தந்த தந்தனத் தான தந்ததன் ...... தந்ததான
வந்து வந்துவித் தூறி யென்றனுடல்
வெந்து வெந்துவிட் டோட நொந்துயிரும்
வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி ...... வங்களாலே
மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது
சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள
வந்து சிந்துரத் தேறி யண்டரொடு ...... தொண்டர்சூழ
எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ
சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க
னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர ...... மந்திமேவும்
எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி
சுந்த ரந்திருப் பாத பங்கயமும்
என்றன் முந்துறத் தோணி யுன்றனது ...... சிந்தைதாராய்
அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள்
சிந்தை மந்திரத் தோட கெந்தருவ
ரம்பு யன்சலித் தோட எண்டிசையை ...... யுண்டமாயோன்
அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென
வந்த வெஞ்சினர்க் காடெ ரிந்துவிழ
அங்கி யின்குணக் கோலை யுந்திவிடு ...... செங்கைவேலா
சிந்து ரம்பணைக் கோடு கொங்கைகுற
மங்கை யின்புறத் தோள ணைந்துருக
சிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்நல் ...... கந்தவேளே
சிந்தி முன்புரக் காடு மங்கநகை
கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ்
செம்பொ னம்பலத் தாடு மம்பலவர் ...... தம்பிரானே.
பத உரை · word meanings
- வந்து வந்துவித்தூறி
உலகிலே தோன்றித் தோன்றி, விந்தாகிய சுக்கிலத்தில் ஊறி ஊறி, - என்றனுடல் வெந்து வெந்துவிட்டோட நொந்து
என் உடலானது வெந்து போய் வெந்து போய், இவ்வாறு ஓடுவதனால் வாடி, - உயிரும் வஞ்சி னங்களிற் காடு கொண்டவடிவங்களாலே
உயிரும் பல பிறப்பு எடுப்பேன் என்று சபதம் செய்ததுபோல கணக்கற்ற உருவங்களை எடுத்து, - மங்கி மங்கிவிட் டேனை
அழிந்து அழிந்து போய் விட்ட என்னை, - உன்றனது சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள
உன் திருவுள்ளம் மகிழ்ச்சியுடன் ஏற்று ஆட்கொண்டருள, - வந்து சிந்துரத் தேறி யண்டரொடு தொண்டர்சூழ
நீ எழுந்தருளி, உன் யானை வாகனத்தில்* ஏறி, தேவர்களும் அடியார்களும் சூழ்ந்து வர, - எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ
எனது மாயை நிறைந்த பிறவிக்காடு பட்டழிய, - சந்தர் அண்டிசைத் தேவ ரம்பையர்
சந்தமுடன் இசை பாடியவராக அருகில் நெருங்கி வரும், பாட்டிலேவல்ல தேவ மங்கையர் - கனிந்து பந்தடித் தாடல் கொண்டுவர
பக்தியில் கனிவுற்று, பந்தடித்து நடனத்துடன் கூடிவர, - மந்திமேவும் எண்கடம்பணித் தோளும்
வண்டுகள் விரும்பி மொய்க்கும் கடப்பமாலை அணிந்த தோள்களும், - அம்பொன்முடி சுந்தரந்திருப் பாத பங்கயமும்
அழகிய பொன்முடியும், காண்போர் விரும்பும் எழிலான திருவடித் தாமரைகளும், - என்றன் முந்துறத் தோணி
என் முன்பே முற்புற நீ தோன்றி, - உன்றனது சிந்தைதாராய்
உன்னையே நினைக்கும்படியான உள்ளத்தை எனக்குத் தந்தருள்வாயாக. - அந்தரந் திகைத்தோட
விண்ணில் உள்ளார் பிரமித்து ஓட, - விஞ்சையர்கள் சிந்தை மந்திரத்தோட
வித்யாதரர்கள் மனக்கவலையுடன் ஓட, - கெந்தருவர் அம்புயன்சலித்தோட
கந்தர்வர்களும், பிரமனும் மனம் சோர்வடைந்து ஓட, - எண்டிசையை யுண்டமாயோன்
எட்டுத்திசையிலும் பரந்த பூமியை உண்ட மாயனாம் திருமாலும் - அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென
அச்சமுற்று உன் திருவடி சேவையைத் தந்து காத்தருள்க எனக் கூற, - வந்த வெஞ்சினர்க் காடெரிந்துவிழ
எதிர்த்து வந்த கோபத்தினரான அசுரர்களின் காடு போன்ற பெருங் கூட்டம் எரிபட்டு விழ, - அங்கி யின்குணக் கோலை யுந்திவிடு செங்கைவேலா
நெருப்பின் தன்மையை உடைய வேலைச் செலுத்திய செங்கை வேலனே, - சிந்துரம் பணைக் கோடு கொங்கைகுறமங்கை இன்புற
யானைத் தந்தங்கள் அனைய மார்புடைய குறத்தி வள்ளி மகிழும்படியாக, - தோள ணைந்துருக
அவளது தோள்களை அணைந்து உருகி நின்றவனே, - சிந்துரந்தனைச் சீர்ம ணம்புணர்நல் கந்தவேளே
யானை வளர்த்த தேவயானையைச் சிறப்புடன் திருமணம் செய்து கொண்ட கந்தவேளே, - சிந்தி முன்புரக் காடு மங்கநகை
முன்பு, திரிபுரங்கள் என்ற காடு சிதறுண்டு அழிய, சிரிப்பாலே பெரு நெருப்பை ஏவிய - கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ்
செந்தழலின் நிறத்தை உடையவரும், தேவர்கள் புகழும் - செம்பொனம்பலத் தாடும்
செம்பொற் சபையிலே திருநடனம் புரிந்தவருமான - அம்பலவர் தம்பிரானே.
அம்பலவாணராம் சிவபெருமானின் குருநாதத் தம்பிரானே.



